Published : 07 Sep 2019 10:56 AM
Last Updated : 07 Sep 2019 10:56 AM

இயற்கை தேசம்: கட்டிடக் குவியலுக்குள் ஒரு பசுமையில்லம்

எப்போதும் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதி தி.நகர். அதன் கூட்ட நெரிசலுக்கு இடையே பாலத்தைக் கடந்து சென்றால் பெரிய கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளே மிஞ்சும். அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கான்கிரீட் காடுபோல் காட்சியளிக்கும். அந்தப் பகுதியின் ஓர் இடத்தில் இயற்கை கொஞ்சமாக எட்டிப் பார்க்கிறது.

மாறுபட்ட அந்த வீட்டுக்கு உள்ளே இருந்த கூட்டத்தினர், தங்களிடம் இருப்பதைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். வருபவர்களை, தன் கையிலிருந்த சில பொட்டலங்களுடன் வரவேற்கிறார் மோகனா.

உணர்வால் விளைந்தது

சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர் மோகனா. பெருநகரில் பிறந்திருந்தாலும் அவரது எண்ணங்கள் இயற்கையைச் சுற்றிவந்தன. அவரது வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு காய்கறிச் செடிகள், பழ மரங்களைப் பிள்ளைகளைப் போல் வளர்த்துவருகிறார். இயற்கைமீது கொண்ட ஆர்வத்தால் கடந்த பத்து ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையிலும் ஈடுபட்டுவருகிறார்.

சென்னையின் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியபோதும், அவரது தோட்டத்தின் பச்சையத்தின் வாசம் குறையவே இல்லை. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பல்வகைத் தாவரங்களைப் பராமரித்துவரும் மோகனா, வெறுமனே உணவுப் பயன்பாட்டில் மட்டுமே இயற்கைப் பொருட்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. தன் வீட்டுக்கான அடிப்படைப் பயன்பாடுகள் அனைத்துக்கும் இயற்கைப் பொருட்களையே நாடுகிறார். பாத்திரம் கழுவ எழுமிச்சைப் பொடி, துணி துவைக்க பூந்திக்கொட்டை என அனைத்துமே இயற்கை முறையில் கிடைத்தவை. அன்றாடப் பயன்பாட்டுக்குப் பிந்தைய தண்ணீரை செடிகளுக்கே ஊற்றிவிடுவதால் கூடுதல் ஊட்டச்சத்துடன் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

பல்லுயிருக்கும் படையல்

ஒவ்வொரு தாவரத்துடனும் உணர்வுடன் உரையாடுகிறார் மோகனா. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் குறளுக்கு ஏற்ப பல தாவரங்களை வளர்த்து வருகிறார். கைக்கு எட்டும் தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காக அவருடைய வீட்டில் பெண் பப்பாளி மரம் வெட்டப்பட்டுள்ளது. அதேநேரம் ஆண் பப்பாளி மரத்தை தேன் சிட்டு தேனருந்துவதற்கு விட்டுவிட்டார். அங்கு வளர்க்கப்படும் பூச்செடிகள், காய்கறிகள் என அனைத்துமே கலப்பினமற்ற உள்நாட்டுத் தாவரங்கள்.

காலை வேளையில் கதிரவன் எழுகையில் காற்றில் தவழ்ந்துவரும் மூலிகை வாசமும் குருவிகளின் கிரீ்ச்சிடும் சத்தமும் இயற்கையின் உன்னதத்தை உணர வைக்கின்றன. “போன மாசம் இங்க நூற்றுக்கும் மேல வண்ணத்துபூச்சி வந்திருந்துச்சு, பாருங்க இந்த இலையெல்லாம் சின்ன சின்ன ஓட்டை இருக்கு. எல்லாமே வண்ணத்துப்பூச்சி சாப்பிட்டுப் போனதுதான். அது போனதுக்கு அப்புறம் எலுமிச்சையும் பெருசா வளந்துச்சு” என ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார் மோகனா. தொடக்கத்தில் எல்லோரையும் போல் மரம், செடி கொடிகளைப் பராமரித்து வந்தவர் காலப்போக்கில் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தியிலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.

வீட்டைத் தாண்டியும் விளைச்சல்

தனது செயல்பாடு சமூகத்துக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘பசுமைக் குடில்’ என்னும் அமைப்பை மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கும் விதமாக இந்த அமைப்பு, மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமைதோறும் கூடுகிறது. இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள், புதிதாக இயற்கை வேளாண் முறைக்குள் நுழைந்தவர்கள், ஆர்வமுள்ளோர் எனப் பலர் இதில் கலந்துகொள்கிறார்கள். அந்தக் கூட்டத்துக்கு வருபவர்கள் கடையில் கிடைக்கும் வேதிக் கலப்புள்ள விதைகளை வாங்கி வருவதில்லை. தங்களுடைய வீட்டில் விளைந்த தாவரத்தில் கிடைத்த விதைகளையே எடுத்து வருகிறார்கள். பிறகு அந்த விதைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்ள்.

இயற்கை உரம் தயாரிக்கும் முறையையும் மோகனா கற்றுக்கொடுக்கிறார்.வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு நில உரம், மூன்று அடுக்குப் பானை உரம், எருக்குழி உரம் போன்ற மூன்று வகை தயாரிப்பு முறைகள் உள்ளன. “தற்போது இயற்கை வேளாண்மை சில இடங்களில் மட்டுமே நடைபெற்று வரும் வேளையில், அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. இந்த முறை கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள் உண்மையில் எளிமையான முறைதான் என்ற புரிதலை பரவலாக்க வேண்டும். அதற்காகவே இந்த அமைப்பைத் தொடங்கினேன். அதன்மூலம் பலரும் இயற்கை வேளாண்மை செய்யத் தொடங்கியுள்ளனர். அத்துடன் விதைப் பரிமாற்றம், உரம் தயாரிப்பு முறைகளையும் கற்றுக்கொடுத்து வருகிறேன்” என்று தான் பெற்ற இயற்கை குறித்த அறிவை உலகுக்குப் பரப்பிவருகிறார் மோகனா.

நில உரம்

நிலத்தில் இரண்டு அடி அகல, நீளமுள்ள இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் காய்ந்த இலைகள், சருகுகளுடன் பச்சை இலைகளை இட வேண்டும். அதன் மேல் மாட்டு சாணத்தைக் கரைத்து மூன்றையும் பதப்படுத்த வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை அதைக் கிளறிவிட வேண்டும். மக்கியவைப் பறக்காமல் இருக்க மூங்கில் குச்சிகள் மூலம் மறைப்புபோல் அமைத்துக்கொள்ளலாம். பின் நிலத்தில் பதம் ஆகும்வரை சூரிய ஒளி, மழை படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதற்கு நிழல் அவசியம்.

எருகுழி உரம்

எருக்குழி உரம் தயாரிப்பதற்கு இரண்டு முதல் மூன்று அடிவரை ஆழமாகக் குழி தோண்ட வேண்டும். அதில் காய்ந்த சருகுகள், காய்கறிக் கழிவு, பச்சை இலைகள் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். கழிவு பெரிய துண்டுகளாக இருக்கக் கூடாது. அதில் ஈரப்பதத்துக்காகக் கொஞ்சம் புளித்த மோர், மாட்டுச் சாணத்தைச் சேர்க்கலாம். அதேபோல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட்ட பின் ஏழு வாரத்தில் உரமாகிவிடும்.

அடுக்குப் பானை உரம்

இதற்கு 300 மி.மீ. சுற்றளவு கொண்ட மூன்று பானைகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் காற்று போவதற்குச் சில ஓட்டைகள் அவசியம். அதில் ஒரு பங்கு ஈரமான கழிவு, ஐந்து பங்கு காய்ந்த சருகுகளைச் சேர்த்து இட வேண்டும். இது ஏழு வாரங்களில் உரமாகி விடும். பின் தாவரங்களுக்கு இடுவதற்குப் பயன்படுத்தலாம். இந்த முறை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குப் பயனளிக்கும்.

மோகனா தொடர்புக்கு: 9380514956

- ச.ச.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x