

டாக்டர். ஆர். கார்த்திகேயன்
ஆரோன் பெக் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் 1976-ல் துக்க நோய் கொண்டோரிடம் சில சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். அவர்களிடம் மூன்று எதிர்மறை எண்ணங்கள் உள்ளன என்று வகைப்படுத்துகிறார். ஒன்று, தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை. இரண்டு, தனக்கு யாரும் உதவ முடியாது என்று எண்ணுதல். மூன்று, வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
Worthlessness, Helplessness and Hoplessness என்ற இந்த மூன்றும் Cognitive Triad என்கிறார். வேதி மாற்றத்தால் வரும் துக்க நோயில் இவ்வகை எதிர்மறை எண்ணங்கள் வருவது அதன் ஆதார அறிகுறிகள் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். ஆனால், இந்த மூன்று எதிர்மறை எண்ணங்கள் மாற்றப்படும்போது துக்க நோய் குறைவதாக ஆரோன் பெக் நடத்தை சிகிச்சைகள் மூலம் நிரூபித்தார். ரசாயனக் குறைபாட்டை ரசாயன மருந்துகள் மூலம் சரி செய்வது ஒரு முறை என்றால், ரசாயனக் குறைபாட்டை, சிந்தனை சிகிச்சை மூலம் நிவர்த்திசெய்வது மாற்று வழி.
உருக்குலைக்கும் 3 எண்ணங்கள்
சிந்தனைத் திரிபுகள் அனைவருக்கும் பொதுவானவை. நம்மைத் தற்காலிகத் துக்கத்துக்கு இட்டுச் செல்லும் வலிமை கொண்டவை. அதனால் அவற்றைப் புரிந்து மாற்றியமைத்தால் பல பிரச்சினைகள் தீரும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில், தன் மதிப்பை உணராத எண்ணங்கள் (worthlessness). “நான் எதுக்குமே லாயக்கில்ல”, “இந்த வயசுல எல்லாரும் எப்படி இருக்காங்க.. என்னால முடியலை”, “ என் கிட்ட ஒரு விஷயம்கூடச் சொல்லிக்கற மாதிரி இல்ல!”- இப்படித் தன்னை நொந்துகொள்ளுதல் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்தவை. தன்னிடம் இல்லாதவற்றைப் பட்டியலிடுவார்கள்.
சுயமதிப்பை இழக்கையில் சுய பச்சாதாபமும் சுய வெறுப்பும் சேர்ந்துகொள்கின்றன. அதை நேரடியாகச் சொல்ல முடியாத சூழலில் பிறர் மதிப்பைக் குறைத்துப் பேசுவார்கள். பிறரிடம் எரிச்சல் காண்பிப்பார்கள். ஆதார ஊற்று ஒன்றுதான். சுயமதிப்பைக் காவு கொடுக்கும் எண்ணங்கள். இரண்டாவதாக, தனக்கு உதவ யாருமில்லை என்ற எண்ணம் (Helplessness) “யாருமே என்னைக் காப்பாற்ற முடியாது”, “ஒருத்தரும் உதவின்னா ஓடி வரப்போறதில்லை”… இந்த எண்ணங்கள் சோகத்தையும் தனிமையையும் கொடுக்கும். உதவிக்கரம் கொடுப்போரையும் தள்ளிப் போக வைக்கும்.
மூன்றாவதாக, வருங்காலத்தில் எந்த முன்னேற்றமும் வரப்போவதில்லை என்ற எதிர்மறை எண்ணம் (Hopelessness). “எதுவும் மாறப்போறதில்லை”, “எது பேசியும் என்ன செஞ்சும் ஒண்ணும் ஆகாது”, “வாழறதே அர்த்தம் இல்லை. புதுசா என்ன ஆகப்போகுது?”…இந்த எண்ணங்கள்தாம் வாழ்க்கை மீதுள்ள நம்பிக்கையை முற்றாக முறித்துப்போடும். பலர் தற்கொலையை நாட வைக்கும் எண்ணங்கள் இவைதாம்.
நல்லதைப் பட்டியலிடுங்கள்
முதலில் சுயமரியாதையை வளர்க்கும் எண்ணங்களை வளர்க்க வேண்டும். குறைகளைப் பட்டியலிடும் மனதிடம் நிறைகளைக் காட்ட வேண்டும். பிரச்சினைகளாய்த் தேடும் மனத்திடம் சாதனைகளைக் காட்ட வேண்டும். எதிர்மறையானவற்றைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் மனோபாவத்தைக் கை விட வேண்டும். “என் வாழ்க்கையே வீண். ஒன்றுகூடச் சரியில்லை!” என்று சொல்லி சிகிச்சைக்கு வருவோரிடம் ஒரு செயலைச் செய்யச் சொல்வேன். “உங்களிடம் உள்ள எல்லா நல்ல விஷயங்களையும் பட்டியலிடுங்கள்- அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி.”
உங்களை நீங்கள் மனதார முழுமையாக விரும்ப வேண்டும். உங்கள் மதிப்பை உணர வேண்டும். சிறு குறைகளையும் பிரச்சினைகளையும் வைத்துக்கொண்டு மொத்த ஆளுமையையும் தள்ளுபடி செய்யக் கூடாது.
அடுத்து, பிறர் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள் யாவும் உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களே.
மகாபாரதக் கதையில் வருவதுபோல “ஊரில் அனைவரும் உத்தமர்கள்” என்று சொன்ன தருமனும் வரும் “ஊரில் அனைவரும் அயோக்கியர்கள்” என்று சொன்ன துரியோதனனும் தங்கள் ஆளுமையை வைத்துத்தான் பிறரை எடை போட்டார்கள். “யாரும் உதவ மாட்டார்கள்!” என்பது “நான் யாருக்கும் உதவ மாட்டேன்!” என்ற செய்தியைத்தான் சொல்கிறது. பிறர் உதவியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது பிறருக்கு உதவுவது. “ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்!” என்பது ஆழம் மிகுந்த முதுமொழி.
துக்கத்தை விரட்ட சுயநலத்தை விரட்டுங்கள்!
துக்கம் சுயநலத்தை மட்டும்தான் பேணும். பிறர் நலம் காணச் செய்யும் செயல்கள் அனைத்தும் துக்கத்தை விரட்டும். சுயமரியாதையும் பிறர் நலனையும் அதிகரிக்கச் செய்யும். ‘ஊர் கூடித் தேர் இழுத்தல்’ போன்றவற்றில் பல சமூக உளவியல் செய்திகள் உள்ளன. பிறருடன் சேர்ந்து செய்யும் உதவி போன்ற காரியங்கள் மூளையில் ஆக்ஸிடோசினைச் சுரக்க வைத்து மனதுக்கு உற்சாகம் தருபவை. உங்களுக்கு உதவி தேவையா, நீங்கள் பிறருக்கு உதவத் தயாராகுங்கள்!
Hopelessness என்பது வருங்காலத்தைப் பற்றியது. அடுத்த நொடி நடக்கப் போவது யாருக்கும் தெரியாது. வாழ்க்கை அடுத்த நொடியில் நாம் உயிருடன் இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இயங்குகிறது. இதைத் தர்க்கரீதியில் ஆராய்ச்சி செய்யவே முடியாது. நாளை என்ற நாளை நினைத்து நாம் இன்று உற்சாகமாய்ப் பணி செய்வதுதான் மனிதப் பிறவியின் சிறப்பு. எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது நம்பிக்கை.
கேள்வி: எப்போதும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள். வேலை செய்யும்போதுகூட நெருக்கடியில்தான் மனம் வேலையில் லயிக்கிறது. நேரம் கிடைத்தால் மனம் தன் போக்கில் போகிறது. 27 வயதில் இவ்வளவு குழப்பமா என்று இருக்கிறது. மனத்தை அடக்க என்ன வழி, என்ன நோய் இது?
பதில்: மனத்தை ஏன் அடக்க வேண்டும்? ஒன்றை அடக்க நினைப்பது ஆதிக்க மனோபாவம். தவிர, அதைக் கண்டு பயப்பட்டால்தான் அதிகாரத்தைச் செலுத்தி அடக்கத் தோன்றும். மனத்தைப் புரிந்துகொள்ள அதன் போக்கில் விட்டு அமைதியாய் அதைக் கவனியுங்களேன். வரும் எண்ணங்கள் எல்லாம் உங்களுடையவைதாமே? அவற்றையும் ஏற்றுக்கொள்ளுங்கள். “இது இப்படி இருக்கக் கூடாது.
அப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற உங்கள் நிராசையும் பதற்றமும் எங்கிருந்து வருகின்றன என்று பாருங்கள். தன்னை மறந்து செய்யும் வேலையில் எண்ணங்கள் வராது. வேலை ஏன் நிறைவைத் தரவில்லை என்று யோசியுங்கள், உங்கள் செயல்பாடுகள் பற்றிய உள்வர்ணனைகள்தான் எண்ணங்கள். அவற்றை அடக்க நினைக்காமல் கூர்ந்து கவனியுங்கள். அவை சொல்லும் செய்திகள் புரியும்.
(தொடரும்)
கட்டுரையாளர்
மனிதவளப் பயிற்றுநர்.