Published : 30 Aug 2019 11:48 AM
Last Updated : 30 Aug 2019 11:48 AM

பிரேசில் பட விழா: அப்பாவைத் தேடி…

பிரேசில் என்றதுமே அங்கிருக்கும் உலகின் மிக உயரமான ‘இயேசு மீட்பர் சிலை’யும் உலகக் கால்பந்து போட்டிகளும் நினைவுக்கு வந்துவிடும். பிரேசில் தேசத்தின் சுவாசமாகக் கால்பந்து விளையாட்டு திகழ்ந்து வந்தாலும் உலகுக்கே சுவாசம் வழங்கும் அமேசான் மழைக்காடுகள் அங்கேதான் இருக்கின்றன.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அவை தீ பிடித்து எரிந்து வருவதை உலகமே தவிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அமேசான் காடுகள், கால்பந்து விளையாட்டு, பிரேசிலின் குடிசைப்பகுதிகளில் உயிர்ப்புடன் விளங்கும் விளிம்புநிலை வாழ்க்கை, பிரேசிலின் நடுத்தர வர்க்க வாழ்விக்கை முறை, போதைப் பொருள் மாபியா உலகம் ஆகியவற்றைக் கதைக்களனாகக் கொண்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளைக் குவித்திருக்கின்றன. கான் படவிழா, சிறந்த அயல் மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவு என உலக அரங்கில் பிரேசில் படங்களின் பங்கேற்பும் கவன ஈர்ப்பும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

தற்போது சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், டெல்லியில் உள்ள பிரேசில் தூதரகத்துடன் இணைந்து செப்டம்பர் 3 முதம் 5-ம் தேதி வரையிலான மூன்று நாள் பிரேசில் படவிழாவை நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் மையத்தில் நடைபெற இருக்கும் இந்தப் படவிழாவில் 1998 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் வெளியான ஐந்து முக்கிய பிரேசில் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

தாயின் மரணத்தால் மனமுடைந்துபோகும் பத்து வயதுச் சிறுவனான ஜோசுவா, தன் தந்தையை அறியாதவன். அவனை, அவனுடைய தந்தையுடன் சேர்க்க விரும்புகிறார் நடுத்தர வயதைக் கடந்த பள்ளி ஆசிரியை. அவர்கள் இருவரும் மேற்கொள்ளும் தேடுதல் பயணத்தை உணர்வுபூர்வமாகவும் பிரேசில் தேசத்தைக் குறுக்கு நெடுக்காகவும் கடந்து செல்லும் படம் வாட்டர் சாலஸ் இயக்கத்தில் 1998-ல் வெளியான ‘சென்ரல் ஸ்டேஷன்’ (Central do Brasil) படவிழாவின் தொடக்கப் படமாகத் திரையிடப்படுகிறது.

இந்தப் படம் மட்டுமல்ல, படவிழாவின் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ‘தி மூவி ஆஃப் மை லைஃப்’ (O Filme da Minha Vida),‘தி ரோட் 47’ (A Estrada 47),‘எலைட் ஸ்குவாடு’ (Tropa de Elite), ‘ஸிங்கு’ (Xingu) ஆகிய மற்ற நான்கு திரைப்படங்களும் தற்கால பிரேசில் சினிமாவை அவதானிக்கச் சிறந்த தெரிவுகள் எனலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x