Published : 09 Sep 2019 11:39 AM
Last Updated : 09 Sep 2019 11:39 AM

அச்சுறுத்தும் 5%

பேராசிரியர் க.ஜோதி சிவஞானம்
kjothisiva24@gmail.com

அமெரிக்காவில் கிரேன் ஆப்பரேட்டராக இருக்கும் எரிக் ஹோஃபர் ஒரு படிக்காத மேதை. எழுத்தாளரும்கூட. அவர் சொன்ன ஒருவாக்கியம் மிகவும் பிரபலம். ‘மிக மோசமானது என்னவெனில், நமக்குத் தெரிந்ததைவிடவும், தெரியாததை விடவும், தெரிந்துகொள்ள விரும்பாதது தான்’ என்பதே அது. இந்திய அரசு கிட்ட தட்ட அத்தகைய மோசமான நிலையில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 5 மற்றும் 12 என்ற இரண்டு எண்கள் தலைப்புச்செய்திகளாயின. 5, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம், அடுத்த எண் 12, பொதுத்துறை வங்கிகள் 27-ம் ஒருங்கிணைக்கப்பட்டு 12-ஆக மாற்றப்படவிருக்கின்றன.

வங்கிகள் இணைப்பு குறித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை தொடர்ந்து, அரைமணி நேரத்திற்குள்ளே தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில், எதிர்பார்ப்பை விட மிகவும் குறைவாக, 5 சதவிகிதமாக உள்ளது என்று அறிவித்தார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு ஒருபக்கம், மறுபக்கம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 சதவீதம். இரண்டுக்கும் இடையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளையும் சவால்களையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

தொடரும் பொருளாதார சரிவு

2007-08 உலகபொருளாதார மந்தத்துக்கு பின், ஓரிரு ஆண்டுகள் கழித்து இந்தியப் பொருளாதாரம் சரியத் தொடங்கியது. 2014-ல் அதை சரி செய்து ‘இரண்டு இலக்கு வளர்ச்சியை எட்டுவோம், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்ற தேர்தல் வாக்குறுதியோடு ஆட்சி அமைத்த பாஜக, ஆட்சியமைத்தவுடன் முதலில் GDP கணக்கிடும் முறையை மாற்றி அமைத்தது. அது பழைய முறையை காட்டிலும் GDPஐ 2 சதவீதத்துக்குமேல் உயர்த்தியது. அதன் பிறகு நவம்பர் 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து GST அமல் செய்யப்பட்டது. இவை இரண்டும் பொருளாதார சரிவின் வேகத்தை மேலும் அதிகப்படுத்தின.

2016-17-ல் 8.2 சதவீதமாக இருந்த திருத்தி அமைக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 7.2, 6.8 என்று தொடர் சரிவை சந்தித்து கடந்த ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இதில் விவசாயத் துறையின் வளர்ச்சி வெறும் 2 சதவிகித
மாகும். அடுத்து உற்பத்திதுறை தொடர்ந்து கடுமையான சரிவை சந்தித்து இன்றைக்கு ஒரு சதவீதத்துக்கும் கீழே 0.6 சதவீதமாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (Make in India) என்ற அரசின் திட்டம் எந்த ஒரு பலனையும் அளிக்கவில்லை. தொழில்துறை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ள
தென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. தற்போதுள்ள இந்தச் சரிவு வரும் காலாண்டுகளிலும் தொடரும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சரிவின் பின்னணியில் அரசின் நடவடிக்கைகளும், கொள்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கிராமப் பொருளாதாரத்தின் பேரழிவு

எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாமல், முன்னேற்பாடும் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நவம்பர் 8, 2016-ல் அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு நடவடிக்கைக்குப் பிறகுதான் GDP-ல் 12 சதவிகிதமாக இருந்த பணப்புழக்கம், 8.2 சதவிகிதமாக குறைந்தது. இது இயற்கையாக இருந்துவந்த மக்களின் ஒட்டுமொத்த நுகர்வு தேவைக்கு கொடுக்கப்பட்ட பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இது நாட்டின் பெரும்பான்மை மக்களை நேரடியாகப் பாதித்தது.

அதிலும் முக்கியமாக சாதாரண, கிராமப்புற, முறைசாராத் துறைகளைச் சேர்ந்த மக்களின் வாங்கும் திறனை மிகக் கடுமையாக பாதித்தது. பொதுவாக இவர்கள் அனைவருமே தங்களின் பெரும்பகுதி வருமானத்தை செலவிடக்கூடியவர்கள். சேமிப்பு என்பதை கனவிலும் நினைக்காதவர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்த மக்களை முற்றிலுமாக பொருளாதாரப் பிணைப்பிலிருந்து துண்டித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவையனைத்துக்கும் மேல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கான நோக்கமாக அறிவிக்கப்பட்ட கருப்புப் பணம் மற்றும் கள்ளப்பணம் எதையும் அரசு கண்டுபிடிக்கவில்லை.

மொத்தப் பணமும் வங்கிக்கு வந்துவிட்டதை அறிவிக்க ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டதுதான் மிச்சம். அதுபோலவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு தொடங்கிய GST போது மான ஏற்பாடுகள் இல்லாமல் அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்டு சிறுதொழில், சிறு, குறு வியாபாரிகளைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல் அரசுக்கும் போதுமான வரி வருவாயை ஈட்டித்தரவில்லை. அதுமட்டுமல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனை
யும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு நமது GDP-ல் ரொக்கத்தின் பங்கு 11-12 சதவீதமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அதே பழைய நிலையை எட்டிவிட்டது. அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்த பணத்தில் 85 சதவீதமாக இருந்தது. இன்று 500, 2000 ரூபாய் நோட்டுகள் 2019 மார்ச் மாத கடைசியில் 82.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், அன்று அதிகமாக கள்ள நோட்டுகள் இல்லை. இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகமாகியுள்ளதாக அண்மையில் வந்த ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி இந்த இரண்டு நடவடிக்
கைகளும் மக்களின் ஒட்டுமொத்த தேவைகளை வெகுவாக குறைத்து பொருளாதாரத்தின் தொடர் சரிவுக்கு அடித்தளமிட்டது என்பதை இன்றுவரை அரசு நம்பத் தயாராக இல்லை.

இந்த இரு நடவடிக்கைகளின் தோல்வியை அரசு ஏற்காமல் தொடர்ந்து வெற்றிகரமான நடவடிக்கைகள் என்றே பாராட்டிக்கொண்டது. இதனால், பொருளாதார சரிவையும் ஒப்புக்கொள்ள மறுத்து அதை தடுக்கும் எந்த முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக உலக பொருளாதாரத்தைக் காரணம் காட்டியது. இங்கு உள்நாட்டு பொருளாதார சரிவுடன் கூடவே தனியார் முதலீடுகள், குடும்ப சேமிப்புகள், உள்நாட்டு வெளிநாட்டு சந்தை முதலீடுகள், நுகர்வு என அனைத்துமே சரிந்து வந்தன. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் உள்நாட்டு காரணிகள்தான் என்பது தெளிவாகத் தெரிந்தும் அரசு காதுகொடுக்கவில்லை.

பொருளாதார சரிவும் வேலை இழப்பும்

பொருளாதார வளர்ச்சிக்கும் சாதாரண மக்களுக்கும் உள்ள முக்கிய தொடர்பு வேலை
வாய்ப்புதான். இதை குருச்சரண் தாஸ் என்ற பொருளியல் பத்திரிகையாளர் பின்வருமாறு கூறுகிறார். 1 சதவீத GDP-யின் வளர்ச்சி சராசரியாக 15 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடியது. இதில் ஒவ்வொரு
நேரடி வேலைவாய்ப்பும் 3 மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஆக, 1 சதவீத GDP வளர்ச்சி 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவல்லது.

ஒவ்வொரு வேலையும் 5 பேர் உள்ள ஒரு குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், 1 சதவிகித GDP வளர்ச்சி 3 கோடி மக்களுக்கு வாழ்வளிக்கும். அதாவது GDP வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட 3.2 சதவிகித சரிவு என்பது, 9.6 கோடி மக்களின் வாழ்வை பாதித்துள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை உயர்ந்து உள்ளது என்று அரசின் NSSO புள்ளி விவரம் கூறுவதையும் இதனோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த சரிவு எந்த அளவுக்கு நம்மை பாதித்துள்ளது என்பது தெளிவாகும். இந்த வரலாறு காணாத வேலையிழப்பு, சாதாரண மக்களின் வருமானத்தை, ஒட்டுமொத்த தேவையை வெகுவாக குறைத்துள்ளது.

அரசின் அர்த்தமில்லா நடவடிக்கைகள்

மத்திய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் வெளிநாட்டு முதலீட்டார் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் முதலீடுகளை எடுத்துக்கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். இதனால் பங்குச்சந்தை தொடர் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து தொழில் துறையினரிடையே எதிர்ப்பு கிளம்ப நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதுதவிர ‘சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல்’ விற்பனை, டிஜிட்டல் மீடியா மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஊக்குவிக்க அதன் விதிகளை தளர்த்தும் அறிவிப்புகளை அரசு வெளியிட்டது.

இதன் மூலம் நுகர்வோர்கள் தேர்ந்தேடுக்க பல்வேறு வெளிநாட்டு பிராண்டுகள் அதிகமாக கிடைக்குமாம். இதுபோக கடன் சந்தையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்கு முறை வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுத்தது. இப்போது கூடவே ரூ.1.76 லட்சம் கோடி கையிருப் பினையும் அரசுக்குத் தாரைவார்க்க இருக்கிறது. 27 வங்கிகள் 12 வங்கிகளாக ஒருங்
கிணைக்கப்பட உள்ளன. இன்னும் இதுபோன்ற பல அறிவிப்புகள் வரவும் வாய்ப்புள்ளது.

இந்தத் தொடர் பொருளாதார சரிவு கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துகொண்டிருக்கிறது. பல பொருளாதார வல்லுநர்கள், தரச்சான்று நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையிலும், அரசு அதை அங்கீகரிக்காமல் பொருளாதாரம் நன்றாக உள்ளதாகவே சாதித்துவந்தது. ஆனால், பங்குச்சந்தையின் கடும் வீழ்ச்சி, அந்நிய முதலீடுகளின் திடீர் வெளியேற்றம், ரூபாய் மதிப்பின் சரிவு, நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு, பணியாளர்கள் வேலை இழப்பு என்று ஒவ்வொன்றாகவே வெளிச்சத்து வரவே அரசு பொருளாதார சரிவை ஏற்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் தொழில் துறை முதலீட்டில், போதுமான உற்பத்தியை அளிப்பதில் (Supply Side) தடைகள்/பிரச்சினைகள் இருப்பதாக அரசு எண்ணிக்கொண்டிருப்பதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். அதாவது வட்டி விகிதத்தை குறைத்து, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரித்தால், வங்கிகளை ஒருங்கிணைத்தால், அந்நிய முதலீடுகளுக்கான தடைகளை தளர்த்தினால், இந்தியத் தொழில் துறையில் முதலீடுகள் பெருகி, வேலைவாய்ப்புகள் அதிகரித்து, தனிநபர் வருமானம் செழித்து பொருளாதாரம் சரியாகிவிடும் என்று அரசு எண்ணுகின்றது. ஆனால், கவலை என்னவெனில், இது முற்றிலும் தவறான புரிதல்.

இங்கே முதலீடுகளுக்கும், கடன்களுக்கும் உள்ள தடைகளைவிட நுகர்வும் தேவையும்தான் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சாமான்ய மக்களின் தேவை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. பணப்புழக்கமும், வாங்கும் திறனும் வெகுவாகப் பாதித்துள்ளன. இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ நடவடிக்கைகளையெல்லாம் அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆக, நமது பொருளாதாரத்தின் தொடர் சரிவுக்கு அடிப்படை காரணம் சரிந்து வரும் தேவை குறைவே. அதை சரி செய்ய கல்வி, சுகாதாரம், விவசாயம், கிராமப்புற கட்டமைப்பு போன்ற துறைகளில் அதிக முதலீடுகளைச் செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்
மூலம் சாதாரண மக்களின் வருமானத்தையும், வாங்கும் திறனையும் உயர்த்தலாம்.

ஆனால், இவற்றையெல்லாம் செய்வதற்கு தேவையான நிதி நிலை அரசிடம் உள்ளதா என்பதும் பெரும்
கேள்விக்குறியே. ஏனெனில், அரசு தனது ஒட்டுமொத்த செலவை கடந்த ஆண்டுகளில் ஜிடிபியில் 14 சதவீதம் என்ற நிலையிலிருந்து 12 சதவீதமாகக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற ரூ. 1.76 லட்சம் கோடியையும் அரசு எப்படி பயன்படுத்தப்போகிறது என்பதும் அரசுக்கே வெளிச்சம். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கும்போது, பத்திரிகையாளர் ஒருவர் சிபிஐ விசாரணை குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்க, அவர் ‘5%’ என்று கை காட்டினார்.

‘5%. புரியவில்லையா? 5 சதவிகிதம் என்பதைவிட இது ஒன்றும் பெரிய விஷயமில்லை’ என்று சொல்லவிட்டு நகர்ந்தார். மன்மோகன் சிங்-ப.சிதம்பரம் காலகட்டத்திலும் ஜிடிபி 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்துள்ளது. அதை சிதம்பரம் சாமர்த்தியமாக மறக்கப் (மறைக்க) பார்ப்பது வேறு விஷயம். ஆனால், உண்மையிலேயே இன்றைய பொருளாதார சூழலில் 5 சதவிகிதம் என்பது அச்சுறுத்தக்கூடிய ஒரு எண் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒரு அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் திறனுடன் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதைவிட அந்த தீர்க்கமான முடிவை சரியான நேரத்தில், சரியான காலகட்டத்தில், சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமானது. அந்த விஷயத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துகொண்டே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x