Published : 10 Sep 2019 10:49 AM
Last Updated : 10 Sep 2019 10:49 AM

மனசு போல வாழ்க்கை 13: நெருக்கடியில் நம்பிக்கை கொள்!

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

நம் எண்ணங்கள் நமக்கு நன்மை அளிக்குமா இல்லையா என்று சுலப மாகக் கண்டுபிடித்துவிடலாம். எப்படி? நல்ல உணர்வுகளைத் தந்தால் அவை நல்ல எண்ணங்கள். நல்ல என்பதைவிட ஆரோக்கியமான, நேர்மறை எண்ணங்கள் என்று சொல்லலாம். அப்படி இல்லாமல் மன உளைச்சலைத் தரும் எண்ணங்கள் உடல், மன நலத்துக்குக் கேடு செய்பவை.

உணர்வுகளை அறிந்துகொள்ளப் பெரிய வித்தைகள் தெரிய வேண்டியதில்லை. முகமும் செயலும் காட்டிக்கொடுத்துவிடும். பெரும்பாலான உணர்வுகள் மறைத்துவைக்க முடியாதவை. பல நேரத்தில் அது பற்றிய தெளிவான வாக்குமூலத்தைச் சம்பந்தப்பட்டவர்களே அளிப்பதுண்டு. அதனால் சிக்கல் எதுவுமில்லை.

கொட்டித் தீர்க்கிறோமே!

“எனக்கு நினைச்சாலே ஆத்திரமா வருது.”, “எப்படிச் சமாளிப்பேன்னு பயமா இருக்கு.”, “அவனைக் கண்டாலே அருவருப்பா இருக்கு.”, “என்ன அதிர்ஷ்டம் பாரு… அவளை நினைச்சா பொறாமையா இருக்கு.”, “இப்பத்தான் மனசு நிம்மதியா இருக்கு.”, “செம்ம நியூஸ்! நான் ரொம்ப ஹேப்பி!” இப்படித் தினசரி உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கிறோம். கொச்சை மொழியில் நாம் அதிகம் பகிர்வதும் நம் உணர்வுகளைத்தான். “மண்டை காயுது.”, “செம்ம காண்டாயிடுச்சு!” - போன்றவையும் உணர்வு நிலைகளைச் சொல்பவைதாம்.

இப்படி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் எதிராளியின் செயல்கள் உணர்வுகளை உடனே காட்டிக்கொடுத்து விடும். ஆனால், உணர்வுகள் தொடர்பான எண்ணங்கள் நுட்பமானவை. அவற்றை அறிவதற்கு நேரமும் ஆற்றலும் தேவைப்படும். எண்ணங்களை நேர்மறை, எதிர்மறை என்று வசதிக்காக மேலோட்டமாகப் பிரித்துக்கொள்வோம். நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நேர்மறை உணர்வுகள் அவற்றைத் தெரிவிக்கும். எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் எதிர்மறை உணர்வுகள் அவற்றைத் தெரிவிக்கும். இதுதான் இயல்பு.

உற்சாகமும் சோர்வும்!

ரயில் வண்டியில் கதவோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வண்டி நல்ல வேகத்தில் போய்க்கொண்டி ருக்கிறது. “இப்போது கை நழுவி வண்டியிலிருந்து விழுந்தால் என்னவாகும்?” என்ற எண்ணம் முதலில் வருகிறது. உடனே பயம் வருகிறது. ஓரடி பின் தள்ளி நிற்கிறீர்கள். உங்கள் செயலும் உணர்வும் எண்ணத்தின் ஓட்டத்தைக் காண்பிக்கும்.

வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குக் காத்திருக்கிறீர்கள். சுற்றி உட்கார்ந்திருப்பவர்களை நோட்டம் விடுகிறீர்கள். “இவர்கள் எல்லாரைவிடவும் நான் தேவலாம் போலயே!” என்ற எண்ணம் வருகிறது. அந்த நம்பிக்கை எண்ணம் ஒரு பெருமிதத்தை, உற்சாகத்தை தருகிறது. இப்போது உங்கள் உடல்மொழி மாறி நிமிர்ந்து உட்கார்ந்து அழைப்புக்குக் காத்திருக்கிறீர்கள். இப்போது புரிகிறதா? உங்கள் உணர்வுகளே எண்ணங்களைக் காட்டும் கண்ணாடிகள்.

பெரும்பாலும் அவை தவறு செய்யாது. இதே இரண்டு சூழ்நிலைகளில் எண்ணங்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். ரயிலில் கதவோரம் நிற்கும்போது மனத்தில் இப்படி ஒரு சிந்தனை வருகிறது. “முகத்தில் படும் காற்று ஒரு பெண் தீண்டல் போலுள்ளதே… ஒரு கவிதை எழுதலாம் போல உள்ளது!” உடனே சிலிர்ப்புடன் முகத்தை மட்டும் முன்னே நீட்டுவீர்கள், கைகள் ஸ்திரமாகக் கைப்பிடிகளைப் பற்றியவாறு.

நேர்முகத் தேர்வில் உட்காரும் போது இப்படித் தோன்றுகிறது: “இத்தனை பேர் வந்திருக்காங்க. யார் எப்படின்னு தெரியலை. நம்மளுக்குக் கிடைக்கறது சான்ஸ் கம்மிதான்!” உடனே கை கட்டி தலை கவிழ்ந்து தோல்விக்கான உடல்மொழி தேர்வு செய்யப்படும். உங்களை நீங்கள் கவனிக்கச் சிறந்த வழி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உற்சாகமான உணர்வுகளில் திளைக்கிறீர்கள் என்று கணக்கிடுவதுதான்.

இதுதான் மனப் பயிற்சி!

சூழ்நிலைகள் பொதுவானவை. எண்ணங்கள் நம் தேர்வுகள். உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான செயல்களும் எண்ணங்கள் தரும் திசை நோக்கிச் செல்பவை. அதனால் சரியான எண்ணங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம். மனத்தின் போக்கு இயல்பாக எதிர்மறை எண்ணங்களை அள்ளிக்கொண்டு வந்து கொட்டும். அவற்றைப் புறந்தள்ளி ஆக்கப்பூர்வமான நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுப்பதுதான் மனப் பயிற்சி. வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் நாம் தவறாமல் படிக்கக்கூடிய விஷயம் இதுதான்.

நெருக்கடியான சூழலில் நம்பிக்கையான எண்ணங்களைத் தேர்வு செய்து கொள்வது அவர்களின் பழக்கம். இதைப் பழக என்ன செய்ய வேண்டும்? எல்லாச் சூழலிலும் (எதிர்மறை எண்ணங்கள் வந்த போதிலும்) நம் செயலுக்கும் உணர்வுக்கும் அவசியப்படும் எண்ணங்களை முன்னிலைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படுதோல்வியிலும் பாடம் படித்துக்கொண்டு மீண்டும் புதிதாக முயலத் தேவை, இந்த நேர்மறை எண்ணங்கள். இதைத் தொடர்ந்து பழகும்போது உங்களை அறியாமல் ஒரு மகிழ்ச்சியான மனிதராக நீங்கள் மாறுவதை உணர்வீர்கள். மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்ளாமல் மற்றதைக் கற்று என்ன பயன்?

(தொடரும்)
கட்டுரையாளர்:
மனிதவள பயிற்றுநர்Sign up to receive our newsletter in your inbox every day!

 
x