Published : 08 Sep 2019 10:54 AM
Last Updated : 08 Sep 2019 10:54 AM

போகிற போக்கில்: சின்ன இழைகளின் பேரழகு!

சிக்கலை ஏற்படுத்தும் இழைகளைக்கூடச் சரியாகக் கோத்தால் வாழ்க்கையும் வடிவங்களும் அழகாகும் என்பதை உணர்த்துகின்றன சென்னை நொளம்பூரைச் சேர்ந்த நித்ய கல்யாணியின் கைவண்ணத்தின் மிளிரும் கம்பளி நூல் கலைப்பொருட்கள்.

ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்களைச் செய்வது போன்றவற்றைப் போல் கம்பளி நூலில் ஆடைகளைப் பின்னுவதும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிரபலமாக இருந்தது. ஆனால், இன்றோ நேரமின்மை என்பதுடன் அனைத்துமே கடைகளில் கிடைக்கின்றன என்பதும் இதுபோன்ற கலைகள் கவனம் பெறாததற்கு முக்கியக் காரணம்.

கண் பார்க்கக் கை செய்தது

பொதுவாகக் கம்பளி நூலில் குழந்தைகளுக்கான ஆடைகளைத்தான் செய்வார்கள் எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், அதில் கம்மல், மேஜை விரிப்பான், காலணி, தொப்பி, பொம்மைகள், சாவிக் கொத்து, பட்டுப் புடவைகளுக்கு பார்டர் எனப் பலவற்றையும் செய்து ஆச்சரியப்படுத்துகிறார் நித்ய கல்யாணி. “நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது என் அம்மா கம்பளி பின்னுவாங்க. அவங்களைப் பார்த்துத்தான் நானும் ஏழு வயதிலேயே இந்தக் கலையைக் கற்றுக்கொண்டேன். அப்போது தொடங்கி இப்போது பேரக் குழந்தைகள் பிறந்த பிறகும் இதைத் தொடர்ந்து செய்துவருகிறேன்” என்கிறார் மகிழ்ச்சியாக.

உங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள்

ஓயாத வேலை நிறைந்த குடும்பச் சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்கான நேரத்தைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். “பெண்களுக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், அதற்காக நமக்குப் பிடித்த விஷயங்களை விட்டுக்கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் நமக்கான நேரத்தை ஒதுக்கி, அதில் நமக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படி எனக்குக் கிடைக்கும் நேரத்தை, கம்பளி நூலில் கைவினைப் பொருட்களைச் செய்வதில் செலவிடுகிறேன்.

50 வயதைக் கடந்துவிட்டேன். ஆனால், இதுவரை நான் மதியத்தில் தூங்கியதே இல்லை. பெண்களுக்கான நேரத்தைப் பெண்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். வேறு யாராவது வந்து நமக்கு நேரம் ஒதுக்கித் தருவர்கள் என எதிர்பார்க்கக் கூடாது” என்கிறார் நித்ய கல்யாணி.

கம்பளி நூலில் கைவினைப் பொருட்கள் செய்வதற்குப் பலரும் இவரிடம் பயிற்சியெடுத்து வருகின்றனர். நமக்குப் பிடித்தவற்றைச் செய்யும்போது மன அழுத்தம் குறைந்து அமைதி உருவாகும் என்கிறார் அவர். “சிறியதாக ஒரு கலைப் பொருளைச் செய்தால்கூட அது ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பேன். நான் செய்த கம்பளிப் பொம்மைகளைப் பார்த்து ஒன்றரை வயதாகும் என் பேத்தி ஆச்சரியத்தில் முகம் மலரும்போது வானத்தில் பறப்பதுபோல் இருக்கும். அந்த ஒரு நொடி எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, என்னாலும் முடியும் என்ற உற்சாகத்தைத் தரும்” என்கிறார் நித்ய கல்யாணி.

- அன்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x