Published : 04 Sep 2019 11:35 am

Updated : 04 Sep 2019 11:35 am

 

Published : 04 Sep 2019 11:35 AM
Last Updated : 04 Sep 2019 11:35 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: என் ரோபோ, என் உலகம்

my-robot-my-world

மருதன்

இன்னும் ஒரே ஒரு துண்டு எடுத்துக்கொள்ளட்டுமா அம்மா என்று கேட்டால் புன்னகையோடு, அதேநேரம் திடமாக மறுத்துவிடுவார் அம்மா. ”இல்லை, அசிமோவ். நீ ஏற்கெனவே நிறைய சாப்பிட்டுவிட்டாய். தவிரவும், இதெல்லாம் விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்ட சாக்லேட். நீயே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டால் பணத்தோடு கடைக்கு வருபவர்களுக்கு என்ன கொடுப்பது? நம் எதிர்காலமே இந்தக் கடையில்தான் இருக்கிறது அசிமோவ். நான் சொல்வதெல்லாம் உனக்குப் புரிகிறதா, இல்லையா?”

அம்மாவே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு அப்பா உட்கார வைத்து ஒரு முழு வகுப்பே எடுக்க ஆரம்பித்துவிடுவார். ”இதோ பார், அசிமோவ். சோவியத் யூனியனிலிருந்து நாம் அமெரிக்காவுக்குக் குடிபெயரும்போது உனக்கு வயது மூன்று. கையில் பணமில்லை. தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று உதவ இங்கே யாருமில்லை. இரவு, பகலாக உழைத்து, பார்த்துப் பார்த்து பணம் சேர்த்து இப்பொழுது இந்தக் கடையை எடுத்து நடத்திக்கொண்டிருக்கிறோம். நானும் அம்மாவும் உன்னை வளர்த்து ஆளாக்க எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பதை நீ உணர வேண்டும். பள்ளிக்குப் போனோமா, வீட்டுப் பாடம் செய்தோமா, நண்பர்களோடு விளையாடிப் பொழுதைக் கழித்தோமா என்று இருந்துவிடக் கூடாது. குட்டி தோள் என்றாலும் அந்தத் தோளிலும் உன்னால் இயன்ற அளவுக்கு நம் குடும்பச் சுமையை நீ சுமக்க வேண்டாமா?”

பள்ளிக்கூடத்தில் எப்போதாவது நண்பர்கள் வியப்போடும் பொறாமையோடும், உன் அப்பாவும் அம்மாவும் சாக்லேட் கடை வைத்திருக்கிறார்களாமே என்று கேட்கும்போது, ”ஆமாம், அதற்கொன்றும் குறைச்சலில்லை” என்று முணுமுணுத்தபடி நகர்ந்து சென்றுவிடுவார் அசிமோவ்.

”சாக்லேட்டை விடுங்கள். கண்ணைச் சுழற்றுகிறது. உலகமே தலைகீழாகத் திரும்பிக் கிடப்பதைப்போல் இருக்கிறது. தூங்கட்டுமா அப்பா என்று கேட்டுவிடக் கூடாது. இதோ பார் அசிமோவ், இந்தக் கடையை நாம் இன்று எத்தனை நேரம் திறந்து வைத்திருக்கிறோம், எவ்வளவு விற்பனை செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம்முடைய நாளைய தினம் அமையப் போகிறது. சின்னக் குழந்தை மாதிரி எப்போது பார்த்தாலும் என்ன தூக்கம்? 11 மணிக்கெல்லாம் தூங்குமூஞ்சி மரம்போல் இப்படி ஆட ஆரம்பித்துவிட்டால் எப்படி சாக்லேட்டைப் பொட்டலம் கட்டுவாய்? உனக்கு 3 வயதாக இருக்கும்போது...”

ஐயோ இந்தக் கதையை இன்று மட்டும் மாறி மாறி 137 முறை கேட்டுவிட்டேன் அப்பா என்று சொல்லியபடி ஓடுவார் அசிமோவ். ஒரு நாள் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திலிருந்து கடைக்குத் திரும்பி வந்த அசிமோவ், கடையின் ஓர் ஓரத்தில் மர அலமாரிகள் முளைத்திருப்பதையும் அவற்றில் விதவிதமாகப் புத்தகங்கள் தொங்கிக்கொண்டிருப்பதையும் கண்டார். ஐயோ! இனி இந்த விற்பனையையும் சேர்த்துக் கவனித்துக்கொள்ள வேண்டுமா? 12 மணிக்குக்கூட உறங்க முடியாதா? என்னப்பா இது என்று சிணுங்கவாவது முடியுமா? ”இதோ பார் அசிமோவ், எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் வருமானம் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் எதிர்காலத்துக்கு நல்லது. நாம் சோவியத் யூனியனிலிருந்து...” என்று இருவரும் பாட ஆரம்பித்து விடுவார்களே!
அதற்கு இதுவே பரவாயில்லை என்று அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை உருவினார். படிக்கப் போவதில்லை, வகுப்பில் படும் துயரம் போதாதா? படம் மட்டும்தான் என்று சொல்லியபடியே புரட்ட ஆரம்பித்தார்.

பிறகு என்ன ஆனது என்று அசிமோவுக்கு நினைவில்லை. நான் புத்தகத்தைப் புரட்டுகிறேனா
அல்லது அது என்னைப் புரட்டுகிறதா? நான் அதை விழுங்குகிறேனா அல்லது அது என்னை விழுங்குகிறதா? கிளம்பலாம் வா என்று அப்பா இழுப்பதுகூடத் தெரியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நிலைமை மேலும் மோசம் அடைந்தது. ‘போதும் அசிமோவ். இப்படியா கோட்டான் மாதிரி இரவு முழுக்க விழித்திருப்பாய்? கடையைச் சாத்த வேண்டாமா? '

வீட்டுக்குப் போன பிறகும் அசிமோவின் கனவு கலையவில்லை. அந்தக் கதையில் வருவதைப்போல் ஒரு ரோபோ இங்கும் வந்தால் எப்படி இருக்கும்? ரோபோவிடம் கடையை ஒப்படைத்துவிட்டால் இரவு முழுக்கப் பொட்டலம் கட்டிக் கொடுக்குமா? இந்தா இதை முடி என்று உத்தரவிட்டால் கணக்குப் பாடம் போட்டுக் கொடுக்குமா? நாம் சொல்வதை எல்லாம் ரோபோ செய்யும் என்கிறது நான் படித்த கதை.

ஆனால், நாம் சொல்லாததையும் அது செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்? நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று அது முரண்டு பிடித்தால்? எனக்கு உத்தரவு கொடுக்க நீ யார் என்று திருப்பிக் கேட்டால்? நீ செய்யும் எல்லாவற்றையும் உன்னைவிட நான் நன்றாகச் செய்கிறேன். நீ ஏன் என் உத்தரவுக்குக் கீழ்படியக் கூடாது என்று அது கைகளைக் கட்டிக்கொண்டால் என்ன ஆகும்?

அலமாரி முழுக்கத் தேடியும் விடை இல்லை என்பது தெரிந்ததும், இல்லாமல் போனால் என்ன, நானே கண்டுபிடிக்கிறேன் என்று உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார் அசிமோவ். என் ரோபோவுக்கான ஓர் உலகை நானே படைத்துக்கொள்வேன். அந்த உலகில் வாழும் ரோபோ நம்மைப்போல் சுதந்திரமாகச் சிந்திக்கும். நம்மைப்போல் அன்பு செலுத்தும், நம்மைப்போல் சண்டையிடும், நம்மைப்போல் தூங்கும், நம்மைப்போல் புத்தகம் படிக்கும், நம்மைப்போல் பொய் பேசும், விட்டால் என்னைப்போல் கற்பனை செய்யும், என்னைவிடப் பிரமாதமாகக் கதையும் எழுதும்.

அப்படி ஓர் உலகை நான் இன்று உருவாக்கிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அம்மாவும் அப்பாவும். நான் உண்ணாத சாக்லேட் துண்டுகளுக்கும் உறங்காத இரவுப் பொழுதுகளுக்கும் நன்றி.
(ஐசக் அசிமோவ் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். சுமார் 500 நூல்களை எழுதியிருக்கிறார், தொகுத்திருக்கிறார்.)

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com


இடம் பொருள் மனிதர் விலங்குரோபோஎன் உலகம்அம்மாபள்ளிக்கூடம்சாக்லேட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author