Published : 08 Sep 2019 10:54 AM
Last Updated : 08 Sep 2019 10:54 AM

வாழ்ந்து காட்டுவோம் 22: சிறுபான்மையினரை முன்னேற்றும் உதவித்தொகை

அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் - வேலை வாய்ப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைப் போல் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்குப் பலவிதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நலத்திட்ட உதவிகளைப் பெற, பதிவுசெய்துள்ள உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறுபான்மையினர் நல இயக்ககம்

சிறுபான்மையின மக்களின் சமூகம், பொருளாதாரம், கல்வி நிலைகளை மேம்படுத்தவும் இச்சமூக மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பலவித நலத்திட்டங்களைச் செயல்படுத்த, இந்திய ஆட்சிப்பணி நிலையில் உள்ள அதிகாரியைத் தலைவராகக் கொண்டு 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்ககம், தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்கென ஏற்கெனவே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 சதவீதத்தில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இஸ்லாமியருக்கு, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு/அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கென 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில், நேரடி நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமி யர்களுக்கு முன்கொணர்வு முறையினை (Carry forward procedure) பின்பற்றவும் அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைகள்

அரசு/அரசு உதவிபெறும் - அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களில் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, சமண மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு 100 சதவீதம் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் கல்வி உதவித்தொகை அளிக்கக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மத்திய அரசால், கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற:

மாநிலத்தின் சிறுபான்மையின மக்கள்தொகையின் அடிப்படையில், கல்வி உதவித்தொகைத் திட்டங்களுக்கு மத்திய அரசால் சிறுபான்மை மதங்கள்வாரியாக ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படுகிறது.

1) தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ படித்தாலும் அவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
2) கல்வி உதவித்தொகைத் திட்டங்களின்கீழ் விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள், அதற்கு முந்தைய ஆண்டு இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 30 சதவீதம் மாணவிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்படும்.
4) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தை களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.
5) அஞ்சல்வழி மூலம் கல்வி பயில்பவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
6) தொழிற்கல்வி/தொழில்நுட்பக் கல்வியில் முதல் தலைமுறை பட்டதாரி சலுகை பெற்றவர்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகையை வழங்க இயலாது.

விண்ணப்பிக்கும் முறை:
மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகைக்காக www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிலையத்தின் (UDISE/AISHE code) குறியீட்டை உறுதிசெய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்காணும் சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

(1) ஒளிப்படம் (2) கைபேசி எண் (3) மின்னஞ்சல் முகவரி (4) ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் (5) சாதி/மதச் சான்றிதழ் (6) வருமானச் சான்று (7) இருப்பிடச் சான்று (8) ஆதார் எண் (9) கட்டண ரசீது (10) செயல் நிலையில் உள்ள வங்கிக் கணக்கு எண், IFS Code (வங்கிக் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்).

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் 50,000 ரூபாய்க்கு மேற்பட்டுக் கல்விக் கட்டணம் செலுத்தியிருப்பின், மேற்படி ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

- ருக்மணி

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x