Published : 28 Aug 2019 11:13 AM
Last Updated : 28 Aug 2019 11:13 AM

திறந்திடு சீஸேம் 48: உடையின் வயது 5 ஆயிரம்!

முகில்

வெளிர் மஞ்சள் நிற உடையாக அது இருந்திருக்கலாம். காலப்போக்கில் பழுப்பேறிப் போயிருக்கிறது. அது ஆண் அணிந்த உடையா அல்லது பெண் அணிந்த உடையா என்று தெரியவில்லை. அந்த உடையை அந்த மனிதன் தன் கைப்படவே நெய்தாரா அல்லது சந்தையில் வாங்கினாரா? என்ன நிகழ்வுக்காக அந்த உடையை அவர் அணிந்திருக்கக்கூடும்? அது முழு நீள அங்கியா, முட்டி தொடும் கவுனா அல்லது சட்டையா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை. ஆனால், V வடிவக் கழுத்துடன் நெஞ்சுப் பகுதியிலும் கைகளிலும் மடிப்புகள் எல்லாம் வைத்துத் தைக்கப்பட்ட அதிநவீன உடை போலவே காட்சியளிப்பது ஆச்சரியம்.

பண்டைய எகிப்தின் முதல் ராஜ்யம் என்பது கி.மு. 3100-ல் நிறுவப்பட்டது. அந்த முதல் ராஜ்யத்தைச் சேர்ந்த கல்லறை ஒன்று, எகிப்தின் கெய்ரோவிலிருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்த தர்கானில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 1913-ல் எகிப்தில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த இங்கிலாந்தின் ஃப்ளிண்டர்ஸ் பெட்ரி என்பவர் அந்தக் கல்லறையையும் ஆராய்ந்தார். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த இந்த வெளிர் மஞ்சள் உடையைக் கண்டெடுத்தார். அதற்கு ‘தர்கான் உடை’ என்று பெயர் அமைந்தது. கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் ஆய்வாளர்கள் அந்த உடையைப் பெரிதாக நினைக்கவில்லை.

பயன்படாத ஏதோ ஒரு துணி என்றே நினைத்தனர். அதனுடன் கிடைத்த மற்ற பொருட்கள் மீதே கவனத்தைக் குவித்தனர். ஆனால், பெட்ரி அங்கே கிடைக்கப் பெற்ற பொருட்கள் அனைத்தையும் பிற்கால ஆய்வுக்குப் பயன்படும் என்று பத்திரப்படுத்தி வைத்தார். அதே ஆண்டிலேயே பெட்ரி, தான் எகிப்தில் கண்டெடுத்த பொருட்கள் பலவற்றையும் இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு விற்றுவிட்டார். 1942-ல் பெட்ரி இறந்து போனார். அதுவரை தர்கானில் பெட்ரி கண்டெடுத்த பல பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

அவை குப்பையைப் போல ஓரிடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. சுமார் 64 வருடங்கள் கழித்து, அதாவது 1977-ல் தர்கான் பொருட்கள் பலவற்றையும் ஆய்வாளர்கள் கையில் எடுத்தனர். அதில் அந்தத் தர்கான் உடையும் இருந்தது. பழைய ஆடைகளை ஆய்வு செய்வதில் நிபுணராக விளங்கிய ஸீலா லேண்டி, தர்கான் உடை மீது படிந்திருந்த மண்ணைக் கவனமாக அகற்றினார். அது பண்டைய எகிப்தியர்கள் பயன்படுத்திய ‘லினன் துணி’ என்று அறிந்தபோது லேண்டி ஆச்சரியத்தில் ஆகாயம் வரைக்கும் துள்ளிக் குதித்தார்.

லினன் துணி என்பது ஒருவகையான சணல் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படுவது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்தியர்கள் லினன் ஆடைகளை நெய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். சணல் செடியைத் தகுந்த பருவத்தில் அறுவடை செய்வார்கள். அந்தத் தண்டுகளைக் கட்டுக்கட்டாகக் கட்டி, வெயிலில் நன்றாக உலர வைப்பார்கள். பிறகு தண்டுகளை முறையாக ஒழுங்குபடுத்திக் கட்டி, அதன் மீது சுமையை ஏற்றி, நீரில் நன்றாக ஊறப்போடுவார்கள். ஊறவைக்கும் கால அளவைப் பொறுத்து நாரின் நிறம், வலிமை போன்றவை மாறுபடும். பிறகு நீளமான நார், நீளம் குறைந்த நாரைப் பிரித்தெடுப்பார்கள். அவற்றிலிருந்து விதவிதமான லினன் துணிகளை நெய்தார்கள். துணிகளில் வண்ணங்கள் ஏற்றப்பட்டன.

ஓவியங்களும் வரையப்பட்டன. எகிப்திய மதகுருமார்கள் வழிபாட்டுச் சடங்குகள் செய்யும்போது லினன் துணியை உடுத்திக்கொண்டார்கள். சாதாரணர்களுக்கும் விருப்பமான ஆடையாக லினன் துணிகளே இருந்தன. எகிப்தியர்களிடமிருந்துதான் மத்தியக் கிழக்குப் பகுதிகளிலும் ஐரோப்பிய ராஜ்யங்களிலும் லினன் துணி பரவியது.
ஸீலா லேண்டி, தர்கான் லினன் துணியைப் பொறுமையாக ஆய்வுசெய்தார். அது முழு நீள உடையா, ஆணுடையதா, பெண்ணுடையதா என்று எல்லாம் லேண்டியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், எகிப்தின் முதல் ராஜ்யக் காலத்தில் கிடைத்த பொருட்களுடன் இந்த உடையும் கண்டெடுக்கப்பட்டதால், இதுவும் அதே காலத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினார்.

அப்போது கார்பன் வயதுக் கணிப்பின்படி உடையின் வயதைக் கண்டறிய அதிக அளவில் துணி தேவைப்பட்டது. எனவே அந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு 2.24 மில்லி கிராம் அளவு தர்கான் லினன் உடை, நவீன ரேடியோ கார்பன் வயதுக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வாளர்கள் 95% துல்லியமான முடிவை வெளியிட்டார்கள். ‘தர்கான் உடை கி.மு. 3482-க்கும் கி.மு. 3102-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது.’ அதாவது சுமார் 5,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்டதில் மிகவும் பழமையான, நெய்யப்பட்ட உடை இதுவே. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி அருங்காட்சியத்தில் பெட்ரி பெயரில் அமைக்கப்பட்ட எகிப்தியப் பிரிவில் இந்தத் தர்கான் உடை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப் பழமையான பேண்ட், அதாவது முழுநீளக் கால்சட்டை 2014-ல் சீனாவில் கண்டெடுக்கப்பட்டது. வடமேற்கு சீனாவின் சின்ஷியாங் மாகாணத்தில் அமைந்திருக்கும் யாங்காய் கல்லறைகளில்தாம் அது புதைந்து கிடந்தது. இடுப்புப் பகுதி, இரண்டு கால்கள் என்று மூன்று பகுதிகள் கொண்ட கால்சட்டை. துணியின் வண்ணத்தை ஒத்த நூலால் சேர்த்துத் தைக்கப்பட்டிருக்கிறது. குதிரை மீது ஏறிப் பயணம் செய்வதற்கேற்ப கனமான துணியால் தயாரிக்கப்பட்ட இதில், ஏராளமான வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. பாலைவனப் பகுதியில் அமைந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்டதால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இது சிதையாமல் இருந்திருக்கிறது. இந்தப் பழமையான முழுநீளக் கால்சட்டையின் வயது சுமார் 3,000 ஆண்டுகள்.

மத்திய எகிப்தில் கிரேக்கத்தின் காலனியாக இருந்த ஆக்ஸிரின்கெஸ் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கல்லறை ஒன்றில் ஒரு ஜோடி சிவப்பு நிறக் காலுறைகள் கண்டெடுக்கப்பட்டன. பெருவிரலுக்கும், மற்ற விரல்களுக்கும் இடையே பிளவு இருப்பதுபோல் அமைந்த காலுறைகள் இன்றைக்கும் புதிது போலவே காட்சியளிக்கின்றன. உலகின் மிகப் பழமையான இந்தக் காலுறைகளின் வயது சுமார் 1,600 ஆண்டுகள். நார்வேயின் பனிப்பரப்பில் 2013-ல் உலகின் பழமையான ஸ்வெட்டர் கண்டெடுக்கப்பட்டது.

செம்மறியாட்டின் தோலினால், கடும்குளிரைத் தாங்கும்விதமாகத் தடிமனாக உருவாக்கப்பட்டது. ஆறடி உயரமுள்ள மனிதன் ஒருவன் அணியும் நீளத்தில் இந்த ஸ்வெட்டர் அமைந்திருக்கிறது. இதன் வயது சுமார் 1,700 ஆண்டுகள்.
புவி வெப்பமயமாதலால் பனிப்பரப்புகள் மேலும் மேலும் தொடர்ந்து உருகும். எனவே வருங்காலத்தில் இன்னும் பல பழமையான பொருட்கள், பொக்கிஷங்கள் கிடைக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதற்காக வருத்தப்படுவதா? சந்தோஷப்படுவதா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x