Published : 11 Sep 2019 10:22 AM
Last Updated : 11 Sep 2019 10:22 AM

இந்தப் பாடம் இனிக்கும் 11: ஆரோக்கியம் காக்கும் நமது மருத்துவம்

காய்ச்சல், சளி தொடங்கி எந்த உடல் பிரச்சினை என்றாலும் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்து நம் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறோம். நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கியப் பயன்களில் ஒன்று மருத்துவம். அதேநேரம் அலோபதி எனும் ஆங்கில மருத்துவர்களே இன்றைக்கு இந்தியாவில் அதிகம் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு நமது மரபு மருத்துவ முறைகளே நம் நாட்டு மக்களின் உடல்நலனைப் பேணிக் காத்து வந்தன. இன்றைக்கும் அந்த மருத்துவ முறைகள் சிறந்த பலனை அளித்து மக்களைக் காத்துவருகின்றன. இந்திய மருத்துவமுறைகளின் முக்கியத்துவம் என்ன?

சித்த மருத்துவம்

இது தமிழ் மரபு மருத்துவம். சித்தர்கள் கடைப்பிடித்து வந்ததால், இந்த மருத்துவ முறை சித்த மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர், திருமூலர், கோரக்கர், போகர் ஆகியோர் சித்த மருத்துவத்தின் முக்கிய வழிகாட்டிகள். சித்த மருத்துவ விதிகளைப் பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கியதாகக் கருதப்படுகிறது. மேலும் பல சித்தர்கள் சித்த மருத்துவத்தை வளர்த்துள்ளனர். பனையோலைச் சுவடிகள் வழியாகச் சித்த மருத்துவ முறைகள் கடத்தப்பட்டன. தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்த பிரபலமான இந்த மருத்துவ முறை, இலங்கையிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மரபு மருத்துவ முறைகளில் கையைப் பிடித்து நாடி பார்ப்பது முக்கியம். வாதம் (காற்று), பித்தம் (வெப்பம்), கபம் (நீர்) ஆகிய முக்குணங்களில் ஏற்படும் மாற்றங்களே நோயாகக் கருதப்படுகின்றன. அத்துடன் ஐம்பூதத் தத்துவம், சுவைத் தத்துவம் ஆகியவற்றை ஆராய்ந்து, மருந்தைக் கணித்து, முக்குணங்களைச் சமப்படுத்துவதே சித்த மருத்துவ முறை. மூலிகை இலை, தழைகளே முக்கிய மருந்து மூலப்பொருட்கள். தாவரங்களுடைய வேதிப்பண்புகளின் அடிப்படையிலும் சுவைத் தத்துவத்தின் அடிப்படையிலும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

அத்துடன் கனிமங்கள், உயிரினங்களிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் உலோக மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், அவை மனித உடலுக்கு உகந்தவை அல்ல என்றும் பரவலான நம்பிக்கை உள்ளது. இது ஒரு மூடநம்பிக்கை. சித்த மருத்துவத்தை மேற்கொண்டு வந்த பரம்பரைச் சித்த வைத்தியர்கள் மூலமாக இந்த மருத்துவ முறை முன்பு பரவலாக இருந்தது. தற்போது சித்த மருத்துவம் தனி மருத்துவப் படிப்பாகக் கற்பிக்கப்படுகிறது.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பதற்கு நீண்ட வாழ்க்கையைத் தரக்கூடிய முறை என்று அர்த்தம். வடஇந்தியாவில் தோன்றி வளர்ந்த இந்த மருத்துவ முறை, தெற்காசிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. சுஸ்ருதர், சரகர் ஆகிய இருவரும் எழுதிய ‘சுஸ்ருத சம்ஹிதை', ‘சரக சம்ஹிதை' ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது ஆயுர்வேதம். உலகில் முதன்முதலில் அறுவைசிகிச்சைகளைச் செய்தவர் சுஸ்ருதர். தையல், சிறுநீரகக் கல்லை வெளியே எடுத்தல், மூக்கைச் சீரமைத்தல் போன்றவை பண்டைக் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளன.

இதில் ஐம்பூதங்கள் அடிப்படையாகக் கருதப்படுகின்றன. சித்த மருத்துவத்தைப் போலவே தோஷம் (வாதம், பித்தம், கபம்) அடிப்படையிலும், சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் அடிப்படையிலும் ஆயுர்வேதம் செயல்படுகிறது. அத்துடன் தாது (உடல் வளர்ச்சிக்கு உதவுவது), மலம் (கழிவு), அக்னி (வளர்சிதை மாற்றம், செரிமானம்) ஆகிய அம்சங்கள் ஆயுர்வேத சிகிச்சையில் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

யுனானி

இது கிரேக்க - அரபி மருத்துவ முறை. யுனானி என்பதற்கு ‘கிரேக்க’ என்று அர்த்தம். மனித உடலில் காணப்படும் கோழை, ரத்தம், மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றை வரையறுத்த கிரேக்கத்தின் ‘மருத்துவத் தந்தை' ஹிப்போகிரட்டீஸ், காலன் ஆகியோர் முன்வைத்த நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது யுனானி.
கிரேக்க மருத்துவ நூல்களை அரபியர்கள் பாதுகாத்து வந்தார்கள். அத்துடன் இந்த மருத்துவ முறையை மேம்படுத்தி வளர்க்கவும் தொடங்கினார்கள். அதேநேரம் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் யுனானி மருத்துவ முறை இந்திய, சீன மரபு மருத்துவ முறைகளின் தாக்கங்களைக் கொண்டது.

அரபியர்கள், இந்தியாவில் ஆட்சி நடத்திய இஸ்லாமிய அரசர்கள், முகலாயர்கள் மூலம் இந்த மருத்துவ முறை இந்தியாவில் பரவியது. டெல்லி சுல்தான்களில் ஒருவரான அலாவுதின் கில்ஜியின் (1296-1316) அரசவையில் ஹக்கிம்கள் எனப்பட்ட யுனானி மருத்துவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். இடையில் ஆங்கிலேயர் காலத்தில் இந்த மருத்துவ முறை அரசு ஆதரவைப் பெறவில்லை. அப்போது டெல்லியில் சாரபி குடும்பத்தினர், லக்னோவில் அலி குடும்பத்தினர், ஹைதராபாத்தில் நிஜாம் குடும்பத்தினர் ஆகியோரின் முயற்சியால் யுனானி மருத்துவ முறை வளர்ந்தது.
தெற்காசிய, மத்திய ஆசிய இஸ்லாமியப் பண்பாட்டில் இந்த மருத்துவ முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி எகிப்து, சிரியா, ஈராக், ஈரான், சீனா, மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த மருத்துவ முறை பரவலாக இருந்தது.

இயற்கை மருத்துவம்

உணவுப் பொருட்கள், இயற்கைப் பொருட்களை மட்டுமே கொண்டு தரப்படும் சிகிச்சைகள் இயற்கை மருத்துவ முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, வெயில் சிகிச்சை, வாழை இலை சிகிச்சை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த மருத்துவ முறை. மனித உடல் தன்னையே சமன்செய்து நோயைக் குணப்படுத்திக்கொள்ளக்கூடிய திறன் கொண்டது.

நோய்க் காரணிகள், நச்சுத்தன்மை, தேவையற்ற கழிவு ஆகியவற்றை வெளியேற்றுவதன் மூலமாக இந்த மருத்துவம் செயல்படுகிறது. உணவுக் கட்டுப்பாடு, பிடித்துவிடுதல் (மசாஜ்), அக்குபங்சர், வண்ண சிகிச்சை, மலர் சிகிச்சை போன்றவையும் இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.
இந்திய மருத்துவ முறைகள் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் தற்போது நிர்வகிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாரம்:

எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில், ‘உடலை ஓம்புமின்’ என்ற இயலின்கீழ் ‘தமிழர் மருத்துவம்’ என்ற உரைநடை உலகம் பகுதி.

- ஆதி

கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x