

டேவிட் பொன்னுசாமி
செப்டம்பர் 8
மரியன்னையின் பிறந்த தினமென்பது, இந்த உலகத்தின் மீட்பரை அளித்த தூய்மையானவரின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆறாவது போப், இந்த நிகழ்ச்சியை ‘விமோசனத்துக்கான விடியல்’ என்று எழுதியுள்ளார்.
மரியன்னையின் பிறப்பு தொடர்பான விவரமான குறிப்புகள் வேதாகமத்துக்கு முந்தைய நூல்களில் காணப்படுகின்றன. மரியன்னையின் பிறப்பைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து எருசலேம் நகரத்தில் செப்டம்பர் எட்டாம் தேதி மரியன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படத் தொடங்கியது. மேரி பிறந்த இடம் இதுவென்றும் கருதப்படுகிறது.
பின்னர் ரோமுக்குப் பரவிய இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு வழிபாட்டு முறையீட்டையும் ஊர்வலத்தையும் புனித செர்கியஸ் சேர்த்தார். உலகம் தீங்குகளின் இருளால் சூழ்ந்திருந்தபோது, மரியன்னையின் பிறப்பு ஒளியின் வருகையாகப் பார்க்கப்படுகிறது. கிறிஸ்துவின் வருகையைத் தெரிவிக்கும் முன்னறிவிப்பு அது. மேலான உலகம் முன்னிற்பதை அறிவிக்கும் திருச்செய்தி அது.
“ஓ கன்னி மரியன்னையே, தேவனின் தாயே, உனது பிறப்பு முழு உலகத்துக்குமான சந்தோஷத்தை அறிவிக்கிறது. நீதியின் சூரிய எழுச்சி உன்னிலிருந்தே எழுந்தது. காலம்காலமாக எங்களைத் தாக்கிவந்த பாவத்திலிருந்து விடுவித்து புனிதத்தால் எங்களை நிறைத்தார். மரணத்தை அழித்து எங்களுக்கு நித்திய வாழ்வை அளித்தார்.” என்று உலகம் முழுக்கத் தேவாலயங்களில் மரியன்னையின் பிறப்பு கொண்டாடப்படுகிறது.