Published : 01 Sep 2019 11:03 AM
Last Updated : 01 Sep 2019 11:03 AM

என் பாதையில்: பெண்ணாகப் பிறந்தது தவறா?

சில ஆண்டுகளாகவே என்னை மிகுந்த மன வேதனைக்குள் ஆழ்த்திக்கொண்டிருக்கும் விஷயம் இது. பெண்ணியம், சம உரிமை போன்றவை ஆங்காங்கே முழக்கங்களாக ஒலித்தாலும், அவை மனிதர்களின் எண்ணங்களிலும் செயல்களிலும் பெரிதாகப் பிரதிபலிப்பதில்லை.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள் நான். பள்ளிப் படிப்பை முடித்ததும் பல கனவுகளோடு கல்லூரிப் படிப்பைத் தொடங்க விரும்பினேன். கல்லூரிகளைப் பட்டியலிட்டுத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினேன். தமிழகத்தின் சிறந்த பத்துக் கல்லூரிகளில் ஒன்றான ஒரு கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தது. என்னை நினைத்துப் பெருமிதப்படுவார் என்று கல்லூரி அழைப்புக் கடிதத்துடன் அப்பாவின் முன்னால் நின்றேன். “அங்கெல்லாம் படிக்க வேண்டாம். நீ சின்னப் பொண்ணு. எப்படி அவ்ளோ தூரம் அனுப்புவது?” என்று மறுத்துவிட்டார். இது என் அப்பாவின் தன்னிச்சையான முடிவல்ல; பலரிடம் விசாரித்த பிறகு எடுத்த முடிவு இது. அழுது அடம்பிடித்தேன்; கெஞ்சினேன். ஒன்றும் நடக்கவில்லை. எங்களது இந்தப் பாசப்போரில் அம்மா தலையிடவே இல்லை. என் நிலைதான் இப்படியென்றால் என் தோழிகள் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. வேறு வழியில்லாமல் என் வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரியில் சேர்ந்த இளங்கலைப் படிப்பை முடித்தேன். இளங்கலையில் விட்டதை முதுகலையில் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையை மட்டும் விடாமல் பற்றிக்கொண்டிருந்தேன்.

எழுத்தாளர் ஆவது என்ற கனவை நனவாக்கிக்கொள்ள ஊடகத் தொடர்பியல் பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன். சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்த அன்று, என் கால் தரையில் படவே இல்லை. பன்னிரண்டாம் வகுப்பில் என்னைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்த என் அண்ணனை கோயம்புத்தூரில் பொறியியல் படிக்கவைத்து மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதித்திருந்தார் அப்பா. இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது மனமும் மாறியிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் மீண்டும் அவர் முன் நின்றேன். அவரோ கோபம் தலைக்கேறியவராக, “பொண்ணு, பெத்தவங்களோடு இருக்கறதுதான் சரி. எம்.எஸ்சி. இல்லைன்னா பி.எட்., படி. அதுவும் வேணாம்னா போட்டித் தேர்வு எழுது” என்று எனக்கான வாய்ப்புகளைத் தாராளமாக்கி, என் லட்சியத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுப்பது ஒருவரது அடிப்படை உரிமைதானே? ஆனால், அது பெற்றவர்களாலேயே மறுக்கப்படும்போது என்ன செய்வது? அதற்காகச் சோர்ந்து உட்காரவில்லை. என் பாதையில் உள்ள தடைகளை அகற்ற இப்போதும் முயன்றுகொண்டிருக்கிறேன்.
நான் விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தடைக்கு யார் காரணம்? பெண்ணின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய சமூகமா இல்லை என் அப்பா என்கிற தனி மனிதரின் குறுகிய பார்வையா இல்லை நான் பெண்ணாகப் பிறந்ததா?

- சனோபர், பாளையங்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x