Published : 06 Sep 2019 10:59 AM
Last Updated : 06 Sep 2019 10:59 AM

ஹாலிவுட் ஜன்னல்: ‘ஹா..ஹா..’ ஹிட்லர்!

சுமன்

ஒரு ஜெர்மனியச் சிறுவனின் பார்வையிலிருந்து ஹிட்லரையும் உலகப் போரையும் நகைச்சுவையுடன் ஆராயும் வித்தியாசக் கதையுடன் ‘ஜோஜோ ராபிட்’ (Jojo Rabbit) என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெர்மானிய தேசம். தந்தையை இழந்த ஜோஜோ என்ற பத்து வயதுச் சிறுவனுக்கு ஹிட்லர் என்றால் கொள்ளை இஷ்டம்.

தனது நினைவுகளில் மங்கியிருக்கும் அப்பா மீதும் அவன் அளவற்ற பிரியம் வைத்திருக்கிறான். இதர ஜெர்மன் குடிமக்களைப் போலவே சிறுவனும் கண்மூடித்தனமாக தேசப்பித்து கொண்டலைகிறான். ஆனால், அவனது பிரியத்துக்குரிய அம்மாவோ தீவிர நாஜி எதிர்ப்புப் பெண்மணி. தன் தாய், வீட்டின் மறைவில் யூதச் சிறுமி ஒருத்திக்கு ரகசியமாய் அடைக்கலம் தந்திருப்பதும் சிறுவனுக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

இவற்றுடன் தனக்கு எழும் அன்றாடச் சங்கடங்கள் பலவற்றிலிருந்தும் மீள்வதற்காக ஒரு கற்பனைத் தோழனைச் சிறுவன் வரித்துக்கொள்கிறான். இழந்த தந்தையையும் ஆதர்சமான ஹிட்லரையும் குழைத்த கலவையாக அந்த நண்பன் உருவாகிறான். மிதமிஞ்சிய தேசப்பற்றுக்கு ஆளாகும் சிறுவன் ஜோஜோ, தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அவற்றுக்குத் துணையாகும் காமெடி ஹிட்லருமே ‘ஜோஜோ ராபிட்’ திரைப்படத்தின் கதையை நகர்த்துகிறார்கள்.

நியூசிலாந்து - பெல்ஜிய நாவலாசிரியரான கிறிஸ்டின் லாலென் எழுதிய ‘கேஜிங் ஸ்கைஸ்’ என்ற நாவலைத் தழுவி, ‘ஜோஜோ ராபிட்’ படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் டைகா வைடிடி உருவாக்கியுள்ளார். அடிப்படையில் நகைச்சுவை நடிகரான வைடிடி, திரைப்படத்தில் இடம்பெறும் நையாண்டி தோற்றத்துக்கான ஹிட்லர் கதாபாத்திரத்தையும் ஏற்றுள்ளார். சிறுவனாக ரோமன் கிரிஃபின் டேவிஸும் அவனது தாயாக ஸ்கார்லெட் ஜோஹன்சனும் நடித்துள்ளனர்.

நேசத்தைப் புறக்கணித்து வெறுப்பை விதைக்கும் அரசு இயந்திரத்தின் கண்ணிகள், அதன்படி அலைபாயும் குடிமக்கள், அவர்களின் போர்வெறி உள்ளிட்டவற்றைச் சிறுவனின் பார்வையிலிருந்து பகடி செய்யவிருக்கும் ‘ஜோஜோ ராபிட்’ திரைப்படம் அக்டோபர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னோட்டம் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x