Published : 31 Aug 2019 10:27 am

Updated : 31 Aug 2019 10:27 am

 

Published : 31 Aug 2019 10:27 AM
Last Updated : 31 Aug 2019 10:27 AM

விழித்தால் உண்டு தீர்வு

waking-up-is-the-solution

ச.ச.சிவசங்கர்

புற்றுநோய் என்றாலே நமக்கு அளவு கடந்த அச்சம் ஏற்படுவது இயல்பு, அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது என்றாலும், அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் அச்சம் தேவையில்லை, இதில் பூரணமாகக் குணப்படுத்தக் கூடிய புற்றுநோய்களும் உண்டு என்பதே உண்மை.

பொதுவாக ஆண்களைப் பாதிப்பது நுரையீரல், வாய் புற்றுநோய். அதைத் தொடர்ந்து புராஸ்டேட் சுரப்பி (prostate) புற்றுநோய்ப் பாதிப்பு அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1990 முதல் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உள்ளபடியே இந்நோய் இளைஞர்களுக்கு வருவதில்லை. அறுபது வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கே இது ஏற்படுகிறது. தற்போது நாற்பது வயதுடைய ஆண்களுக்கு ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படி அறிந்துகொள்வது?

பெரும்பாலான புற்றுநோய்களைத் தொடக்கத்தில் கண்டறியும் வாய்ப்பு குறைவு, குறிப்பாகச் புராஸ்டேட் சுரப்பிப் புற்றுநோய். நோய் வளர்ச்சி அடையும்போது சிறுநீர் கழித்தலில் பிரச்சினை, அவ்வப்போது ரத்தப் போக்கு போன்றவை ஏற்படும். நாம் இதை வயது மூப்பின் காரணமாக ஏற்படுகிறது என அலட்சியமாக நினைப்பது பேராபத்தில் முடியும்.

ஐம்பது வயது ஆனதும் இது குறித்துப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இந்தப் பரிசோதனையைப் பற்றிய அச்சம் தேவையில்லை, முதலில் (PSA) எனப்படும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும், நோய் இருப்பது தெரிந்தபின் மேற்படி பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

நம் உணவுப் பழக்கம் சரியா?

அடிப்படையில் உணவுப் பழக்கம் என்பது பண்பாட்டோடு இணைந்தது. கிராமத்திலும் நகரத்திலும் அதன் இயங்கு முறை வேறானது, இந்தப் புற்றுநோய்க்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பு குறித்து, புற்றுநோய் நிபுணரும் ரோபாடிக் அறுவைசிகிச்சை மருத்துவருமான என்.ராகவன் இவ்வாறு விவரிக்கிறார்; “ஜப்பானை எடுத்துக்கொள்வோம், அங்கும் இந்தியாவைப் போலப் பாரம்பரிய உணவு முறையைத் தான் பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அங்கு இந்நோய் அதிகரித்திருப்பதற்கு மேற்கத்திய உணவு முறையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

உள்ளபடியே ஜப்பானிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குப் புலம்பெயர்வோருக்கும் இந்தச் சிக்கல் இருக்கிறது. இந்தியாவிலும் அதே நிலைதான், நகரத்தில் வசிப்போரின் உணவுப் பழக்கவழக்கத்தில் மேற்கத்திய உணவு முறையின் தாக்கம் அதிகரிப்பதும் முக்கியக் காரணங்களில் ஒன்று. ஆனால், கிராமத்தில் வசிக்கும் ஆண்களிடம் இந்நோய் அதிகம் தென்படுவதில்லை, நம் பாரம்பரிய உணவு முறை அவர்களைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. நகர்ப் புறங்களில் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் இருக்கும் சிக்கலை கவனிக்க வேண்டியுள்ளது” என்கிறார்.

இந்தியாவின் நிலை

சமீப காலமாக மக்களிடம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் புராஸ்டேட் சுரப்பிப் புற்றுநோய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் சுமார் 45,000க்கும் அதிகமான புராஸ்டேட் சுரப்பி புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தேசியப் புற்றுநோய் அறிக்கையின்படி 2020-ல் இந்நோய் வேகமாகப் பெருகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது.

எப்படித் தடுப்பது?

வளர்ந்துவரும் இந்தப் புற்றுநோயைத் தடுப்பதற்கு முதலில் இப்படி ஒரு நோய் இருப்பதை விளக்க வேண்டும், புராஸ்டேட் சுரப்பிப் புற்றுநோயைப் பொறுத்தவரை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் இதைப் பூரணமாகக் குணப்படுத்த முடியும்.

பரிசோதனைக்கான செலவு குறைவுதான் என்றாலும், பொருளாதாரரீதியில் நலிவுற்றவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, குறிப்பாகத் தமிழ்நாட்டில் இதற்கான மருத்துவ வசதிகள் இருக்கின்றன. மேலும், இந்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அரசு மேற்கொண்டால் நோயின் தீவிரத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கலாம். அரசு விழிக்குமா?

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

புற்றுநோய்உணவுப் பழக்கம்புராஸ்டேட் சுரப்பிப் புற்றுநோய்இந்தியாவின் நிலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author