Published : 15 Sep 2019 11:00 AM
Last Updated : 15 Sep 2019 11:00 AM

போகிற போக்கில்: மரபும் நவீனமும் இணையும் புள்ளி

க்ருஷ்ணி

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை என்பது மீன்களுக்கு வேண்டுமானால் பொருந்திப்போகலாம். மனிதருக்கு அப்படியல்ல. பெற்றோரின் திறமைகள் அனைத்தும் பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை. ஆனால், ஹேமலதாவோ தந்தையின் திறமையைத் தன்னகத்தே கொண்டு தான் ஒரு மீன் குஞ்சு என்பதை நிரூபிக்கிறார்.

ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு சோழமண்டலம் ஓவிய கிராமத்தின் தலைவராகச் செயல்பட்டுவரும் ஓவியர் சேனாதிபதி குறித்த அறிமுகம் தேவையில்லை. சிறந்த கலைப் படைப்பாளியான சேனாதிபதியின் மகள் எனத் தான் அறியப்படுவது எவ்வளவு பெருமிதமோ, அதைவிடப் பெருமிதம் தான் தனித்ததொரு படைப்பாளியாக அறியப்படுவது என்ற கொள்கையோடு செயல்பட்டுவருகிறார் ஹேமலதா.

தூரிகைகளில் இருந்து உயிர்பெறுகிற ஓவியங்களையும் கல்லுக்குள் இருந்து வெளிப்படும் உருவங்களையும் பார்த்துவளர்ந்தவர் என்பதாலேயே, ஹேமலதாவுக்குச் சிறு வயதிலேயே கலைப் படைப்புகளின் மீது ஆர்வம் எழுந்தது. ஓவியங்களைவிட உலோக வார்ப்புகள் அவரைக் கவர்ந்தன. உலோகத்தில் கலைப் படைப்பை உருவாக்கும் தந்தைக்கு உதவ நேர்ந்தபோது தானும் அதுபோன்ற படைப்புகளை உருவாக்க வேண்டுமென ஹேமலதா நினைத்தார்.

“அப்பாவுக்குச் சொல்லாம நானே தனியா மெட்டல் உருவத்தை உருவாக்கினேன். செய்து முடித்த பிறகுதான் அப்பாவிடம் சொன்னேன். என் படைப்பை வாங்கவும் ஆட்கள் இருந்தாங்க. அது என் ஆர்வத்தைப் பல மடங்கா மாத்துச்சு. சின்ன சின்ன உருவங்கள் செய்வதை விட்டுவிட்டுப் பெரியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் செய்யத் தொடங்கினேன்” என்கிறார் ஹேமலதா.

சவாலே சக்தி

சிறு துளியாகத் தொடங்கிய அவரது கலைப் பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து வெள்ளமெனப் பாய்ந்துகொண்டிருக்கிறது. தன் படைப்புகளைத் தனியாகக் காட்சிப்படுத்தியதோடு நூற்றுக்கணக்கான கண்காட்சிகளில் பங்கேற்றிருக்கிறார். 1991-ல் லலித் கலா அகாடமி சார்பில் தனக்கு வழங்கப்பட்ட இளம் கலைஞருக்கான மாநில விருது, கலைத்துறை சார்ந்த தன் பொறுப்பை அதிகப்படுத்தியதாக ஹேமலதா குறிப்பிடுகிறார்.

“உலோகத்தில் உருவங்களை வடிப்பதும் வரைவதும் சவால் நிறைந்தது, அதை நீ எப்படிச் சமாளிக்கிறேன்னு பார்க்கிறவர்கள் எல்லாம் கேட்கும்போது, அந்தக் கேள்விக்காகவே தொடர்ந்து உலோகக் கலையைச் செய்யணும்னு தோணும். உலோகத்தில் உருவங்களை வடிப்பது சிரமமான வேலை. அதில் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாகச் செய்து இணைக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் நேர்த்தி இருக்காது. நான் பொதுவா ஐந்து, ஆறு உருவங்களை ஒரே நேரத்தில் செய்வேன்.

தனித்தனியா செய்வதைவிட இது கொஞ்சம் எளிது” என்று சொல்லும் ஹேமலதா புராண, இதிகாச உருவங்களைத்தான் அதிகம் விரும்பிச் செய்கிறார். அவற்றில் தன் கற்பனையையும் ஏற்றி, புது வடிவம் கொடுக்கிறார். இவரது படைப்புகளில் கிருஷ்ணனும் மயிலும் முக்கிய இடம்பிடிக்கிறார்கள். கிராமத்துச் சாயலையும் பழங்குடியினச் சாயலையும் தன் படைப்பில் இணைத்துவிடுகிறார். மரபும் புதுமையும் இணைந்த படைப்பாக அவை மாறிவிடுகின்றன.

“உலோகத்தை இணைக்க மட்டும்தான் ஒருவரது உதவியைப் பெறுகிறேன். மற்றபடி அனைத்தையும்
நானே செய்துவிடுவேன். என் படைப்புகளைப் பார்த்துவிட்டு அப்பா ஒரு முறைகூடக் குறையாகச்
சொன்னதில்லை. இதை இப்படிச் செய்யலாம் எனச் சில நேரம் ஆலோசனை சொல்வார். கலைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவரிடமிருந்து பெறும் பாராட்டுதானே படைப்பின் நேர்த்திக்குப் பரிசு” எனச் சிரிக்கும் ஹேமலதா, தான் வரைந்த ஓவியங்களையும் உலோகப் படைப்புகளையும் சமீபத்தில் சென்னையில் காட்சிப்படுத்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x