Published : 27 Aug 2019 10:34 am

Updated : 27 Aug 2019 10:34 am

 

Published : 27 Aug 2019 10:34 AM
Last Updated : 27 Aug 2019 10:34 AM

கரும்பலகைக்கு அப்பால்: தேர்வு என்ற சிறைச்சாலை

prison

ரெ.சிவா

தேர்வு என்ற சொல்லே குழந்தைகள் மனதுள் மிகப்பெரிய பயத்தை உருவாக்குகிறது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் தேர்வறை பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதுவே தெரிந்தவற்றையும் தெரியாமல் ஆக்கிவிடுகிறது. தேர்வு உருவாக்கியுள்ள பயமே குழந்தைகள் தவறு செய்யக் காரணமாகவும் அமைகிறது.


அரசு நடைமுறைகள் தவிர மாவட்ட அளவிலான அதிகாரிகள் சொல்லும் முறைகளும் சேர்ந்துகொள்ளும். அப்படித்தான் வாரம்தோறும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவு வந்தது. மாலை நேரச் சிறப்பு வகுப்பு தேர்வுக்கானதாக மாறியது. எனக்கு வாரத்துக்கு ஒரு நாள் என்றாலும் மாணவர்களுக்கு எல்லாநாளும் தேர்வு. அடிக்கடி வைக்கப்படும் தேர்வுகளே கற்றலுக்குப் பெரும் தடை.

பார்த்து எழுதிக்கொள்ளலாம்!

பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்பு தொடங்கியது. புத்தகத்தைத் தீவிரமாக மாணவர்கள் வாசித்துக்கொண்டிருந்தனர். “தம்பிகளா, கேள்விகளை எழுதிக்கொள்ளுங்கள். கவனமா கேட்டுக்கோங்க. நான் ஸ்டார்ட் சொன்னதும் பதில் எழுதத் தொடங்கணும். சரியா பத்து நிமிஷம்தான். ஸ்டாப் சொன்னதும் எழுதுவதை நிறுத்திடணும்” என்றேன்.
மாணவர்களின் முகத்தில் உற்சாகம் குறைந்து வாடிப்போனது. “இந்த முறை மட்டும் ஒரு சலுகை தர்றேன். நேரத்தில் மாற்றம் இல்லை. புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொள்ளலாம்” என்றேன்.

மாணவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர். நானும் சிரித்துக்கொண்டே ஸ்டார்ட் சொன்னேன். பேச்சு சத்தம் குறைந்து தாள்களைத் திருப்பும் சத்தம் கேட்கத்தொடங்கியது. ஆங்காங்கே சிலர் பக்கத்தில் இருப்பவரிடமும் விடைகளைக் கேட்டுக்கொண்டனர். “இன்னும் ஒன்பது நிஷம்தான் இருக்கு. சீக்கிரம் தேடுங்க. எல்லாமே பாடத்துக்குள்ளேதான் இருக்கு தேடுங்க” என்று சத்தமாகச் சொன்னேன்.

ஒவ்வொரு நிமிஷமும் எனது அறிவிப்பின் குரல் அதிகமாகவும் வேகமாகவும் இருந்தது. கடைசி நிமிடத்தில் பத்து வினாடிகளுக்கு ஒருமுறை நேரம் சொன்னேன். கடைசிப் பத்து விநாடிகளை உரக்கச் சொல்லிக்கொண்டே வந்தேன். நேரம் முடிந்ததும் எழுதுவதை நிறுத்தச் சொன்னேன். சில வினாடிகள் கழிந்தபின் புத்தகங்கள் மூடப்பட்டன.

தேர்வு எப்படி இருந்தது?

“சரியான விடைகளைச் சொல்கிறேன். நீங்கள் எழுதியிருப்பது சரி என்றால் டிக் போட்டு மதிப்பெண் போட்டுக்கோங்க. தவறாக இருந்தால் உங்கள் பதிலுக்குப் பக்கத்தில் சரியான பதிலை எழுதி வச்சுக்கோங்க” என்றேன். அவர்களே திருத்தி முடித்தபின் மதிப்பெண்களைக் கேட்டேன். அதிகபட்சமாக நான்குபேர் ஆறு மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள். மற்றவர்கள் அதற்குக் கீழேதான்.

“தேர்வு எப்படி இருந்தது?” என்று மாணவர்களிடம் கேட்டேன்.
“செமையா இருந்தது. ஆனா பதற்றத்தில் பதில் தேட முடியல” என்றார் ஒரு மாணவர்.
“இதேமாதிரி பப்ளிக்ல பார்த்து எழுதச் சொன்னா நல்லா மார்க் எடுத்திடுவோம்” என்று மற்றொரு குரல் எழுந்தது. பலரும் அதை ஆமோதித்தனர்.
“இப்போ பார்த்துதானே எழுதுனீங்க! ஏன் ஆறுக்கு மேல் யாரும் மதிப்பெண் எடுக்கல?” என்று கேட்டேன். கண்டுபிடிக்க முடியல என்றனர்.

“தம்பிகளா, தேர்வுக்கு முன்பே தேர்வு குறித்த பயம் மனதுள் நிறைகிறது. தேர்வு அறைக்குள் நிறைய கட்டுப்பாடுகள். நேரம் குறித்த அறிவிப்புகள். இவை எல்லாமே ஒன்று சேர்ந்து படிச்சதையும் மறக்க வைக்குதுனு நினைக்கிறேன். பாடப்பகுதியை வாசிச்சுக்கிட்டே இருந்தாபோதும். வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியா தேர்வைச் சந்திக்கணும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்.

நாளை ஒரு படம் பார்க்கலாம்” என்றேன். ர்வு குறித்த பல படங்கள் தேர்வறைக் குழப்பங்களையும் திருட்டுத் தனங்களையுமே கட்சிப்படுத்தியுள்ளன. Pip என்ற அனிமேஷன் படம் சற்றே மாறுபட்டது. மறுநாள் படத்தைப் பார்த்தோம். படம் குறித்த எங்கள் உரையாடல் தொடர்ந்தது. வினாத்தாள் வடிவமைப்பு குறித்து எவ்வளவோ விவாதிக்கிறோம். பல்வேறு கட்டுப்பாடுகளுக்குள் இரண்டரை மணி நேரம் குழந்தைகளைச் சிறை வைக்கும் தேர்வு முறைகளில் மாற்றம் குறித்து ஏன் யாருமே பேசுவதில்லை?

‘Pip’ குறும்படத்தைக் காண இணையச் சுட்டி:

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைகரும்பலகைக்கு அப்பால்தேர்வுசிறைச்சாலைPrisonசிறப்பு வகுப்புPipAnimated Film

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author