Published : 01 Sep 2019 11:30 AM
Last Updated : 01 Sep 2019 11:30 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 21 : மாயமாக மறைந்துவிட்ட ராசாமணி

பாரததேவி

ஜமீன்தாருக்கு நெஞ்சு எகிறியது. ஊரும் ஊர் மக்களும் தன் கண் முன்னே அழியும் முன்னால் நாமே வெள்ளத்துக்குள் விழுந்து செத்துப்போகலாமா என்று யோசித்தார்.

அவர் முகத்தின் வேதனையையும் பதற்றத்தையும் பார்த்துவிட்டு அவருடைய பணியாள் மருதுதான் “எசமான் பயப்படாதீங்க. நம்ம ராசாமணியக் கூப்பிடுங்க. அவன் இந்த மடையையேகூடப் பிடுங்கிட்டுவந்து உங்க கையில கொடுத்திடுவான்” என்று சொன்னான். ஜமீன்தாருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தாற்போல் இருந்தது. உடனே ராசாமணி வரவழைக்கப்பட்டான்.

தன் எதிரில் நின்ற ராசாமணியையே பார்த்தார் ஜமீன்தார். அவன் முகத்தின் வசீகரம் அவர் கண்ணை உறுத்தியது. ஜமீன்தார்கள் மட்டும்தான் முறுக்கு மீசை வைத்திருக்க வேண்டும். ஆனால், இவன் மீசை நம் மீசைக்கும் மேலாகத் திருக்கிவிடப்பட்டிருக்கிறதே என்று அந்த நிலையிலும் அவனைக் கொஞ்சம் பொறாமையோடு பார்த்த ஜமீன்தார் சட்டென ஊரின் நிலைமையை உணர்ந்தவராக, “ராசாமணி மடைக்குள் எதுவோ அடைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சற்று நேரம் இப்படியே போனால் கரை உடைந்து சுத்துப்பட்டு கிராமம் எல்லாமே அழிந்துவிடும். நீதான் எல்லோரையும் காப்பாத்தணும். உனக்கு என்ன வேணுமோ கேள். இங்கே இருக்க வயல்கள், தோப்புகள் ஏன் என் அரண்மனையைக் கேட்டாகூட நான் தரத் தயாரா இருக்கிறேன். போ போய் என் மக்களைக் காப்பாற்று” என்று கெஞ்சினார். அவர் கண்கள் கலங்கி நீரில் மிதந்தன. “எது கேட்டாலும் தருவீங்களா?” என்றான். “எதைக் கேட்டாலும் தருகிறேன். இது பொய் வார்த்தை இல்லை. என் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன். நீ எது வேண்டுமானாலும் தாராளமாகக் கேட்கலாம். இங்கே ஊர் மக்கள் சாட்சியாக நிற்கிறார்கள். அதனால் நீ எது கேட்டாலும் தருகிறேன்” என்றார்.

ராசாமணியின் ஆசை

ராசாமணியும், “எசமான் இம்புட்டுச் சத்தியம் பண்ணிச் சொல்லுதீக. பிறகு நீங்க வார்த்தை மாறக் கூடாது. இதை ஏன் சொல்லுதேன்னா ஏழைச் சொல் அம்பலம் ஏறாது. அதுக்கு எப்பவும் மதிப்பில்லை. அதேன் சொல்லுதேன்” என்றான். “என்னை அப்படி நினைக்காதே. இது என் பிரச்சினை இல்லை. மக்கள் பிரச்சினை. நான் அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும்”
“சரி எசமான். நீங்க இவ்வளவு தூரம் சத்தியம் பண்ணி சொன்னதால கேட்கிறேன்”

“சீக்கிரமா கேள். தாமதப்படுத்தாதே. இன்னும் சற்று நேரம் நீ தாமதப்படுத்தினாகூட இதே இடம் பிணக்காடாகிடும்”
“சரி எசமான். நான் ஒரு நாள், ஒரே நாள் உங்க மகளிடம் பேசணும்”.

ஜமீன்தார் கோகுல்நாத்துக்கு அந்த மழையிலும் உடலுக்குள் தீக்கொழுவைச் செருகினாற்போல் இருந்தது. வேறொரு நேரமாக இருந்தால் ராசாமணியின் தலையில் காலை வைத்து அவனை அப்படியே மண்ணுக்குள் புதைத்திருப்பார். ஆனால், இப்போது அதற்கு நேரமில்லை. அடுத்து, என்ன கேட்டாலும் தருகிறேன் என்று ஊர் மக்கள் முன்னால் தன் தலையிலேயே அடித்துச் சத்தியம் வேறு செய்துவிட்டாரே. அதனால், மெல்லச் சிரித்துக்கொண்டே “என் மகளுடந்தானே பேச வேண்டும்? தாராளமாகப் பேசலாம். நாளை நீ என் அரண்மனைக்கு வா. இப்போது ஊர் மக்களை மட்டுமல்ல; என்னையும் காப்பாற்று” என்றார். அவர் குரல் இறுகியிருந்தது.

ஊற்றெடுத்த வீரம்

ராசாமணி வாய் நிறைய நல்லெண்ணெய்யை ஊற்றிக்கொண்டான். தண்ணீருக்குள் நல்லெண்ணெய்யைக் கொப்புளித்தால் சிறு துரும்புகூடப் பளிச்சென்று தெரியும். கையில் பளபளத்த கத்தியோடு தண்ணீருக்குள் பாய்ந்தான். சற்று நேரத்தில் தண்ணீர் மளமளவென மடை வழியே வெளியேற அதோடு மலைப்பாம்பின் உடல் சிறு சிறு துண்டுகளாக வெளியேறியது. ஒருமுறை புளிய மரத்தில் பழம் உலுக்க ஏறியபோது ஆற்றில் தோழிகளோடு குளித்துக்கொண்டிருந்த ஜமீன்தாரின் மகளைப் பார்த்தது முதல், ராசாமணி பித்துப் பிடித்தவனாகச் சாப்பாடு செல்லாமல் உறக்கமும் கொள்ளாமல் கிடந்தான். தனக்கு இப்படியோர் அதிர்ஷ்டம் வரும் என்று அவன் நம்பவே இல்லை. ஜமீன்தார் மகளைப் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்தில் அந்த வெள்ளச் சுழல்கூடப் பூச்சுழலாக மாறிப்போனது. மலைப்பாம்பின் உடலைக்கூடப் புடலங்காயாக நினைத்துத் தான் துண்டு துண்டாக வெட்டியெறிந்தான்.
கம்மாயில் வந்த வெள்ளமெல்லாம் மடையின் வழியாக வெளியே பாய்ந்து கொண்டிருக்க, மக்கள் பெருமூச்சு விட்டார்கள். பிறகு தங்கள் குடிசையும் குடிசையில் உள்ள பொருட்களும் எப்படிக் கிடக்கின்றனவோ என்ற பதற்றத்தில் அங்கேயிருந்த கூட்டமே மாயமானது. ஆனால், அதன் பிறகு ராசாமணியை யாருமே பார்க்கவில்லை.

ஒரு வருசத்துக்கு முன் ராமேஸ்வரத்துக்கு முடியெடுக்கப் போன வெள்ளையன், “அசல்ல நம்ம ராசாமணி மாதிரியே இருக்கான். ஆனா, கண்ணு ரெண்டும் குருடா இருக்கு. நாக்கும் எப்படியோ வெட்டுப்பட்டு இருக்கு. அவனால பேசவும் முடியல. தாடியும் மீசையுமா ரோட்டாரமா நின்னுக்கிட்டுப் புரியாத வாத்தையில பிச்சை கேட்டுக்கிட்டு இருந்தான். எனக்கு மனசு பொறுக்கல. அவன்கிட்டப் போயி உன்னைப் பாத்தா எங்க ஊருல இருந்த ராசாமணி கணக்கா இருக்கன்னு சொன்னதுதேன் தாமசம். ஆ… ஊ…ன்னு புரியாம என்னத்தையோ பேசிக்கிட்டு என்னைக் கட்டிப்பிடிக்க வந்தான். நான் பதறிப்போயிட்டேன். பசிக்குத்தேன் அப்படி வாரான்னு என் கையில இருந்த கட்டுச்சோத்தையும் ஒத்தை ரூவா துட்டையும் கொடுத்துட்டு வந்தேன். ஆனா, அவன் என்கிட்ட என்னமோ சொல்லுதான். எனக்குத்தேன் புரியல” என்று சொல்ல ஊர்க்காரர்கள் இரக்கப்பட்டு உச்சுக்கொட்டினார்கள்.

கோழிகளோடு பயணம்

அப்போதிருந்த பெண்களுக்கு இருந்த சந்தோசமெல்லாம் பக்கத்துப் பக்கத்தில் இருந்த கிராமங்களுக்குக் கல்யாணம், சடங்கு, ஊர்ப் பொங்கல் என்று போவதுதான். அதுகூடப் பெரியவங்க இருந்தால் ஆடு, கோழிகளை விட்டுவிட்டுப் போவார்கள். இல்லாவிட்டால் பஞ்சாரக் கூடையில் கோழி, குஞ்சுகளைப் பெறக்கிப்போட்டுத் தலையில் சும்மாடு கட்டி வைத்துக்கொள்வார்கள். ஆடு, மாடுகளைக் கையில் பிடித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் சாலை கிடையாது. முள்ளும் கல்லும் கிடக்கும் ஒத்தையடிப் பாதையின் புழுதியில் நடந்துபோவார்கள். யாருக்கும் செருப்புப் போடும் பழக்கம் கிடையாது. சின்னஞ்சிறுசுகளுக்குக்கூடக் கால் சூடு தெரியாது. சிறு சிறு ஊவா, கொரண்டி முள் தைத்துவிட்டால் அவர்களே பிடுங்கி எறிந்துவிட்டுப் போவார்கள்.

சிறுவர்களுக்குப் பொதுவாக இந்த முட்கள்தான் தைக்கும். ஆடு, மாடுகளோடு பெரிய ஆட்கள் இங்கும் அங்குமாக ஓடுவதால் அவர்களுக்குக் கருவேல முள், காக்கா முள் என்று தைத்து வலியால் அவதிப்படுவார்கள். அப்போதெல்லாம் விஷக் கருவேல முள் கிடையாது. முள் தைத்த அந்த நேரமே நிழல் தேடி ஒருவர் உட்கார்ந்துகொள்ள, முள் தைத்தவர் அவர் எதிரே உட்கார்ந்துகொள்வார். முள் எடுப்பவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவரது தொடை மீது பாதத்தை வைத்து உட்கார்ந்துகொள்வார். முள் எடுப்பதில் சிறந்தவர்களாகச் சிலர் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் ‘முள்வாங்கி’யை வைத்திருப்பார்கள். அதை வைத்துக் காலைக் குத்தி முள்ளைத் தோண்டியெடுத்துவிடுவார்கள். முள் ஆழத்தில் இருந்தால் எருக்க இலையை ஒடித்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் அடித்தால் ஆழத்தில் இருக்கும் முள் கொஞ்ச நேரத்தில் மெதுவாக வெளியே தெரியும். குத்தியெடுக்கவும் லேசாக வரும்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x