Published : 08 Sep 2019 10:54 AM
Last Updated : 08 Sep 2019 10:54 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 22: கோயிலுக்குப் போக ஆறணா சேலை

காடுகளில் சோளக்காட்டிலோ கம்மங்காட்டிலோ வேலை செய்தால் அவற்றின் ஈக்கிகளும் சிறு சிறு குச்சிகளும் தொடைக்குள்ளோ கால், கைகளிலோ குத்தி அப்படியே முறிந்துபோவதுண்டு. சதைக்குள் நுழைந்துகொண்ட துரும்புகள் உடம்புக்குள் இருக்கும்வரை மனுசனை இம்சை படுத்திக்கொண்டிருக்கும்.

நாம் மறந்தாலும் அது மறக்காது. கொஞ்ச நாளாகிவிட்டால் புரையோடிவிடும். பிறகு கத்தி கொண்டுதான் எந்த மயக்கமும் தராமல் அறுத்தெடுப்பார்கள். அதற்கு முன்னால் அப்படித் தைத்த இடங்களில் தும்பைச் செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை நாலைந்து நாளுக்குத் தொடர்ந்து விட்டால் சதைக்குள் இருக்கும் துரும்பு தானாக வெளியே வந்துவிடும்.

குதிகால் வலிக்கு நிவாரணம்

சிலர் குதிகால் வலியோடு அவதிப் படுவார்கள். அவர்கள் பசு மாடுகள் சாணி போடும்போது சூடாக இருக்கும் அந்தச் சாணியை ஒரு மாதம்வரை மிதித்துவந்தாலே போதும்; வலி பறந்தே போய்விடும். சிலருக்கு நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்கிற மாதிரி சூடான சாணத்தை மிதிக்கவே வாய்ப்பிருக்காது. அவர்களுக்கென்று ஒரு வைத்தியம் செய்தார்கள்.

அப்போது வாய்க்கால்களிலும் கிணறு களிலும் கிடக்கும் தவளைகைளைப் பிடித்து அவற்றின் குடலையும் மற்ற கசடுகளையும் நீக்கிவிட்டு வெறும் தோலை மட்டும் குதிகாலில் வைத்து நாலு நாளுக்குக் கட்டிவிட்டால் போதும்; வலி ஓடுவதோடு மட்டுமல்ல; திரும்பி வரவும் வராது.

பண்டமாற்று வியாபாரம்

அப்போது ஆஸ்பத்திரிகள் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் இவர்கள் கையில் காசு இருக்காது. எல்லாம் மாற்றுப் பண்டங்களே. கடையில் ஏதாவது சீரகம், மிளகு என்று வாங்கினால் தானியங்களையும் வீட்டிலிருக்கும் பருத்தியையும் விலையாகக் கொடுத்தார்கள். அவர்களின் தேவையும் குறைவுதான். இப்போதுபோல் ஆடம்பரமும் ‘அவனைவிட நான்தான் பணக்காரன்’ என்ற கர்வமும் இல்லை. ஊருக்குள் பணக்காரர் அதாவது கொஞ்சம் வசதியானவராக இருந்தால் ஊருக்கு நல்லது செய்வார்.

தாய்ப்பால் காணாமலிருக்கும் ஐந்து மாதக் குழந்தையிலிருந்து ஏழு மாதக் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்காகச் சோறும் குடிப்பதற்காக ஒரு டம்ளர் பாலும் அவர்கள் வீட்டில்தான் கிடைக்கும். சாப்பாட்டுக்கு இல்லாதவர்கள் அவர்கள் வீட்டில் வேலை செய்து கழித்துவிடுவதாகச் சொல்லி தானியம் வாங்கிவருவார்கள். தீ எரிப்பதற்கு விறகு. வெஞ்சனத்துக்கான காய் என்று எல்லா உதவியும் செய்வார்கள். அப்போதுள்ள மக்கள் எளிய வாழ்க்கை யைத்தான் வாழ்ந்தனர். அதனால், யாரிடமும் பொறாமை கிடையாது.

சாக்குப் படுக்கை உமி தலையணை

பனையோலைகளும் தென்னை ஓலைகளும் வீட்டுக்குக் கூரைகளாயின. காடு களிலிருந்து வெட்டி சுமந்து கொண்டுவந்த மண்ணும் சுவர்களானது. சிலர்தான் அடுப்பு வாங்கினார்கள். மற்றவர்கள் கல் அடுப்புக் கூட்டிச் சமைப்பார்கள். தோட்டங்களில் காய்களைப் பறித்துக் கொண்டார்கள். காய் காய்த்து ஓய்ந்துபோன மாருகளை கொண்டுவந்து அடுப்பெரித்துக் கொள்வார்கள். இரவுப் படுக்கைக்குத் தானியம் அளந்த சாக்குகளும் பழைய கிழிந்துபோன சேலைகளும்தான். களத்தில் உள்ள கேப்பை உமியை அள்ளிப் பழைய சாக்கில் நிறைத்து தலையணையாக தைத்துக் கொள்வார்கள்.

மூன்று வேளையும் சாப்பாட்டோடு பகல் முழுக்க வேலை செய்வதால் இரவு படுத்ததும் தூக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும். காலையில் எழுந்து வேலை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தவிர விரோதிகளைப் பற்றியோ துரோகிகளைப் பற்றியோ எந்த எண்ணமும் அவர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், அவர்களின் வாழ்க்கை எளிதானது.

அவரவர் குலதெய்வத்தைக் கும்பிடப் போவதில் கிராமத்து மக்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை சொல்லிமுடியாது. இரவு முழுக்க இந்தப் பெண்கள் தூங்க மாட்டார்கள். புளிகாய்ச்சல் காய்ச்சுவதும் கத்தரிக்காய் வெஞ்சனம் வைப்பதும் வனத்தில் உரல் இல்லாததால் ரசத்துக்கு இடிப்பதும் மசால் பொடியைச் சலிப்பதுமாக இத்தனை நாள் செய்த வேலையும் இப்போது செய்கிற வேலையும் ரொம்ப வித்தியாசப்படும். கோயிலுக்கான வேலைகளில் அவர்கள் முகமே பூத்துப் பொலிவுகொண்டிருக்கும்.

புதுச் சேலை ஆசை

யாருக்கும் அப்போது நல்ல சேலைகள் இருக்காது. கிராமங்களுக்குத் துணி துவைப்பவர்தான் சற்றுத் தூரத்திலிருக்கும் டவுனுக்குள்ளும் துணிகளைத் துவைத்துத் தருவார். டவுனில் பணக்காரர் வீட்டிலும் நாகரிகமாக இருப்பவர்கள் வீட்டிலும் அவர் துணி வெளுப்பதால் அவரிடம்தான் இவர்கள் நல்ல சேலையாகக் கொண்டுவரச் சொல்வார்கள். ஒரு சேலை கொண்டுவந்து கொடுத்தால் அதற்கு ஆறணா. அதாவது ஐம்பது பைசாவுக்கும் மேலாக (ஓரணா). மற்ற செலவுகளுக்குப் பணத்தைக் கணக்குப் பார்த்து முணுமுணுக்கும் பெண்கள் இந்தச் சேலைகளுக்கு மட்டும் கணக்குப் பார்ப்பதில்லை.

துவைப்பவர் இருபது சேலை வரைக்கும் கொண்டுவந்து ஊர் மந்தையில் வைப்பார். கோயிலுக்குப் போகும் முதல் நாள் சாயங்காலம் அடுப்பிலும் துடுப்பிலும் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்கள் அவற்றை அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சேலையைப் பார்க்க ஓடுவார்கள். பட்டுச் சேலைகள் சரிகை மினுங்க எல்லா நிறங்களிலும் பளபளத்தவாறு கிடக்கும். எப்போதும் ஐந்து ரூபாய்க்கும் ஏழு ரூபாய்க்கும் வெறும் சுங்குடிச் சேலைகளை வாங்கி ஒரு வருசம் இரண்டு வருசம் என்று கட்டுவார்கள்.

அது சாயம் போனதோடு பல ஒட்டுத் தையல்களைப் போட்டு சேலையின் நிறமே என்னவென்று தெரியாமல் மங்கிக் கிடக்கும். அதையே பார்த்துப் பார்த்து உடுத்திச் சலித்தவர்களுக்கு இந்தப் பட்டுச் சேலைகளின் அழகும் நிறமும் நெஞ்சை அள்ளும். அவர்களின் கண்களுக்குள் வண்ணம் தோன்றி மாயம் காட்டும். உடம்புக்குள் ஒரு புதுமையான சிலு சிலுப்புத் தோன்றி அவர்களைப் பரவசப்படுத்தும். இதற்காகவே வாழ்ந்தவர்போல் எனக்குப் பச்சை கலர் சீல எனக்கு ரத்த கலர் சீல என்று ஆளாளுக்கு ஒரு சேலையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்வார்கள். அந்தப் பட்டின் வழுவழுப்பில் சற்று நேரம் மெய்சிலிர்த்து நிற்பார்கள்.

“ஆத்தாமாருங்க எல்லாரும் இப்பவே என் கையில் சில்லறையைக் கொடுத்துரணும். அப்பத்தேன் நானு சீலயக் கொடுப்பேன். இல்லாட்டி கோவிச்சிக்கிடாதீங்க. நானு சீலகளைக் கொண்டுக்கிட்டுப் போயிருவேன்” என்று துவைப்பவர் சொல்ல, எல்லாப் பெண்களும் திடுக்கிட்டுப்போவார்கள். அவசரமாகத் தங்கள் முந்தாணை முடிச்சில் இருக்கும் சில்லறையை அவிழ்த்து எண்ணியதோடு கண்டும் காணாததற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கிக் கொடுத்து எப்படியோ சேலையை வாங்கிக்கொண்டுவந்து பத்திரமாய் அடுக்குப் பானைக்குள் வைத்துக்கொள்வார்கள்.

கோயிலுக்குப் போகப் போகும் இரவு வேலைகள் குவிந்துகிடக்கும். அவ்வளவு வேலைகளை ஓடி ஓடி செய்தாலும்கூட அடுக்குப் பானைக்குள் இருக்கும் சேலையின் நினைவில் அந்தப் பெண்களின் உடல் மயில் இறகால் வருடியதுபோல் உற்சாகம் கொள்ள, அவர்களுக்கு எந்த அலுப்பும் தெரியவே தெரியாது.

அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து சோற்றுப் பொட்டலம் போடவும் பிள்ளைகளுக்குத் துணி மணி எடுத்து வைக்கவும் அவர்களை எழுப்பிப் பல் தேய்க்கவுமாக இருப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆடுகளையும் பால் மாடுகளையும் தனக்கு வேண்டிய நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வார்கள்.

(நிலா உதிக்கும்)
எழுத்தாளர் பாரததேவி,
தொடர்புக்கு: arunskr@gmail.com ஓவியம்: எஸ். இளஞ்செழியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x