Published : 13 Sep 2019 10:11 AM
Last Updated : 13 Sep 2019 10:11 AM

தரைக்கு வந்த தாரகை 30: எம்.ஜி.ஆர். தப்பித்தார்!

தஞ்சாவூர்க் கவிராயர்

மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் பி.யு.சின்னப்பாவுக்கு நேர்ந்த பயங்கரத்தை பானுமதி என்னிடம் விவரித்தார். “சக பெண் நடிகைகள் (பெரும்பாலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்) சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் ‘ஐயோ! அம்மா! ஒருநாள் பி.யு.சின்னப்பா படப்பிடிப்புக்கு இரண்டுநாள் தாமதமாக வந்து சேர்ந்தார். முதலாளிதான் (டி.ஆர். சுந்தரம்) கோபத்தில் துர்வாச முனிவராயிற்றே. வந்ததே கோபம். பி.யு. சின்னப்பாவை அப்படியே ஒரு மரத்தில் கட்டி வச்சு சாட்டையால் விளாசித் தள்ளிவிட்டார்! அன்று முதல் படப்பிடிப்புக்கு யாரும் தாமதமாக வருவதே இல்லை.

அதுமட்டுமல்ல.. முதலாளி முன்னால் நேருக்கு நேராக நின்று பேசும் தைரியமும் யாருக்கும் வந்தது இல்லை! ஆனால், உங்கள் மீது அவர் வைத்திருக்கிற மரியாதையை நாங்கள் பார்த்தோம். “அதனால்தான் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லி முடித்துத் தர உங்களைக் கேட்டிருக்கிறோம்’ என்றார்கள். நான், ‘பயப்படாதீர்கள் போய் வாருங்கள். இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தேன்.

பானுமதி குவாட்டர்ஸ்

டி.ஆர்.சுந்தரத்தின் கண்டிப்பும் நேரம் தவறாமையும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால், திரைப்படக் கலைஞர்களை அவர் இதுவரை மதிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது அதை அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாகவே நினைத்தேன். மறுநாள் படப்பிடிப்பு இடைவேளையில் டி.ஆர்.சுந்தரத்திடம் சினிமா பற்றிப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். என் மாமியார் பாத்ரூம் விஷயத்தை நினைவுபடுத்துகிற விதமாக என் முதுகைச் சுரண்டினார். புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டியபின் அதுதான் சமயமென்று டி.ஆர்.சுந்தரத்திடம் ‘நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் லேடி ஆர்ட்டிஸ்டுகள் சம்பந்தமாக உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கலாமா?’ என்றேன்.

‘என்ன அம்மா அது? சொல்லுங்கள்’ என்றார். ‘இப்போ லேடி ஆர்ட்டிஸ்டுகள் தங்கியிருக்கும் அறைகளில் அட்டாச்டு பாத்ரூம் இல்லை. அறையிலிருந்து வெளியே வந்து தூரத்தில் இருக்கும் ஒரு இடத்துக்குப் போக வேண்டி இருக்கு. இது அவங்களுக்கு ரொம்பவும் சங்கோஜமாக இருக்கு. உங்க ஸ்டுடியோ வளாகம் பெரிசாகத்தானே இருக்கு. இதில் ஒரு பக்கம் அட்டாச்டு பாத்ரூம்களோடு அறைகள் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். என் வேண்டுகோள் இது’ என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டதும் இத்தனை நாள் அந்த தப்பை உணராது இருந்து விட்டவர் போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘நிச்சயமாகச் செய்து விடுகிறேன்’ என்றார். அடுத்தமுறை படப்பிடிப்புக்கு நான் சேலம் சென்றபோது மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகத்தில் அட்டாச்டு பாத்ரூம்களுடன் புத்தம் புதிதாக அறைகள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்.

லேடி ஆர்ட்டிஸ்டுகள் எனக்கு நன்றி சொன்னார்கள். ‘ஒரே வார்த்தைதான் சொன்னீர்கள். மிஸ்டர் சுந்தரம் கட்டித் தந்துவிட்டார். எங்கள் கண்ணியத்தைக் காப்பாற்றிவிட்டீர்கள் அம்மா. இப்போதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கு. உங்க முயற்சியாலே நடந்ததால் இதுக்கு பானுமதி குவார்ட்டர்ஸ்னு பேர்கூட வச்சிட்டோம்’ என்றார்கள்.
இந்தமுறை நான் அந்த அறைகளில் ஒன்றில் அவர்களோடு தங்கப் போகிறேன் என்று சொன்னபோது மிஸ்டர் சுந்தரம் என்னை மிகவும் பாராட்டினார்.

மாட்டிக்கொண்ட எம்.ஜி.ஆர்

‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் சேலம் சென்றோம். சில கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவேண்டி இருந்தன. இந்த நேரத்தில் படத் தயாரிப்புக் குழுவினரிடம் ஏதோ பதற்றம் தெரிந்தது. காரணம் நான் வந்துவிட்டேன். எம்.ஜி.ஆர். வரவில்லை! அன்று முழுவதும் வரவில்லை! இந்த தகவல் டி.ஆர்.சுந்தரத்துக்கு எட்டிவிடாதபடி எல்லோரும் பார்த்துக் கொண்டார்கள்.

இரவாயிற்று எம்.ஜி.ஆர். சென்னையில் மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிதான்! பட நிறுவனம் அவரைப் போகவிடவில்லை!
படக் குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அவர்களிடம் நானாகவே சென்று ‘என்ன விஷயம்? நாளைக்கு ஷூட்டிங் இருக்கா இல்லையா?’ என்று கேட்டேன். மறுநாளும் எம்.ஜி.ஆர். வரவில்லை என்றால் என்ன செய்வது? அவர்கள் படுகிற அவஸ்தையைப் பார்த்துவிட்டு ‘இன்னும் கூடுதலாக ஒருநாள் தாமதமானாலும் பரவாயில்லை. நான் காத்திருக்கிறேன். நாளை மறுநாள் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம்’ என்றேன். அதற்கு அவர்கள் ‘மேடம் நீங்கள் பொறுத்துக்கொள்கிறீர்கள். அது உங்கள் பெருந்தன்மை. சரி, ஆனால் சுந்தரம் சார் வந்து எம்.ஜி.ஆர். எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது?’ என்று பயந்தார்கள்.

மறுநாள் படக் குழுவினர் சுந்தரம் சந்திப்பில் என்ன சொல்லி சமாளித்தார்களோ தெரியவில்லை. மாலைவரை எம்.ஜி.ஆர். வரவில்லை. ‘அலிபாபா’ ரஷ்களை போட்டுப் பார்த்துப் பொழுதைப் போக்கினேன். சென்னையிலிருந்து எம்.ஜி.ஆர். புறப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். ஆனால், என் பார்வையைத் தவிர்த்தார்கள்.
அன்று மாலை எதிர்பாராதவிதமாக மிஸ்டர் சுந்தரம் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பின்னால் படக்குழுவினர் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள். ‘பானுமதி அம்மா நமஸ்காரம்.. மன்னிக்க வேண்டும். தங்களை இரண்டு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேன். நாளை எம்.ஜி.ஆர். வரவில்லை என்றால் வேறு ஒருவரை ஹீரோவாகப் போட்டு படப்பிடிப்பைத் தொடர்வோம்’ என்றார்.
உடனே நான் ‘சார் ப்ளீஸ்.. அப்படியெல்லாம் பேசாதீர்கள். தேவைப்பட்டால் மற்ற தயாரிப்பாளர்களிடம் சொல்லிவிட்டு இன்னும் சில நாட்கள் இங்கே தங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் இங்கே இருந்து புறப்படுவேன்’ என்றேன்.

டிஸ்மிஸ் மிரட்டல்!

அப்படியும் சுந்தரம் தனது முதல்நிலை ஊழியர்களை விட்டபாடில்லை. ‘எம்.ஜி.ஆர். இன்று சாயங்காலத்துக்குள் வந்து நாளைக்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் உங்கள் எல்லோரையும் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யவேண்டி இருக்கும்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றார். அன்று மதியம் 2 மணி இருக்கும். மிஸ்டர் எம்.ஜி.ஆரை சென்னையிலிருந்து கிட்டத்தட்ட குண்டுக்கட்டாகத் தூக்கி வந்துவிட்டார்கள். கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. காலையில் நான் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் வந்தார். ‘அம்மா...உங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டேன்.

ரொம்ப ஸாரிம்மா’ என்றார். எம்.ஜி.ஆரை செட்டில் பார்த்தால் மிஸ்டர் சுந்தரத்தின் ‘எதிர்வினை’ எப்படி இருக்குமோ என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள். சுந்தரம் வந்தார் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘மிஸ்டர் ராமச்சந்திரன் இந்த தடவை உங்களை விட்டுவிடுகிறேன். நீங்கள் வரும்வரை பானுமதி அம்மா காத்துக் கிட்டிருந்தாங்க தெரியுமா? இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்’ என்றார். எம்.ஜி.ஆர். மறுபடி மன்னிப்புக் கேட்டார். என் மாமியார் முதுகைச் சுரண்டி காதருகே நல்லவேளை எம்.ஜி.ஆர் தப்பிச்சார் என்றார். ‘லைட்ஸ் ஆன்’ என்ற குரல் கேட்டது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாங்கள் படப்பிடிப்புக்குத் தயாரானோம்.

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x