

கல்லூரியில் பரவசத்தோடு கால் வைக்கும் மாணவ மாணவிகளுக்குத் தயக்கத்தை உருவாக்குவதில் முதலிடத்தில் இருப்பது ’ராகிங்’ எனப்படும் ‘சீண்டல் வதை’. உயர் கல்வி, நட்புலகம், எதிர்காலக் கனவுகள் எனப் பரவசத்தோடு கல்லூரிக்குள் நுழைபவர்களை, ‘ராகிங்’ என்ற பெயரில் நாகரிகமற்ற நடவடிக்கைகளைப் பிரயோகிக்கும் சிலரால் மாணவச் சமூகத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
புதிய மாணவர்களிடம் மனதளவில், உடலளவில் பல்வேறு பாதிப்புகளையும் ராகிங் உண்டு பண்ணுகிறது. ‘ராகிங்’ கொடூரத்தின் உச்சமாக சரிகா ஷா, நாவரசு துயரங்கள் தமிழகத்தின் நிரந்தர வடுக்களாக மாறிவிட்டன. இந்தச் சம்பவங்கள் ‘ராகிங்’ ஒழிப்புக்கான சிறப்புச் சட்டங்களைத் தமிழகத்தில் கொண்டுவரவும் காரணமாக இருந்தன.
எதிர்கொள்தல்
இவற்றையும் மீறி நீங்கள் சேரும் கல்லூரியில் ராகிங் நடந்தால் அச்சமில்லாது சீனியர் மாணவர்களை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கு அளவோடு பதிலளிப்பது நல்லது. ‘ராகிங்’ அளவை மீறும்போது, அச்சமில்லாமல் எதிர்த்துச் செயல்பட வேண்டும். ‘ராகிங்’ வரம்பை மீறும்போதும், எதிர்ப்பை உணர்த்தாவிட்டால் சில குதர்க்கப் பேர்வழிகள் அதை வாய்ப்பாக்கிக்கொள்வார்கள். சட்டமும், கல்லூரி நடைமுறைகளும் ’ராகிங்’கில் ஈடுபடுவோருக்கு எதிராக இருப்பதை, சீனியர் மாணவர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே, எந்த நிலையிலும் அச்சம் தேவையில்லை.
அறிமுகமாகும் சீனியர் மாணவர்கள் மத்தியில், சிறப்பானவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். கல்லூரியில் சேரும் முன்னரே, அங்குப் பயிலும் சீனியர் மாணவர்களிடம் உறவு, நட்பு அடிப்படையில் அறிமுகம் செய்துகொள்வது நல்லது. கல்லூரியில் சேர்ந்த பின்னர் ‘ராகிங்’ தடுப்பு தொடர்பாக, நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகளை அறிந்துகொள்ளுங்கள். தொடர்பு எண்களைக் கையில் வைத்திருங்கள். அமைதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளலாம்; ஆனால், பயந்தவராக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
தயக்கம் வேண்டாம்
கல்லூரி வளாகத்தில் ‘ராகிங்’ சந்திப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் இடங்களை முடிந்தவரை தவிர்க்கலாம். அதேபோல ‘ராகிங்’ அதிகம் நடக்க வாய்ப்புள்ள விடுதி வளாகத்திலும், அது போன்ற இடங்களைச் சில மாதங்களுக்குத் தவிர்க்கலாம். உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், குறுக்கு வழிகள் போன்றவற்றில் தனியாகச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் சக மாணவர்களுடன் குழுவாக இருக்க வேண்டும். அப்படியும் ‘ராகிங்’ எதிர்கொண்டால், அவற்றை நேர்மறையான மனநிலையுடன், நம்பிக்கையோடு எதிர்கொள்ள முயலுங்கள்.
சீனியர் மாணவர்கள் வரம்புகளை மீறி, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, துன்புறுத்தினால், எதிர்த்துச் செயல்படத் தயங்க வேண்டாம். எந்தவொரு சீனியர் மாணவரும் ‘ராகிங்’கால் தனக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதையோ, படிப்பு கெட்டுச் சட்ட நடவடிக்கைக்கு ஆளாகி எதிர்காலம் பாழாவதையோ விரும்பமாட்டார்.
‘ராகிங்’ எதிர்ப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு ‘ராகிங்’ தடுப்புச் சட்டம் 1997-ன் கீழ், உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்ல, பயமுறுத்துவது, தர்மசங்கடமான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்துவது, சத்தம் போட்டு அச்சுறுத்துவது உள்ளிட்டவையும் கிரிமினல் குற்றங்கள். ‘ராகிங்’ செய்பவர்கள் குறித்துக் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும். சட்ட ரீதியாகச் சிறைத் தண்டனை, அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ‘ராகிங்’கிற்கு ஆளானவர் ஒரு பெண்ணாக இருப்பின் ‘ராகிங்’ மேற்கொண்டவர்கள் மீது கூடுதல் சட்டப் பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சட்ட நடவடிக்கைக்கு ஆளான மாணவர் கல்லூரியை விட்டு நிறுத்தப்படுவதோடு, இதர கல்லூரிகளிலும் சேர்த்துக்கொள்ள மறுக்கப்படும் ஆபத்து நேரிடும். ‘ராகிங்’ குறித்து மாணவரின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகம் குறித்துப் புகார் அளித்தால், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை பாயும். இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் அறிவிப்புப் பலகைகளில் இடம்பெற வேண்டியது கட்டாயம். அதனால், ‘ராகிங்’கை குறித்துப் புதிய மாணவர்கள் வீணாகக் கவலைப்பட வேண்டாம்.
ராகிங் தடுப்பு உதவி மையம்
‘ராகிங்’கிற்கு எதிராக உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கல்லூரிகளில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்கீழ் ‘ராகிங்’ அச்சம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் புகார்களைப் பதிவுசெய்யத் தேசிய அளவிலான ஹெல்ப் லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டணமில்லாத அந்தத் தொலைபேசி எண்: 1800-180-5522.
மின்னஞ்சல் தொடர்புக்கு: helpline@antiragging.in.
ஆன்லைனில் புகார்களைப் பதிவுசெய்ய >https://antiragging.in/ . முகநூலில் தொடர >https://www.facebook.com/antiragging.in?fref=nf.