Published : 10 Sep 2019 11:20 AM
Last Updated : 10 Sep 2019 11:20 AM

இந்தியாவை முன்நகர்த்திய பொறியாளர்கள்

ச. கோபாலகிருஷ்ணன்

பொறியாளர் நாள்: செப். 15

இந்தியாவில் பல்வேறு முக்கிய அணைகளைக் கட்டிய பொறியாளரான மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளே, தேசியப் பொறியாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய வரலாற்றிலும் இந்திய மக்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்திய, இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னோடிப் பொறியாளர்கள் சிலரை அறிந்துகொள்வோம்.

சர் ஆர்தர் தாமஸ் காட்டன் (1803-1899)

இங்கிலாந்தில் பிறந்த இவர் 1821இல் பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளராக மதராஸ் மாகாணத்தை வந்தடைந்தார். இன்றைய தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலப் பகுதிகளில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுத்தவர். காவிரி பாசனப் பகுதியில் தடுப்பணைகள், அணைகளைக் கட்டி டெல்டா மாவட்டங்களை வளம் கொழிக்கும் வேளாண் பகுதியாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

அதேபோல் கிருஷ்ணா நதியில் ‘பிரகாசம் தடுப்பணை’, கோதாவரியில் ‘தெளலேஸ்வரம் தடுப்பணை’ ஆகியவை இவருடைய முக்கிய பங்களிப்புகள். இன்றும் தென்னிந்தியாவில் பல உழவர்கள் ஆர்தர் காட்டனை நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள். ஆந்திரத்தில் மட்டும் இவருக்கு 3,000 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கர்னல் ஜான் பென்னி குயிக் (1841-1911)

இங்கிலாந்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் புனே நகரில் பிறந்தவர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குடிமைப் பணியாளராகவும் அரசுப் பொறியாளராகவும் பணியாற்றினார். கேரள-தமிழக எல்லைப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இவர்தான். இந்த அணையின் மூலம் பெரியாறு மேற்கே சென்று அரபிக் கடலில் கலப்பதற்கு பதிலாக, கிழக்கே திருப்பி வைகை ஆற்றை நம்பியிருந்த லட்சக்கணக்கான வேளாண் நிலங்களுக்குப் பயன்படும் நிலை உருவானது.

இந்த அணையின் முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளுர் மக்களையும் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தினார். அணை கட்டுவதற்கான பிரிட்டிஷ் அரசின் நிதியுதவி தடைபட்டபோது, இங்கிலாந்தில் இருந்த தன் பூர்விகச் சொத்தை பென்னி குயிக் விற்றார் என்று கூறப்படுகிறது.

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962)

பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற கட்டுமானப் பொறியாளரான மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா மைசூர் அரச வம்சத்தின் திவானாக இருந்தவர். கிருஷ்ணராஜ சாகர் அணை உட்பட பல முக்கியமான அணைகளையும் வெள்ள மடைமாற்றும் மதகுகளையும் கட்டியவர். ஹைதராபாத் நகரைப் பாதுகாப்பதற்கான வெள்ளத் தடுப்பு அமைப்பையும் விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து காப்பதற்கான அமைப்பையும் உருவாக்கியவர். திருமலை-திருப்பதி சாலை அமைக்கும் பணி இவரது மேற்பார்வையில் நடைபெற்றது. பிரிட்டிஷ் அரசின் சர் பட்டம் பெற்ற இவர், 1955இல் மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பெற்றார்.

மீர் அலி நவாஸ் ஜங் பகதுர் (1877-1949)

நிஜாம்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஹைதராபாத் மாகாணத்தின் முதல் தலைமைப் பொறியாளர். இன்றைய தெலங்கானா மாவட்டத்தில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தியவர். ஹைதராபாத்தில் ‘உஸ்மான் சாகர்’, ‘ஹிமாயத் சாகர்’, ‘நிஜாம் சாகர்’, ‘அலி சாகர்’ உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவை தவிர உஸ்மானியப் பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரி, அரசு நூலகம், உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை உள்ளிட்ட ஹைதராபாத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் இவரால் வடிவமைக்கப்பட்டவை.

சதீஷ் தவான் (1920-2002)

கணிதவியலாளரும் விண்வெளிப் பொறியாளருமான இவர் 1972இல் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் ஆனார். இவரது தலைமையின்கீழ் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி, பல படிகள் முன்னேறியது. இன்சாட், பி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட திட்டங்கள் இவரது உழைப்பால் உருவானவை. ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் இஸ்ரோவின் ஆய்வு மையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொன்னம்பலம் குமாரசாமி (1930-1988)

பூண்டி குமாரசாமி என்றும் அறியப்படும் இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டுமானப் பொறியாளர் பட்டம் பெற்றவர். புகழ்பெற்ற நீரியல் நிபுணராகத் திகழ்ந்தார். 20 தொகுதிகள் கொண்ட தமிழக நீரியல் வரைபடத்தை (Hydrological atlas) உருவாக்கினார். திருச்சி கொதிகலன் ஆலை (BHEL), தூத்துக்குடி துறைமுகத் திட்டம் உள்ளிட்ட தொழில்துறைக் கட்டிடங்களுக்கான வடிவமைப்பு, கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றினார். தென்னிந்தியாவின் பல்வேறு அணைகள், கால்வாய்கள் ஆகியவற்றின் நீரியல் வடிவமைப்பிலும் இவர் ஈடுபட்டார்.

முதல் தடம் பதித்த சென்னைப் பெண்கள்

1940இல் கிண்டி பொறியியல் கல்லூரியில் மூன்று பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அந்த மூன்று மாணவிகளில் ஏ.லலிதா மின் பொறியியலில் பட்டம் பெற்று இந்தியாவின் முதல் மின் பொறியாளர் ஆனார். பக்ரா நங்கல் அணையில் மின்னாக்கி அமைக்கும் பணியில் அவர் முக்கியப் பங்காற்றினார். பி.கே.திரேசியா, லீலாம்மா ஜார்ஜ் ஆகிய இருவரும் கட்டுமானப் பொறியாளர் ஆனார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x