Published : 26 Aug 2019 11:02 AM
Last Updated : 26 Aug 2019 11:02 AM

எண்ணித் துணிக: லாபம் தரும் பிசினஸ் பிளான்

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

பிசினஸ் பிளான் என்பது ஸ்டார்ட் அப்பை லாபத்துடன் நடத்த வகை செய்யும் திட்டம். பிசினஸ் மாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி விற்பனை பொருளின் தயாரிப்பு, வடிவமைப்பு, தேவையான மூலப் பொருட்கள் வாங்குவது, தயாரிப்பு செலவு போன்றவைகளை குறிக்கும். இரண்டாம் பகுதி அப்பொருளின் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு பொருளையும் பொருள் பற்றிய செய்தியையும் சேர்க்கும் விதம், விநியோகம், டெலிவரி போன்றவைகளை குறிக்கும்.

ஸ்டார்ட் அப் தொடங்குபவர்களில் பலர் ஒன்று பிசினஸ் பிளான் போடாமல் தொழில் துவங்குகிறார்கள் அல்லது பாசிட்டிவாய் பிசினஸ் செய்கிறேன் பேர் வழி என்று முதலீடு மற்றும் செலவுகளைக் குறைத்து மதிப்பிட்டு வருவாயை வரம்புக்கு மீறி கணக்கிட்டு பாதி கிணறு தாண்டுவதற்குள் கால் தடுக்கி குப்புற விழுந்து ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்று திணறுகிறார்கள். பிசினஸ் பிளானில் தெளிவு பெற ஏதாவது வரைமுறை இருக்கிறதா? என் ஸ்டார்ட் அப் தொழிலுக்கும் அதை அப்படியே காப்பியடித்துக்கொள்ள முடியுமா என்று கேட்பவரா நீங்கள்; வெரி சாரி, பிசினஸ் பிளான் ஒவ்வொரு தொழிலுக்கு ஏற்ப மாறுபடும். மாறுபட வேண்டும்.

எத்தனை தொழில்கள் உண்டோ அத்தனை பிசினஸ் பிளான்கள் உண்டு. போட்டியாளர் பிசினஸ் பிளான் போலவே உங்களுடையது இருந்தால் நீங்கள் எப்படி அவரை வெல்வீர்கள்? ஒவ்வொரு பிசினஸ் பிளானும் தனித்துவமாக இருப்பதோடு அவை மார்க்கெட்டில் உள்ள தடைகளை மீறுவதாக இருக்க வேண்டும். `ஜில்லெட்’ பிசினஸ் பிளானை எடுத்துக்கொள்ளுங்கள். `மேக் 3’ ரேஸரை அக்கம்பெனி தன் தயாரிப்பு செலவை விட குறைவான விலையில் விற்கிறது.

எதற்கு இந்த தலையெழுத்து அவர்களுக்கு? ஒன்றும் இல்லை. அந்த ரேஸரில் பொருத்தும் நவீன பிளேடுகளை அதிக விலைக்கு விற்கிறது. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறது. அப்படி என்ன அந்த பிளேடுகளில். வழவழப்பான ஷேவ், பல முறை ஷேவிங் செய்யும் வசதியோடு நீங்களே ஷேவிங் செய்துகொள்ளவும் முடியும், முடிதிருத்தக் கடைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை, நீங்களே ஷேவிங் செய்தாலும் முகத்தை சேதாரம் செய்யாத சூப்பர் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் பிளேடுகள் அவை. அதனாலேயே அதில் ஷேவ் செய்தவர்கள் பென்சில் சீவக் கூட மற்ற பிளேடுகளை வாங்கமாட்டார்கள். ஆக, ரேஸரில் கொஞ்சம் பணம் இழந்து
பிளேடுகளில் லாபத்தை வழித்தெடுக்கும் வகையில் தன் பிசினஸ் பிளானை வடிவமைத்திருக்கிறது ஜில்லெட்!

ஒரு தொழிலின் பிசினஸ் மாடலை எடைபோட சிறந்த வழி அக்கம்பெனியின் மொத்த லாபத்தை (Gross profit)கணக்கிடுவது. கம்பெனி வருவாயிலிருந்து அதன் தயாரிப்பு செலவைக் கழிக்கும் போது கிடைப்பது தான் மொத்த லாபம். ஒரு கம்பெனியின் மொத்த லாபத்தை அதன் போட்டியாளர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அதன் பிசினஸ் மாடலின் திறன் தெளிவாய் தெரியும். ஒரு கம்பெனியின் மொத்த லாபம் அதிகமாய் இருக்கும்பட்சத்தில் அதன் பிசினஸ் பிளான் சரியாய் அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.

ஒரு கம்பெனியின் பிசினஸ் மாடல் சிறப்பானதாய் இருந்தால் அதுவே அந்த தொழிலை வழிநடத்திச்சென்றுவிடும் என்பார்கள். மொத்த லாப கணக்கை மட்டுமே பார்ப்பது சமயத்தில் தவறான முடிவெடுக்க வைக்கலாம். அதனால்தான் ஆய்வாளர்கள் கேஷ் ஃப்ளோ அதாவது நிகர வருமான கணக்கையும் சேர்த்துப் பார்ப்பார்கள். அதாவது, மொத்த லாபத்திலிருந்து நிர்வாக செலவுகளை (operating expenses) கழித்துப் பார்ப்பது. இப்படி கணக்கிடும் போது கம்பெனி உண்மையாகவே லாபம் ஈட்டுகிறதா என்பது சரியாய் தெரிந்துவிடும்.

வெற்றி பெறும் தொழில்களைப் பார்த்து பலர் அவர்களைப் போலவே வருவோம், வளர்வோம் என்று அவர்கள் பிசினஸ் மாடலைப் போலவே தங்கள் பிசினஸை வடிவமைத்து அவர்களைக் காட்டிலும் எந்த வித்தியாசமும் காட்டாமல் எந்த மார்க்கெட்டில் இறங்குவது, எந்த வாடிக்கையாளர் பிரிவை குறி வைப்பது, அவர்களுக்கு எந்த பொருட்களை விற்பது, என்ன வேல்யூ தருவது என்று புரியாமல் குழம்பி தவிக்கின்றனர். யாரோ ஒருவர் முதலீடு போட ரெடி என்று அவசர கதியில் ஸ்டார்ட் அப் துவங்க ஆஹா அது போன்ற கம்பெனிகளுக்கு மதிப்பு இருக்கிறது போலிருக்கிறது என்று இன்னும் பத்து பேர் அதே பிசினஸில் அதே பிசினஸ் மாடலோடு களம் இறங்கி கரையேர முடியாமல் கதவை சாத்தி கடனில் மூழ்குகின்றனர்.

அமெரிக்காவில் பல கம்ப்யூட்டர் கம்பெனிகள் கடைகள் மூலம் விற்று வந்தன. அப்படி செய்ததால் சில மாடல்கள் மற்றுமே விற்க முடிந்தது. இந்நேரத்தில் களமிறங்கினார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ‘மைக்கேல் டெல்’ என்பவர். கம்ப்யூட்டர் கம்பெனிகள் தரும் மாடல்களுக்கு ஏற்ப மட்டுமே மக்கள் வாங்க வேண்டிய தலை
யெழுத்தை மாற்ற முடிவு செய்தார். மக்களுக்கு என்ன வகையில் கம்ப்யூட்டர் வேண்டுமோ அதை தன்னிடம் நேராக கூறச் செய்து அவர்களுக்கேற்ற கம்ப்யூட்டர்களைத் தயாரித்து அதை கடைகள் மூலம் விற்காமல் நேரடியாக தன் கம்பெனியிலிருந்தே டெலிவரி செய்யும் வகையில் பிசினஸ் பிளானை வடிவமைத்தார்.

‘டெல்’ என்ற அந்த பிராண்ட் படிப்படியாக வளர்ந்து பரலோகம் வரை பரந்து விரிந்து இன்று பட்டொளி வீசி பறக்கும் பரவச நிலையை அடைந்திருக்கிறது! எந்த ஸ்டார்ட் அப் தொழிலும் லாபமுடன் இயங்கும் வழியைக் காட்டும் முறைதான் பிசினஸ் மாடல். அதை எத்தனை புதுமையாய் செய்கிறீர்களோ அத்தனை வித்தியாசம். எத்தனை வித்தியாசமாய் இருக்கிறதோ அத்தனை லாபம். எத்தனை லாபம் பெறுகிறீர்களோ… இதை தனியாக வேறு சொல்லி முடிக்க வேண்டுமா என்ன!

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x