Published : 15 Sep 2019 11:03 AM
Last Updated : 15 Sep 2019 11:03 AM

பெண்கள் 360: பெண்கள் நடத்தும் சந்தை

தொகுப்பு: முகமது ஹுசைன்

தமிழகம் முழுவதும் சுய உதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகளுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது. குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை விற்பனையாகும் சந்தையாக இது வளர்ச்சி பெற்றுள்ளது. பொருட்களை விற்கும் எல்லா வியாபாரிகளும் பெண்களாக இருப்பதே இதன் சிறப்பு.

சந்தை நேரத்தில் பாரம்பரிய உணவு சமையல் நிகழ்ச்சி, இயற்கை மருத்துவரோடு உரையாடல் போன்றவையும் நடத்தப்படுகின்றன. வரவு, செலவு, வியாபார நுட்பம் போன்றவற்றில் பெண்களாலும் தனித்து இயங்க முடியும் என்பதைச் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த இந்தப் பெண்கள் நிரூபிக்கின்றனர்.

விளையாட்டைப் பார்க்கவும் பெண்களுக்குத் தடை

ஈரான் நாட்டில் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குப் பெண்களுக்கு 1981-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. அந்நாட்டில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இதை எதிர்த்துவருகின்றன. இந்நிலையில் சஹர் கோடயாரி என்ற பெண், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்மீது வழக்கும் தொடரப்பட்டது.

இதை எதிர்த்து அவர் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்கள் விண்வெளியை அடைந்துவிட்டனர் என நாம் மார்தட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், தாங்கள் விரும்பிய விளையாட்டை நேரில் கண்டு ரசிக்கக்கூடப் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுக்கக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

நீதி கிடைக்குமா?

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் (72) உத்தரப் பிரதேசத்தில் சட்டக் கல்லூரியை நடத்திவருகிறார். அதில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவி ஒருவர் மார்ச் 23-ம் தேதி, சின்மயானந்த் தன்னைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் வெளியே சொன்னால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வீடியோ வெளியிட்டார். அதன் பிறகு அந்த மாணவியைக் காணவில்லை. மாயமான மாணவி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி, “சுவாமி சின்மயானந்த் என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார்.

என்னைப் போலவே ஏராளமான இளம்பெண்களையும் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறார். ஆனால், நான் மட்டுமே தைரியமாக எதிர்த்து நிற்கிறேன். சின்மயானந்த் செய்த குற்றங்களுக்கான வீடியோ ஆதாரம் என்னிடம் நிறைய இருக்கிறது. இதைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையிலும் சொன்னேன்.
ஆனால், சின்மயானந்த் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

குடிக்கு எதிராக ஆரத்தி எடுத்த பெண்கள்

சென்னை ஆவடியில் அடுத்தடுத்துச் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடிப்பவர்களுக்கும் டாஸ்மாக் கடைக்கும் ஆரத்தி எடுத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ரயில்வே சாலையில் டாஸ்மாக் கடை இருப்பதால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் செயல்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் எனவும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அரசின் காதுகளை இவர்களின் வேதனைக் குரல் எட்டுமா?

சிலம்பாட்ட வீராங்கனையின் வேதனை

மலேசியாவில் நடைபெறவுள்ள உலக சிலம்பப் போட்டிக்குத் தமிழ்ப் பெண் கீர்த்தனா தகுதிபெற்றுள்ளார். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் பயின்றுவருகிறார். ஏற்கெனவே தெற்காசிய அளவிலான சிலம்பப் போட்டியில் வெண்கலம் வென்றிருக்கிறார். அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மலேசியாவில் நடைபெறவிருக்கும் உலக சிலம்பப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார்.

போட்டிக்கான கட்டணத்தைப் பங்கேற்கும் வீரர்களே செலுத்த வேண்டும் என அனைத்திந்திய சிலம்பம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வீரரும் போட்டியில் பங்கு பெற, போக்குவரத்துச் செலவு, தங்கும் செலவு, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக 80ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். விவசாயக் கூலி குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனா, இந்தத் தொகையைச் செலுத்த முடியாமல் தவித்துவருகிறார். தன்னார்வலர்களும் அரசும் நினைத்தால் இவர்களைப் போன்ற திறமைசாலிகளின் கனவை நனவாக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x