Published : 28 Aug 2019 10:54 AM
Last Updated : 28 Aug 2019 10:54 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஞாயிறு விடுமுறை ஏன்?

ஏழு நாட்களில் ஞாயிற்றுக்கிழமையை மட்டும் விடுமுறை நாளாக ஏன் வைத்திருக்கிறார்கள், டிங்கு?

– தா. லோகேஸ்வரி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவ மதம் பின்பற்றப்படுகிறது. அவர்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பிரார்த்தனைக்கும் ஓய்வுக்குமான நாளாக ஒதுக்கியிருக்கிறார்கள். ஹீப்ரு, கிறிஸ்தவ நாட்காட்டிகளில் ஞாயிறுதான் வாரத்தின் முதல் நாளாக இருக்கிறது. தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization (ISO), ஞாயிற்றுக்கிழமையை வாரத்தின் ஏழாவது நாளாக அறிவித்தது. 1844-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை நாளாக இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் மில் தொழிலாளர்கள் வாரத்தின் 7 நாட்களும் கடினமாக வேலை செய்தார்கள். மகாத்மா ஜோதிராவ் புலேவின் நண்பரும் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத் தலைவருமான நாராயண் மேகாஜி லோகன்டே, ஆங்கிலேயரிடம் ஞாயிறு அன்று விடுமுறை விடச் சொல்லி, கோரிக்கை வைத்தார். ஆங்கிலேயர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வு எடுத்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

சமூகத்துக்கு வேலை செய்வதற்கும் ஓய்வுக்கும் ஒருநாள் விடுமுறை வேண்டும் என்று மனம் தளராமல் 7 ஆண்டுகள் போராடினார். 1890-ம் ஆண்டு ஜூன் 10 அன்று ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தது ஆங்கிலேய அரசாங்கம். அன்றிலிருந்து இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால், இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினம் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, லோகேஸ்வரி. என்னுடைய பாடப் புத்தகத்தில் எயிட்ஸ் நோயாளியின் ரத்தம் இன்னொருவருக்குச் செலுத்தப்பட்டால் அவருக்கும் நோய் பரவும் என்று இருக்கிறது. அப்படி என்றால் எயிட்ஸ் நோயாளியைக் கடித்துவிட்டு, இன்னொருவரைக் கொசு

கடிக்கும்போது எயிட்ஸ் பரவுமா, டிங்கு?

–பி. மேஹசூரஜ், 12-ம் வகுப்பு, நியூ க்ரெசென்ட் மெட்ரிக். பள்ளி, புளியங்குடி.

கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. ஆனால், எச்ஐவி கிருமிகள் பரவுவதில்லை. கொசு போன்ற பூச்சிகள் எயிட்ஸ் நோயாளியைக் கடித்துவிட்டு, இன்னொருவரைக் கடிக்கும்போது அவர்களுக்கு எச்ஐவி கிருமிகள் பரவுவதில்லை. ஏனென்றால் ஊசியைப்போல் கொசுவின் உறிஞ்சுகுழல் இல்லை. கொசுவின் உறிஞ்சுகுழலில் இரண்டு குழாய்கள் உள்ளன. கொசு நம்மைக் கடிக்கும்போது, ஒரு குழாயிலிருந்து உமிழ்நீரை நம்மீது செலுத்துகிறது.

இன்னொரு குழாய் மூலம் ரத்தத்தை உறிஞ்சுகிறது. உறிஞ்சிய பிறகு காற்றில் பறந்து சென்று இன்னொருவரைக் கடிப்பதற்குள் எச்ஐவி கிருமி சக்தியை இழந்துவிடுகிறது. இதனால் எயிட்ஸ் நோயாளிகளைக் கடித்த கொசுக்கள், மற்றவர்களைக் கடித்தாலும் எச்ஐவி கிருமிகள் பரவுவதில்லை, மேஹசூரஜ். எயிட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் பெரும்பாலான நேரத்தை அவர்களுடனே செலவிடுகிறார்கள். அவர்களைக் கடித்த கொசுக்கள் இவர்களைக் கடித்தாலும் நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

வயதானால் நமது சிந்திக்கும் திறனும் ஞாபக சக்தியும் குறையுமா, டிங்கு?

–ஆ. பெனட் ஏசையா, 9-ம் வகுப்பு, என்.எஸ்.கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளி, கூடலூர்.

குறையும், குறையாது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாத கேள்வி இது. இன்றும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வயதாகும்போது புதிய செல்கள் தோன்றுவது குறையும். உடலின் பல உறுப்புகளும் திறன் குன்றும். அதேபோல் மூளையின் சில பகுதிகளில் செல்களின் இழப்பு ஏற்படுகிறது. இதனால் கற்றல், நினைவுத்திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.

அதற்காக வயதானால் சிந்திக்கும் திறனும் நினைவுத்திறனும் குறைந்துவிடும் என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்கவழக்கங்களோடு மூளைக்கும் வேலை கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் வயதானாலும் இளம் வயதுக்காரர்களைவிட அதிக நினைவுத்திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. பிற பிரச்சினைகளைவிட, மூளையை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதே நினைவுத்திறன் குறைவதற்கான காரணம் என்கிறார்கள், பெனட் ஏசையா.

ஒருவரின் வசதி, செய்யும் வேலையைப் பொறுத்துதான் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா, டிங்கு?
(தோட்ட வேலை செய்பவருக்கு என் தாத்தா வயது இருக்கும். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள்வரை அவரைப் பெயர் சொல்லிதான் அழைக்கிறார்கள்.)

–ஆர். திவ்யலஷ்மி, 8-ம் வகுப்பு, நிலக்கோட்டை.

இன்றும் கூடவா இப்படி எல்லாம் அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அதிர்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கு இது தவறு என்று தோன்றியதால்தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. மரியாதை என்பது ஒருவரின் வசதி, செய்யும் வேலையைப் பொறுத்துக் கொடுக்கக் கூடியது அல்ல. அவர் எந்த வேலை செய்தாலும் வேலையே செய்யாவிட்டாலும் எவ்வளவு ஏழ்மையாக இருந்தாலும் கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். மரியாதை என்பது சக மனிதருக்குக் கொடுக்கக்கூடிய அடிப்படையான விஷயம்.

என் தாத்தா வீட்டில் துப்புரவுத் தொழிலாளர் ஒருவரை குழந்தைகள்கூடப் பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். அவரை ‘மாமா’ என்று அழைக்கச் சொல்லிப் பழக்கப்படுத்தினார் அம்மா. காலப்போக்கில் அக்கம்பக்கத்து குழந்தைகளும் எங்களைப் பார்த்து மாமா என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அடுத்த தடவை தோட்ட வேலை செய்ய அவர் வரும்போது, ‘தாத்தா’ என்று அன்போடு அழையுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவருக்கு மரியாதை கொடுப்பார்கள், திவ்யலஷ்மி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x