Last Updated : 22 Jul, 2015 11:04 AM

 

Published : 22 Jul 2015 11:04 AM
Last Updated : 22 Jul 2015 11:04 AM

கற்பனை விலங்கு : டிராகன்- தீயைக் கக்கும் பாம்பு

ஹாலிவுட் மற்றும் அனிமேஷன் படங்களில் விநோதமான விலங்குகள் எல்லாம் திரையில் வரும். உண்மையில் அப்படி வரும் விலங்குகள் பல நிஜ விலங்குகளே கிடையாது. அவையெல்லம் கற்பனையில் உருவான விலங்குகள்தான். அப்படிக் கற்பனையில் உருவான விலங்குகளை ஒவ்வொரு வாரமும் பார்க்க உள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்த டிராகன் பற்றி இந்த வாரம் பார்ப்போமா?

புராணக் கதைகளில் தொடங்கி அனிமேஷன் சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் வரை நம்மைக் கவர்ந்துவரும் கற்பனை விலங்குகளில் ஒன்று டிராகன்.

கோயில்களில் காணப்படும் சிங்கம் போன்ற தோற்றமுடைய யாளி, அன்னப் பறவை, ஹம்சபட்சியைக் கவிஞர்களும் சிற்பிகளும் கலந்து கற்பனையில் உருவாக்கியதுதான் டிராகன்.

டிராகனைப் பார்க்கும்போது பாம்பு அளவுக்குப் பெரியதாக ஒரு பல்லி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உடல் அமைப்பைக் கொண்டிருக்கிறது டிராகன். ஆனால், ஐரோப்பியப் புராணங்களிலும் சீனா, ஜப்பான், கொரிய நாடுகளின் புராணக்கதைகளிலும் வரும் டிராகனின் தோற்றம் டினோசரஸ் விலங்கின் உருவம் போலவே இருக்கும்.

ஆங்கிலத்தில் டிராகன் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்தே வந்தது. அதன் அர்த்தம் பெரிய தண்ணீர் பாம்பு.

சீனாவில் காலம்காலமாக டிராகன்களைப் பற்றிய பல கதைகள் உலாவுகின்றன. டிராகன்களின் ரத்தம் மருத்துவப் பயன்பாட்டைக் கொண்டதாகவும் அதற்காகவே வீடுகளில் டிராகன்கள் வளர்க்கப்பட்டதாகவும்கூடக் கதைகள் உண்டு. சீன யாத்ரீகர் மார்க்கோ போலோ தனது சீனப் பயணத்தில் கராஜன் என்ற இடத்தில் இரண்டு குட்டிக் கால்களுடைய ஒவ்வொரு காலிலும் மூன்று கூர்நகங்களைக் கொண்ட பாம்புகளைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். அது டிராகன்தான் என்றும் கூறுகிறார்கள்.

டிராகன்களுக்கு சிறகுகளும் கால்களும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. அதற்கு முன்பு வரை டிராகன்கள் கால்கள் இல்லாத பாம்பைப் போன்ற விலங்காகவே கதைகளில் வரும். டிராகன்கள் தீயையும் பனியையும் சுவாசிக்கும்; தீயை உமிழும் சக்தியும் கொண்டது.

டிராகனுக்கு பெரிய சிறகுகளும், உடல் முழுக்க முதலை போலச் செதில்களும், நீண்ட வாலும் உண்டு. பெரும்பாலான கதைகளில் வரும் டிராகன்கள் தீமையான விலங்காகவே வரும்.

சில படங்களில் நல்ல டிராகன்களும் உண்டு. கதையின் நாயகர்களுக்கு உதவும்படியும் வந்திருக்கின்றன. லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் எழுதிய டோல்கினும், ஹாரிபாட்டர் ஜே.கே.ரௌலிங்கும் டிராகன்களைக் கதாபாத்திரமாக்கி உள்ளார்கள்.

சீனாவில் டிராகனின் சித்திரங்கள் வலிமையையும் அதிகாரத்தையும் அடையாளமாகக் கொண்டவை. பீனிக்ஸ் என்றழைக்கப்படும் டிராகன்கள் ஐந்து கூர்நகங்களைக் கொண்டவை. சீனாவின் பேரரசர்களைக் குறிக்கும் முத்திரையாக டிராகன்கள் இருந்துள்ளன.

கிரேக்கப் புராணங்களிலும் டிராகன்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. தீயை உமிழும் டிராகன் சிமேரா என்றும், பாம்பைப் போன்ற டிராகன்கள் டிராகோன்ஸ் என்றும் கடலில் வாழும் டிராகன் செட்டியா என்றும், பெண் டிராகன் டிரகானே என்றும் அழைக்கப்படுகின்றன.

இங்கிலாந்து புராணக்கதை ஒன்றில் அழகிய பெண்களைக் கடத்திச் சென்று கொல்லும் டிராகன் ஒன்றும் வருகிறது. மன்னரின் மகளைக் கடத்திப்போகும் அந்த டிராகனை, செயிண்ட் ஜார்ஜ் என்ற இளவரசன், மாயசக்தி கொண்ட ஆரஞ்சு மரத்தின் உதவியால் கொன்று இளவரசியை மீட்பான்.

ஜப்பானில் டிராகன்களை தண்ணீர் தெய்வங்களாகக் கும்பிடும் வழக்கம் இருந்துள்ளது. ஜப்பானியர் வழிபடும் டிராகன்களுக்கு சிறகுகள் கிடையாது. அவற்றின் ஒவ்வொரு பாதத்திலும் மூன்று கூர்மையான நகங்களைக் கொண்ட விரல்கள் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x