Published : 05 Sep 2019 10:39 AM
Last Updated : 05 Sep 2019 10:39 AM

காற்றில் கீதங்கள் 29: அத்தி வரதருக்கு ஒரு தாலாட்டு!

வா.ரவிக்குமார்

அத்திவரதர் என தற்போது போற்றப்படுபவரின் தொன்மையான பெயர் ஆதி அத்திகிரி வரதன். பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். ஆதி அத்திகிரி வரதனை புஷ்கரணியில் எழுந்தருளச் செய்தவர் பிரம்மன். இதுவே ஐதீகம். தொடக்கத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், அதன்பின் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து ஆதி அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தற்போது ஒருமண்டலம் நடந்த இந்த அத்தி வரதர் தரிசன நிகழ்வுக்குப்பின் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் சயனத்தில் இருக்கிறார் பெருமாள்.

சயனத்தில் இருக்கும் பெருமாளுக்கு அவரின் புகழ் பாடும் தாலாட்டுப் பாடல் ஒன்றை எழுதி இசையமைத்து வெளியிட்டிருக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ம. இசக்கியப்பன். பாடலை எஸ். பொன்னி கண்ணன், கே. பழனியம்மாள் ஆகியோர் மிகவும் நேர்த்தியாகப் பாடியுள்ளனர். இவர்கள் இருவருமே மாவட்ட அரசு இசைப் பள்ளியில் படித்தவர்கள். தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியர்களாக பணியில் இருப்பவர்கள். பொன்னி கண்ணன் மாற்றுத் திறனாளி. பார்வைத் திறன் இல்லாத இவரிடத்தில் இசையின் ஊற்றுக்கண் திறந்திருப்பதை அவரின் குரலின்வழி வெளிப்படுத்தி இருக்கிறார் இசக்கியப்பன்.

தாலாட்டுப் பாடலுக்கேற்ற மிதமான ஒலியை மேற்கத்திய வாத்தியங்களான டிரம்ஸ், கிதார், கீபோர்டின் வழியாகவும் இனிமை குன்றாமல் வழங்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இசக்கியப்பன். பொதுவாக தாலாட்டுப் பாடல்களை நீலாம்பரியில் அமைப்பார்கள். ஆனால் இசக்கியப்பன் அத்தி வரதருக்கான இந்தத் தாலாட்டை, பாபநாசம் சிவனின் பிரபல பாடலான `என்ன தவம் செய்தனை யசோதா’ பாடல் அமைந்திருக்கும் காபி ராகத்தில் அமைத்திருப்பது சிறப்பு. சதுஸ்ர தாள அளவில் திஸ்ர நடையில் பாடலை வித்தியாசமான தாளகதியில் அமைத்திருக்கிறார்.

`வரதா வரதா அத்தி வரதா – அன்பர்க்கு அருள் செய்த அயர்வால் தூக்கம் வருதா…’
என்று சிநேகமாகத் தொடங்கும் பாடல், படிப்படியாக வளர்ந்து `நீருக்குள் சென்றதும் மழையாகப் பொழிகிறாய் அதுவும் உன் அருள்தானே அத்தி வரதா…’ என வளர்கின்றது.

அத்தி வரதர் தாலாட்டுப் பாடலைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x