Published : 25 Aug 2019 10:31 AM
Last Updated : 25 Aug 2019 10:31 AM

முகங்கள்: ஊக்கம் தங்கம் தரும்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

பார்வையாளராக இருந்தவர் பங்கேற்பாளராக ஆன கதை தான் குருசுந்தரி யுடையதும். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இவர் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஜெயித்திருந்தால் நாடே இவர் புகழ் பாடியிருக்கும். ஆனால், உலகக் கோப்பை மகளிர் கபடிப் போட்டியில் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றதாலோ என்னவோ குருசுந்தரியின் பெயர் அவரது ஊரைத் தாண்டி வெளியே போதுமான அளவுக்கு எதிரொலிக்கவில்லை. இத்தனைக்கும் இந்திய அணியில் இடம்பெற்ற ஒரே தமிழக வீராங்கனை இவர் மட்டுமே.

பள்ளியில் தொடங்கிய ஆர்வம்

மக்கள் தன் இருப்பைப் புகழ்கிறார் களா இல்லையா என்றெல்லாம் கவலைப்படாமல் வீசிக்கொண்டிருக்கும் காற்றைப் போலத்தான் அங்கீகாரம் குறித்து எந்தப் புகாரும் இல்லாமல் தன் பாதையில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார் குருசுந்தரி. வழிகாட்டியோ விளையாட்டுப் பின்புலமோ இல்லாத நிலையில்தான் இப்படியொரு சாதனையை குருசுந்தரி நிகழ்த்தியிருக்கிறார். இவருடைய அப்பா கோபால்சாமி, மதுரை கோச்சடை டிவிஎஸ் ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்து ஓய்வுபெற்றவர்.

அம்மா சுப்புலெட்சுமி, இல்லத்தரசி. குருசுந்தரிக்கு இரண்டு சகோதரிகள்; இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அக்காக்கள் இருவருக்கும் விளையாட்டில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. அவர்களின் வழியொற்றி குருசுந்தரியும் சிறு வயதில் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்துள்ளார். ஈவேரா மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதுதான் இவருக்குக் கபடி மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அதுவரை கபடிப் போட்டியைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனப் புன்னகைக்கிறார் குருசுந்தரி.
ஒரு முறை தனது பள்ளி கபடி அணியினர் பயிற்சி செய்துகொண்டி ருப்பதை குருசுந்தரி பார்த்திருக்கிறார். பொழுதுபோகவில்லையே என அவர் கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த விளை யாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தானும் கபடி விளையாட வேண்டும் என விரும்பினார்.

விருப்பத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் பயிற்சியிலும் ஈடுபட்டார். பள்ளி சீனியர் கபடி அணித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வானார். பத்தோடு பதினொன்றாக நின்றுவிடாமல் பத்தில் ஒன்றாகத் தனித்துத் தெரிவதை இலக்காகக் கொண்டார். அதைச் சாத்தியப்படுத்த பயிற்சியில் ஈடுபட்டார். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அணிக்காகப் பல முறை விளையாடி வெற்றிகளைக் குவித்தார். பத்து முறை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு முறை தமிழ்நாடு சீனியர் கபடி அணியில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது உலகக் கோப்பைவரை உயர்ந்திருக்கிறார்.

பெண்களின் பங்கேற்பு

கிரிக்கெட்டும் கால்பந்தும் கிராமங்களை ஆக்கிரமித்தாலும் கபடிக்கும் குறிப்பிட்ட அளவுக்கு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார் அவர். “அந்தக் காலத்துல எல்லாம் நிறைய ஊர்ல இரவு நேரத்துல டியூப் லைட் வெளிச்சத்தில் கபடிப் போட்டி நடத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்தப் போட்டியைப் பார்க்க கிராமத்துல ஆண்களும் பெண்களும் ஆர்வமா இருப்பாங்க. ஒரு காலத்துல ஆண்கள் மட்டுமே விளையாடிய கபடியை இப்போ பெண்களும் விளையாடத் தொடங்கியாச்சு. பார்வையாளர்களா மட்டும் இருந்தவங்க இப்போ பங்கேற்பாளர்களாக ஆகிட்டாங்க” என்று தனது வெற்றியைப் பெண்கள் அனைவருக்குமான வெற்றியாகப் பகிர்ந்தளிக்கிறார்.

துணை நின்ற பெற்றோர்

பெரும்பாலான பெற்றோர் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதில் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் பாரபட்சம் காட்டுவதும் பெண் குழந்தைகள் சில விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க மறுப்பதும் தவறு என்கிறார் குருசுந்தரி. “பள்ளிப் பருவத்தில் தொடங்கி 15 வருஷமா நான் கபடி விளையாடிக்கிட்டு இருக்கேன். கபடி விளையாடினா கை, கால் அடிபட்டுவிடும் என்பதால் விளையாட்டு ஆசையைப் பாதியிலேயே மூட்டைகட்டி வைத்த பலரைப் பார்த்திருக்கேன். பல வீடுகளில் பெண்களை ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு விளையாட அனுமதிப்பதில்லை. நானும் பல சோதனைகளைக் கடந்தே இந்த உயரத்தை அடைய முடிந்தது. ஆனால், சோதனையான நாட்களில் என் குடும்பம் என்னை ஆதரித்தது.

என் அப்பாவும் அம்மாவும் என் விருப்பத்துக்குத் துணையா இருந்தாங்க. எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்கணும் என்பதுதான் என் கனவுன்னு அவங்களுக்கும் தெரியும். என் கனவுக்கு அவங்க பக்கபலமா இருந்தாங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம விளையாடுன்னு தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. அந்தத் தெம்புதான் என்னை இந்திய அணியில் இடம்பெற வைத்ததோடு உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற வைத்திருக்கு. எனக்கு இப்போ இரட்டைச் சந்தோஷம்” என்று தன் பெற்றோரைப் பெருமிதத்துடன் பார்க்கிறார் குருசுந்தரி.

வாழ்க்கையிலும் வெற்றி

கபடியின் மீதான ஆர்வம் மட்டுமல்ல; வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதும்தான் கபடியைத் தான் தேர்ந்தெடுக்கக் காரணம் என்கிறார் குருசுந்தரி. “பள்ளியில் கபடி விளையாட ஆரம்பித்தபோது, கல்லூரியில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி பெறலாம், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என எங்கள் கபடி பயிற்சியாளர் கொடுத்த ஊக்கமே என்னைச் சர்வதேச அளவில் பங்கேற்க உந்துசக்தியாக அமைந்தது” என்கிறார் குருசுந்தரி. அதற்கேற்ப கடந்த ஏப்ரல் மாதம் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தமிழக வனத் துறையில் வனக்காவலர் பணிக்குத் தேர்வாகி, தற்போது கோவை பயிற்சி முகாமில் இருக்கிறார்.

வேண்டாமே பாரபட்சம்

சுடர்விடுவது விளக்கின் தன்மையாக இருந்தாலும் அதைக் குன்றின் மேல் வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு என்று சொல்லும் குருசுந்தரி, கபடிக்கு அரசு போதுமான முக்கியத்துவம் அளித்தால் இன்னும் நிறைய கபடி வீராங்கனைகள் உருவாகலாம் என்கிறார். ‘‘அரசு உதவினால் என்னைப் போன்ற பல வீராங்கனைகள் கபடி மட்டுமல்லாமல் பல விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஜொலிப்பார்கள்” என்று சொல்வதோடு பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறார்.

“கபடி விளையாட மன வலிமையும் உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இந்த ரெண்டும் இருக்கும் பெண் குழந்தைகளைப் பெற்றோர் விளையாட அனுப்புவதில்லை. இது மாறணும். விளையாட்டில் பாகுபாடு பார்க்காமல் பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தணும்” என்று சொல்லிவிட்டு, ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்கான பதிலாகத் தான் வாங்கிய கோப்பையை உயர்த்திப் பிடிக்கிறார் குருசுந்தரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x