Published : 26 Aug 2019 11:43 AM
Last Updated : 26 Aug 2019 11:43 AM

வெடிக்க காத்திருக்கும் பூமி எனும் பலூன்

பேராசிரியர் ரு.பாலசுப்ரமணியன்
rbalu@gmail.com

ஜூலை 29, 2019. இந்த ஆண்டின் 209-வது நாள். ஆனால், இவ்வாண்டு முழுக்க நாம் பயன்படுத்த வேண்டிய இயற்கை வளங்களை இந்த 209 நாட்களிலேயே பயன்படுத்திவிட்டோம் என்கிறது ஐ.நா. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, உலகப் பாதப்பதிவுப் பிணையத்தின் (Global Footprint Network) அறிக்கை. இதனாலேயே இந்த நாளை "புவிவளத்தை விஞ்சிய நாள் " (Earth Overshoot Day) என்கின்றனர். மனிதன் பயன்படுத்தும் இயற்கை வளங்களை மறு உற்பத்தி செய்வதற்கும், மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பல்வகைக் கழிவுகளை உட்கிரகித்து சூழலைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் இயற்கை ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொள்ளும்.

அதன்படி பார்க்கையில், 209 நாட்களிலேயே புவிவளத்தை விஞ்சும் நாள் வந்து விட்டது எனில் அதன் பொருள், ஓராண்டு முழுவதும் இயற்கையால் மறுவளர்ப்புச் செய்யப்படும் மரம், மீன் வகைகள் போன்ற வளங்களை 209 நாட்களிலேயே பயன்படுத்திவிட்டோம் என்பதுடன், ஓராண்டில் உட்கிரகிக்கப்பட்டு உயிர்ச்சிதைவடையும் கழிவுகள் முழுவதையும் 209 நாட்களிலேயே வெளியேற்றிவிட்டோம் என்றும் கொள்ளலாம்.

அதாவது புவியின் தாங்குதிறனை விஞ்சுமளவுக்கு மனித இனம் பூமியின் இயற்கை வளத்தைக் கொள்ளையடித்து, சூழலையும் கெடுத்துள்ளது. இதனடிப்படையில் கணக்கிட்டால், 2019-ம் ஆண்டின் மொத்த மனிதத் தேவைக்கான இயற்கை மற்றும் சூழலியல் வளங்களைப் பெற நமக்கு மொத்தமாக 1.75 உலகங்கள் தேவைப்படும். ஆனால், இருப்
பதோ ஒன்றுதான். இருப்பினும், தடையற்ற பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சாத்தியமே என்கின்றனர் சில பொருளியல் அறிஞர்கள்.

மாறாக, பெரும்பாலான சூழலியல்வாதிகளும் சிறுபான்மையினராக உள்ள மாற்றுப் பொருளியல் அறிஞர்களும் தொடர்ச்சியான இவ்வளர்ச்சி சாத்தியமில்லை எனவும், இது பருவநிலை மாற்றம், இயற்கைவளத் தட்டுப்பாடு உள்ளிட்ட கடும் சூழலியல் நெருக்கடிகளை உருவாக்குமெனவும் வாதிடுகின்றனர். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டுமே பொருளாதாரத்தையும் சூழலியல் சீர்கேடுகளையும் நோக்குவது சரியான புரிதலைத்தராது என்பது மட்டுமன்றி ஆபத்தானதும்கூட. எனவே, இவ்வாதங்கள் குறித்த ஒரு பரந்த புரிதலை உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் ராபர்ட் மால்த்தூஸ் என்கிற ஆங்கிலேயப் பொருளியலாளர் தனது மக்கட்தொகைப் பெருக்கம் பற்றிய நூலில் உணவு உற்பத்திதான் மனிதப் பெருக்கத்தைத் தீர்மானிக்கிறதென்றும், மக்கட்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக உணவு உற்பத்தி அதிகரிக்க முடியாதென்பதால் பேரழிவுகளாலோ அல்லது கருத்தடை, பிறப்புக் கட்டுப்பாடு போன்றவற்றாலோ மக்கட்பெருக்கம் தடைபடுமென்றும் வாதிட்டார்.

ஆனால், அறிவியல் வளர்ச்சியால் உணவு உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம் மற்றும் கல்வியறிவால் பிறப்பு விகிதம் குறைவது போன்ற காரணங்களால் மால்த்தூசியக் கோட்பாடு பொய்யாகிவிடும் என்று மார்க்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான பொருளியலாளர்கள் வாதிட்டனர். அதன்படியே பின் வந்த அறிவியல் முன்னேற்றங்களும், உணவு உற்பத்தி மற்றும் மக்கட்தொகைப் புள்ளிவிவரங்களும் மால்த்தூசியக் கோட்பாட்டை வலுவிழக்கச் செய்தன.

1960-களின் பிற்பகுதியில் இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவுத் தட்டுப்பாடு பற்றிய அவநம்பிக்கைகள் தணிந்து, புதிய நம்பிக்கைகள் ஏற்பட்டன. ஆனால், அதே காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் சூழலியல் சிக்கல்கள் பற்றிப் பலரும் பேச ஆரம்பித்திருந்தனர். 1962-ல் ரேச்செல் கார்சன் என்ற அமெரிக்கரின் "சைலன்ட் ஸ்பிரிங்" என்ற நூல், பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் பற்றி ஒரு மாபெரும் விவாதத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

இது, பல நாடுகளில் DDT எனப்படும் பூச்சிக்கொல்லியின் மீதான தடைக்கும் வழிகோலியது. 1966-ம் ஆண்டு கென்னெத் போல்டிங் என்கிற பொருளியல் அறிஞர் "தி எகனாமிக்ஸ் ஆஃப் கமிங் ஸ்பேஸ் ஷிப் எர்த்" (வரவிருக்கும் பூமி என்கிற விண்கப்பலின் பொருளாதாரம்) என்ற கட்டுரையில் புவியின் பொருளாதாரமானது வரம்பற்ற வளங்களைக் கொண்டதும் எவ்வளவு சூழலிய சீர்கேட்டையும் தாங்கிக் கொள்ளக்கூடியதுமான, ஒரு மிகப்பரந்த காட்டில் ஒன்றிரண்டு ஆடுகளை மேய்க்கும் மந்தைக்காரனின் பொருளாதாரத்தைப் (Cowboy economy) போன்றதல்ல; மாறாக, அது அளவான இயற்கை வளங்களைக் கொண்டதும், அளவான சூழல் சீர்கேட்டை மட்டுமே தாங்கக் கூடியதுமான ஒரு விண்கப்பல் பொருளாதாரம் (spaceship economy) போன்றது. எனவே, அதில் "பயணிப்பவர்கள்" இருக்கிற வளங்களின் அளவறிந்து பயன்படுத்துவதன் மூலமே புவியெனும் விண்கப்பலை வெற்றிகரமாகச் செலுத்த முடியும் என்றார் போல்டிங்.

1968-ம் ஆண்டில் பால் எஃர்லிச் எனும் அமெரிக்க உயிரியலறிஞர், "மக்கட்பெருக்க வெடிகுண்டு" (The Population Bomb) எனும் நூலில் மக்கட்தொகைப் பெருக்கமே சமுதாயத்தின் மிகப்பெரும் சவால் என்று வாதிட்டார். 1972-ம் ஆண்டு ரோமன் மன்றம் (Club of Rome) வெளியிட்ட "வளர்ச்சியின் வரம்புகள்" (The Limits to Growth) என்ற அறிக்கை மக்கட்தொகைப் பெருக்கமும் இயற்கை வளத் தட்டுப்பாடும் மனிதகுலத்தின் மிகப்பெரும் சவால்களாக உள்ளன என்றது.

ஆனால், பார்னெட் மற்றும் மோர்ஸ் என்ற இரு அமெரிக்கப் பொருளியலர்கள் 1870 முதல் 1958 வரையான காலகட்டத்தில் இயற்கைவளத் தட்டுப்பாடுகள் அதிகரிக்கவில்லை என்றும், புற உலகு பற்றிய மனித அறிவு வளர வளர, "வளங்கள்" பற்றிய வரையறையே விரைவாகவும் நாம் எதிர்பாராத வகையிலும் மாற்றமடைந்து வருவதால், அறுதியான வளத்தட்டுப்பாடு (absolute resource scarcity) ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் வாதிட்டனர்.

டென்மார்க் பெண் பொருளியலாளரான எஸ்டர் போஸ்ரப், 1965-ல் "வேளாண் வளர்ச்சி நிலைமைகள்" என்ற தனது நூலில் வேளாண் செறிவாக்கம் மற்றும் மக்கட்தொகைப் பெருக்கத்தின் அழுத்தமே வேளாண் வளர்ச்சியின் உந்துசக்தி என்று வலியுறுத்தியதுடன் மால்த்தூசிய நெருக்கடிகளை வன்மையாக மறுத்தார். மனித அறிவுத்திறன் எப்போதுமே தேவையை விஞ்சியதாக இருக்குமென்றார் போஸ்ரப்.

அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் திடமான நம்பிக்கை கொண்டிருந்த ஜூலியன் சைமன் எனும் அமெரிக்கப் பொருளியலாளர் பால் எஃர்லிச்சின் கருத்துகளோடு நேரெதிராக மோதினார். பொருளாதாரத்தின் நோக்கமே முடிந்த அளவு "அதிகபட்சம் மக்களுக்கு வாழ்வளிப்பதே. அதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது மக்கட்பெருக்கம் என்பது ஒரு சிக்கல் என்பதைவிட அதை நமது வெற்றி என்றே கூறலாம்” என்றார் சைமன். 1980-ம் ஆண்டில் சைமனுக்கும் எஃர்லிச்சுக்குமிடையிலான விவாதம் முற்றிப்போய் அது சைமன் - எஃர்லிச் பந்தயமாக (Simon-Ehrlich wager) உருவெடுத்தது.

"நீங்கள் விரும்பும் ஏதாவது ஐந்து உலோகங்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூறும்படி இயற்கைவளத் தட்டுப்பாடு ஏற்படுவது உண்மையானால் அந்த உலோகங்களின் விலை பத்தாண்டுகள் கழித்து உயர்ந்திருக்கும். நான் கூறுகிறபடி வளத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது உண்மையானால் அவற்றின் விலை ஏறாது; பந்தயம் 1000 டாலர்கள்" என பந்தயம் கட்ட அழைப்பு விடுத்தார் தன் தந்தையிடம் அடிக்கடி பந்தயம் கட்டிப் பழக்கப்பட்ட சைமன்.

எஃர்லிச் பந்தயத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், பாவம் எஃர்லிச் பத்தாண்டுகள் கழித்து (1990 செப்டம்பர் 29 அன்று) சைமனுக்கு 1000 டாலர்கள் அனுப்ப வேண்டியதாயிற்று; சைமன் கூறியபடி குரோமியம், தாமிரம், நிக்கல், டின், டங்ஸ்ட ன் ஆகிய ஐந்து உலோகங்களின் விலைகளுமே குறைந்துவிட்டன. வெற்றியாளர் சைமன் அதேபோன்ற இன்னொரு பந்தயத்திற்கு தான் தயார் எனவும், ஆனால் இம்முறை பந்தயத்தொகை 20,000 டாலர்கள் என்றார். ஆனால், எஃர்லிச் இதை ஏற்கவில்லை.

ஜூலியன் சைமன் 1981-ம் ஆண்டு வெளியான "இறுதியான வளம்" (The Ultimate Resource) என்ற தனது நூலில் எஃர்லிச் போன்றோரின் கருத்துகளை வன்மையாக மறுக்கும் வகையில் மனித அறிவாற்றல்தான் இறுதியான வளம்; அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், எவ்விதமான வளங்களுக்கும் மாற்று வளங்களைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்று திடமாக வாதிடுகிறார். இருக்கும் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், புதிய வளங்களைக் கண்டுபிடித்தல், தொடர்ந்த உற்பத்தித்திறன் மேம்பாடு போன்றவற்றால் இது சாத்தியப்படுகிறது என்கிறார் சைமன்.

ஆதிமனிதன் முதன்முதலில் ஒரு கல்லை உடைத்த பொழுதிலிருந்தே இயற்கை வளங்களை நாம் செலவிட ஆரம்பித்துவிட்டோம்; எனவே, வளத்தட்டுப்பாடுகள் ஏற்படும் போது மாற்று வளங்களை கண்டுபிடித்தல் மற்றும் மறுசுழற்சி போன்றவற்றை ஊக்குவிக்கும் சந்தைப் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்து செயல்பட்டு, பல்வகை நெருக்கடிகளுக்கும் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொண்டு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தும்.

அபரிமிதமான வளத்தால் அதிக வளர்ச்சி, அதிக வளர்ச்சியால் வளத்தட்டுப்பாடு, அதனால் ஏற்படும் நெருக்கடிகள்தான் பொருளாதாரத்தையும் அறிவியலையும் புதிய திசைகளில் உந்தித் தள்ளுகின்றன. வளர்ச்சிப் பொருளியலாளர் பால் ரோமர் குறிப்பிட்டது போல நெருக்கடிகள் அருமையான வாய்ப்புகளைத் தருவதால் அவற்றை வீணடித்து (அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளாமல்) விடக்கூடாது. பொருளாதார வளர்ச்சி அதிக உற்பத்தியால் மட்டுமல்ல, மாறுபட்ட புதிய உற்பத்தி முறைகளாலேயே சாத்தியப்படுகிறது. இயற்கை வளங்களை அதிக அளவில் பயன்படுத்திவரும் அதே நேரத்தில், மனிதவள மற்றும் இயந்திர மூலதனங்களை நாம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும்வரை எந்தச் சிக்கலும் இல்லை என வாதிடுகின்றனர் சந்தைப் பொருளியலாளர்கள்.

ஆனால், இயற்கை வளங்களைத் தனித்தனியான பண்டமாகப் பார்ப்பதால் இத்தகைய வாதங்கள் சரியானவையல்ல. பிரச்சினை தனித்தனி உலோகங்களின் தட்டுப்பாடல்ல, இயற்கை என்பது ஒரு மிகவும் சிக்கலான உயிர்த்தொகுதி. அந்த உயிர்த்தொகுதிக்கு என்ன நேரிட்டுக் கொண்டிருக்கிறது என்பதே சூழலியலாளர்களின் கேள்வி. தாமிரத்துக்கும் குரோமியத்துக்கும் மாற்றுகள் கண்டுபிடிக்கலாம்; மீன்களுக்கும் மான்களுக்கும் எங்கே மாற்று? புலிகளுக்கும், புறாக்களுக்கும், பூனைகளுக்கும், பூக்களுக்கும் எது மாற்றாகும்? பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, கடும் சூழலியல் நெருக்கடிகள், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் என்று கருதப்பட்ட மீன்வளம், காடுகள், நிலத்தடி நீர், மண்வளம் எனப் பல்வகையான வளங்களின் இழப்பு, கடற்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு நெருக்கடிகள் தொடர்ந்து மனிதகுலத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் போல்டிங் கூறியபடி, நம் புவிக் கோளம் ஒரு விண்கலம் போன்றதுதானோ என்ற எண்ணம் உண்டாகிறது. இவ்விண்கலத்தில் நாம் பயணம் செய்யும் வரை நாம் சூரிய ஒளியைத்தவிர வெளியிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது; புவிக்கு வெளியே நம் கழிவுகள் எதையும் கொட்டவும் கெடுக்கவும் முடியாது. இறுதியில் மிஞ்சுவதெல்லாம், வளர்ச்சிக்காக கிடைப்பதையெல்லாம் அள்ளலாமா? வளர்ச்சியின் பெயரால் நம்மை நாமே கெடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விகள் மட்டும்தான்.

இயற்கையின் சக்தி எப்படிப்பட்டது என்பதை தொடர்ந்து சுனாமி, பேய் மழை, வெள்ளப்பெருக்கு, பூகம்பம், புயல், பற்றியெரியும் காடு, வறட்சி என பல வடிவங்களிலும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அது நடத்தும் கோர தாண்டவத்தையும் அனுபவித்துக்கொண்டுதான் வருகிறோம். இவையனைத்துமே இயற்கையின் சுழற்சியில் ஏற்படும் சிதைவுகளால்தான் ஏற்படுகின்றன என்பதை எப்போது உணர்ந்து செயல்படுகிறோமோ அப்போது துன்பம் எல்லாம் முடியும்; நல்ல பொழுது விடியும்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x