Published : 01 Sep 2019 11:36 AM
Last Updated : 01 Sep 2019 11:36 AM

வாழ்ந்து காட்டுவோம் 21: வாழ்க்கையை மாற்றும் வகுப்புவாரியான உதவி

ருக்மணி

அரசின் நலத்திட்டங்கள் சரியான நபர்களுக்குச் சரியான விதத்தில் சென்று சேர வேண்டும் என்பதற்காக வகுப்புவாரியாக மக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் ஒவ்வொரு வகுப்பினருக்கும் உட்பிரிவுகளும் உண்டு. இவர்கள் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மேம்படுவதற்கென அரசு பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநரகம், சிறுபான்மையினர் நல இயக்குநரகம் ஆகிய மூன்று இயக்குநரகங்கள் மூலம் தனித்தனியே சிறப்புக் கவனம் செலுத்தி, செயல்படுத்திவருகிறது.

கிராமப்புறப் பெண் குழந்தைகளுக்கு

கிராமப்புறப் பெண் குழந்தைகளின் கல்விக்காக ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.

தகுதி

1. பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.25,000/-க்குள் இருக்க வேண்டும்.
2. கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில வேண்டும்.
3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
4. ஆதரவற்ற கைம்பெண், கணவன் இல்லாமல் தனித்துவாழும் பெண்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அணுக வேண்டிய அலுவலர்கள்: சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு/அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
திட்டத்தின் பலன்கள்: மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நடமாடும் சலவையகம்

நடமாடும் சலவையகம் அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு நபர் ஒருவருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. (மானியம் ரூ.2,000, கடன் ரூ.3,000). 1000 பேருக்குப் பொதுக் காலக் கடன் திட்ட விதிமுறைகளின்படி கடனாக வழங்கப்படுகிறது. இந்தக் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்: மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3-வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.

விலையில்லாச் சலவைப்பெட்டிகள்

மேற்குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவராக, சலவைத் தொழிலை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் 40,000 ரூபாய்க்கு மிகாமலும் நகர்ப்புறங்களில் 60,000 ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும். விலையில்லா தையல் இயந்திரங்கள் பெறவும் இதேதான் விதிமுறை. தையல் இயந்திரங்கள் பெற வேண்டும் என்றால் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். 20 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்: சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்.

விவசாயக் கடன்

மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதி அமைத்துப் பயனடையும் வகையில் மானியத்துடன் கூடிய கடன் வழங்குவதற்கான திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் பலன்கள்: இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் 50 சதவீதம் வரை 50,000 ரூபாய்க்கு மிகாமல் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

அணுக வேண்டிய அலுவலர்: மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3-வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.

சிறு விவசாயிகள், காய்கறி பயிரிடுவோருக்கு

ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய்வரை கடன் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம்.
அணுக வேண்டிய அலுவலர்: மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், எல்.எல்.ஏ. கட்டிடம் (3-வது தளம்), 735, அண்ணா சாலை, சென்னை - 600 002.

கல்வி உதவித்தொகை

பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் போன்ற தொழிற்படிப்புகளுக்கான இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் தொழிற்கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வுசெய்யப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்குக் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், திரும்பப் பெற இயலாத கட்டாயக் கட்டணம் ஆகியவை அரசு நிர்ணயித்துள்ள அளவிலும் தேர்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படும். பாலிடெக்னிக் படிக்கிறவர்களுக்கும் இலவசக் கல்வி உதவித்தொகை இதைப் போலவே வழங்கப்படுகிறது. அந்த மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் 1,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்; குடும்பத்தில் வேறு பட்டய/பட்டதாரி எவரும் இருக்கக் கூடாது ஆகியவை அந்த உதவியைப் பெறுவதற்கான நிபந்தனைகள்.

(உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x