Published : 11 Sep 2019 11:00 AM
Last Updated : 11 Sep 2019 11:00 AM

அறிவியல் மேஜிக்: நீர்மூழ்கிக் கப்பல் எப்படி வேலை செய்கிறது?

மிது கார்த்தி

நீர்மூழ்கிக் கப்பலை நேரில் பார்த்திருக்க மாட்டீர்கள். தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கப்பல் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒரு சோதனையின் மூலம் பார்ப்போமா?

என்னென்ன தேவை?

ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்
தண்ணீர்
தாள் சுற்றப்பட்ட சாக்லெட்

எப்படிச் செய்வது?

# பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள்.
# சாக்லெட் பாக்கெட்டை பாட்டில் தண்ணீருக்குள் போடுங்கள். பிறகு பாட்டிலின் மூடியை இறுக்கமாக மூடிவிடுங்கள்.
# சாக்லெட் பாக்கெட் மேலே மிதந்துகொண்டிருக்கும். இப்போது பாட்டிலை மெல்ல அழுத்துங்கள்.
# என்ன நடக்கிறது என்று பாருங்கள். சாக்லெட் பாக்கெட் கீழ்நோக்கிச் செல்கிறதா?
# பாட்டிலை இன்னும் நன்றாக அழுத்துங்கள். சாக்லெட் பாக்கெட் அடிப்பாகத்துக்குச் சென்றுவிட்டதா?
# நீங்கள் பிளாஸ்டிக் பாட்டிலை அழுத்திக்கொண்டிருக்கும் வரை சாக்லெட் பாக்கெட் அடிப்பாகத்திலேயே இருக்கும்.
# அழுத்துவதை விட்டுவிட்டால், சாக்லெட் பாக்கெட் மீண்டும் மேலே மிதப்பதைக் காணலாம். பாட்டிலை அழுத்தும்போது அடிப்பாகத்துக்கு சாக்லெட் பாக்கெட் செல்ல என்ன காரணம்?

காரணம்

ஒரு திரவத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் கொடுக்கும் அழுத்தம், அந்தத் திரவத்தில் எல்லாத் திசைகளிலும் சமமாகப் பகிரப்படும் என்ற பாஸ்கல் விதி இந்தச் சோதனையில் பயன்படுகிறது. பாட்டிலை நீங்கள் அழுத்தியபோது, அந்த அழுத்தமானது நீரில் பரவுகிறது. அந்த நேரத்தில் தண்ணீருக்குள் மிதக்கும் சாக்லெட் பாக்கெட்டில் இருக்கும் காற்றும் அழுத்தத்துக்கு உட்பட்டு, சாக்லெட்டின் எடையைக் குறைத்துவிடுகிறது.

எடை குறையும்போது சாக்லெட்டின் நிகர அடர்த்தி அதிகமாகிவிடுகிறது. இதனால் சாக்லெட் கவர் தண்ணீரின் அடிப்பாகத்துக்குச் செல்கிறது. அழுத்துவதை விடும்போது சாக்லெட் மீண்டும் பழைய நிலையை அடைகிறது. அதனால் சாக்லெட்டின் நிகர அடர்த்தி குறைந்துவிடுகிறது. அப்போது மேல் நோக்கிய விசை அதிகமாவதால், சாக்லெட் நீரின் மேல் மட்டத்துக்கு வந்து மிதக்கத் தொடங்குகிறது.

பயன்பாடு

இந்தச் சோதனையின் தத்துவத்தில்தான் நீர்மூழ்கிக் கப்பல் செயல்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x