Published : 04 Sep 2019 10:50 AM
Last Updated : 04 Sep 2019 10:50 AM

திறந்திடு சீஸேம் 49: பேல் புதையல்

முகில்

ஒரு செய்தியைச் சங்கேத (ரகசிய) வார்த்தைகளால் எழுதுவார்கள். அதாவது எண்களாலும் குறியீடுகளாலும் அந்தச் செய்தியை யாராலும் நேரடியாகப் புரிந்துகொள்ள இயலாதபடி மாற்றுவார்கள். மற்றவர்கள் அந்தச் செய்தியைப் பார்த்து, புரிந்துகொள்வது சவாலான விஷயம். இது மறையீட்டியல் அல்லது குறியாக்கவியல் (Cryptography) என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சங்கேதச் செய்திகள் Ciphertext என்று அழைக்கப்படுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே போர்க்களங்களில் எதிரிகளுக்குப் புரியாத விதத்தில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள இந்தச் சங்கேதச் செய்திமுறை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த தாமஸ் பேல், கி.பி. 1822-ல் தன் நண்பரான ராபர்ட் மோரிஸ் என்பவரைத் தேடிவந்தார். லின்ச்பெர்க் நகரத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்த மோரிஸிடம் சிறிய இரும்புப் பெட்டியைக் கொடுத்தார். அது பூட்டப்பட்டிருந்தது. ‘பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள். பத்து வருடங்களுக்குள் நானோ, என் நண்பர் ஒருவரோ உங்களைத் தேடிவருவோம்.

அப்படி வரவில்லை எனில் பெட்டியைத் திறந்து பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, பேல் கிளம்பினார். சில மாதங்கள் கழித்து ஒரு கடிதம் மட்டும் பேலிடமிருந்து வந்தது. ‘செயிண்ட் லூயிஸைச் சேர்ந்த நண்பரிடமிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வரும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதமும் வரவில்லை. பேலும் திரும்பி வரவே இல்லை. பெட்டியைக் கேட்டு வேறு யாரும் வரவில்லை.

காலப்போக்கில் பேல் கொடுத்த இரும்புப் பெட்டி குறித்து மோரிஸ் மறந்தே போனார். சுமார் 23 வருடங்கள் கழித்து அவரது நினைவில் அந்தப் பெட்டி வந்தது. தேடி எடுத்தார். திறந்து பார்த்தார். உள்ளே ஒரு கடிதமும், சங்கேத வார்த்தைகள் அடங்கிய மூன்று தனித்தனி காகிதங்களும் இருந்தன. என்ன விஷயம்?
தாமஸ் பேல், தன் நண்பர்களுடன் காட்டெருமை வேட்டைக்குச் சென்றார். காட்டெருமையைத் துரத்திச் சென்றபோது ஓரிடத்தில் தடுமாறி விழுந்தார். அவர் விழுந்த இடம் தங்கமும் வெள்ளியும் கிடைக்கும் சுரங்கம். பதினெட்டு மாதங்கள் அங்கே தம் குழுவினருடன் செலவிட்ட பேல், ஏகப்பட்ட பவுண்ட் எடையுள்ள தங்கத்தையும் வெள்ளியையும் தோண்டி எடுத்தார்.

அவற்றை அங்கிருந்து பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கும் பொறுப்பையும் பேலே எடுத்துக்கொண்டார். பதுக்கி வைத்தபின், அவை எங்கே புதைக்கப்பட்டிருக்கின்றன என்ற இடத்தைக் குறிப்பிடும் செய்தியைச் சங்கேத மொழியில் முதல் காகிதத்தில் எழுதினார். தான் புதைத்து வைத்த செல்வத்தில் என்னென்ன இருக்கின்றன என்ற செய்தியைச் சங்கேத மொழியில் இரண்டாம் காகிதத்தில் எழுதினார். இந்தச் செல்வத்துக்கு உரிமை உடையவர்கள் யார் யார் என்ற செய்தியை மூன்றாம் காகிதத்தில் எழுதினார். மூன்று காகிதங்களும் அடங்கிய இரும்புப் பெட்டியைத்தான் மோரிஸிடம் கொடுத்துவிட்டுக் காணாமலேயே போய்விட்டார் பேல்.

சங்கேத மொழியைப் புரிந்துகொண்டு புதையலைத் தேடிப் போகும் அளவுக்குத் திறமை மோரிஸுக்கு இல்லை. எனவே அவர், தன் நண்பரிடம் அந்தக் காகிதங்களைக் கொடுத்தார். அந்தப் நண்பரும் சுமார் 20 வருடங்கள் அந்தச் சங்கேதச் செய்திகளைப் புரிந்துகொள்ளச் செலவிட்டார். அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தைச் சொல்லும் United States Declaration of Independence-ஐ அடிப்படையாக வைத்தே இரண்டாவது காகிதத்தின் சங்கேதச் செய்தி வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொண்டார். அதன்மூலம் இரண்டாவது காகிதத்தின் குறியீடுகளை உடைத்து செய்தியைக் கண்டுபிடித்தார். பேல் புதையலில் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டார். ஆனால், அவரால் காகிதம் ஒன்று மற்றும் மூன்றின் செய்திகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

பேல் காகிதங்களை அந்த நண்பர், ஜேம்ஸ் வார்ட் என்பவரிடம் ஒப்படைத்தார். ஜேம்ஸ், அவற்றை The Beale Papers என்ற பெயரில் அச்சிட்டு, பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். யாரால் இயலுகிறதோ அவர்கள் இந்தச் சங்கேதச் செய்திகளை உடைத்துப் புரிந்துகொண்டு, புதையலை எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஜேம்ஸ் அறிவித்தார்.
பேல், அந்தப் புதையலை மறைத்துவைத்து சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுவரை காகிதம் ஒன்று மற்றும் மூன்றின் செய்திகளை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. யாராலும் பேல் புதையலை வெளியே எடுக்கவும் இயலவில்லை. உலகம் அதைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறது. பெயர் தெரியாத அந்த நண்பர் இரண்டாவது காகிதத்தில் புரிந்துகொண்ட செய்தியின் சுருக்கம் இதுதான்.

‘பெட்ஃபோர்ட் கவுண்டியில், பஃபோர்டிலிருந்து நான்கு மைல் தொலைவில் இந்தச் செல்வத்தைப் புதைத்துள்ளேன். தரையிலிருந்து 6 அடி பள்ளத்தில் இரும்புப் பானைகளில் அவை புதைக்கப்பட்டுள்ளன. 1014 பவுண்ட் தங்கம், 3812 பவுண்ட் வெள்ளியும் அடங்கிய முதல் பகுதி செல்வமானது நவம்பர் 1819-ல் புதைக்கப்பட்டது. நகைகளும், 1907 பவுண்ட் தங்கமும், 1288 பவுண்ட் வெள்ளியும் அடங்கிய இரண்டாவது பகுதி செல்வமானது டிசம்பர் 1821-ல் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட இடமானது முதல் காகிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.’

இந்தச் செல்வத்தின் மொத்த மதிப்பு தங்கம் அமெரிக்க டாலரில் 42 மில்லியன் என்றும், வெள்ளி 1 மில்லியன் டாலர் என்றும், நகைகள் 2,20,000 டாலர் என்றும் ஜனவரி 2017-ல் அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பேல் புதையல் குறித்த ஒவ்வொரு விஷயமும் பொய் என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள். தாமஸ் பேல் என்று ஒருவர் வாழ்ந்ததற்கான ஆதாரமே கிடையாது. அவர் செல்வத்தைப் புதைத்திருக்கிறார் என்பது எல்லாம் கட்டுக்கதை என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், 1810 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பதிவின்படி தாமஸ் பேல் என்று இருவர் இருந்திருக்கிறார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

இந்தச் சங்கேதக் காகிதங்கள் எல்லாம் பொய். அவை ஏனோதானோவென்று அர்த்தமே தராத எண்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். இரண்டாவது காகிதத்தின் ரகசியச் செய்தியை அறிய முடிந்ததல்லவா, எனில், பேல் புதையலும் உண்மைதான் என்று பலரும் நம்புகிறார்கள். சிலர் காகிதச் செய்திகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நேரடியாக வர்ஜினியாவின் பல பகுதிகளுக்குச் சென்று, 6 அடிக்கும் மேல் தோண்டி தேடுதல் வேட்டை நடத்தியிருக்கிறார்கள்.

அதற்காகப் பெரிய அளவில் செலவும் செய்திருக்கிறார்கள். யாருக்குமே வெற்றி கிட்டவில்லை. குண்டுமணித் தங்கம்கூடக் கிடைக்கவில்லை. பேல் என்பவர் உண்மையிலேயே இருந்தாரா? அப்படி இருந்திருந்தார் என்றால், அவரே தனது புதையலை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாரா? இல்லை, இன்னும் அந்தப் புதையல் 6 அடி ஆழத்தில் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறதா? உலகின் தீராத மர்மங்களில் பேல் புதையலும் ஒன்று!

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x