Published : 25 Aug 2019 10:31 AM
Last Updated : 25 Aug 2019 10:31 AM

அண்றொரு நாள் இதே நிலவில் 20: சுளுக்கு நீக்கும் எண்ணெய்

பாரததேவி

வேலை செய்யும்போது உடம்பில் வாயு பிடித்துக்கொண்டால் உடலை அசையவிடாமல் செய்யும். அதற்குச் சாரைப்பாம்பின் தைலம்தான் தேய்ப்பார்கள். பாம்பு பிடிப்பதற்கென்றே ராசாமணி என்று ஒருத்தர் இருந்தார். ஆள் பார்ப்பதற்கு முறுக்கும் திருக்குமாக இருப்பார். வயது இருபத்தியேழுக்குள் இருக்கும். பால் நிறம்கொண்ட பல் வரிசை.

அவர் சிரித்தால் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கரணை கரணையாகக் கால்களும் தோள்களும் கைகளுமாய் அவர் நடை ராஜ கம்பீரமாக இருக்கும். பெரிய பொம்பளைகள் அவரைக் கண்டால், “வீமன், சோழன் கணக்கா யாத்தாடி யாத்தா என்ன அழகா இருக்கான்?” என்று அவர் கன்னம் வழித்துச் சொடக்குப் போடுவார்கள்.

பாம்புபிடி ராசாமணி

பாம்புகளைப் பிடிப்பதிலும் பாம்புத் தேலை உரிப்பதிலும் அவர் திறமைசாலி. வளர்ச்சியடைந்த சாரைப் பாம்பைப் பிடித்துவர அவரிடம்தான் சொல்வார்கள். அவர் பின்னால் நாலு பெரியவர்களோடு ஊரு பொடிசுகளும் ஓடும். அவர் புதரோரங்களிலும் அடர்ந்த வேலிகளுக்குள்ளும் பாம்புப் பொந்துகளையும் தேடி அலைவார். புதர், பொந்து கண்ட இடங்களில் மண்ணைக் கையில் எடுத்து மோந்துப் பார்த்து உதட்டைப் பிதுக்குவார்.
என்னவென்று கேட்டால், “இங்கே சாரப்பாம்பு இல்லை. கண்ணாடிவிரியன், கட்டுவிரியன்தான் இருக்கிறது” என்று சொல்லி வேறு இடம் நோக்கி நகர்வார்.

ராசாமணி சாரைப்பாம்பைப் பிடித்து வருவதற்குள் இங்கே பெரிய மொடாப் பானையை இரண்டாக உடைத்து அடிப்பாகத்தை மட்டும் பக்குவமாகச் சிறு கீறல்கூட இல்லாமல் எடுத்துக்கொள்வார்கள். அதில் ஊருக்குள் இருக்கும் எல்லோரும் ஒரு படி விளக்கெண்ணெய்யைக் கொண்டுவந்து ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சுவார்கள்.
அந்த எண்ணெய்யோடு முடக்கத்தான், வேலிப்பருத்தி, மூக்கனத்திவேர், பிரண்டைக்கொடி, பெருந்தும்பை இலை, காட்டு மொச்சி இப்படிப் பல வகை இலைகளைப் போட்டுக் கொதிக்கக் காய்ச்சிக்கொண்டு இருப்பார்கள்.

எண்ணெய்யாகும் கொழுப்பு

அப்போது அலைபேசி எதுவுமில்லை என்பதால் ராசாமணி எந்நேரத்துக்கு வருவார் என்று தெரியாது. அதனால், அடுப்பெரிக்கவும் அமத்தவுமாக இருப்பார்கள். ராசாமணி பொழுது அடைந்துவந்தாலும்கூடக் கொழுத்த சாரையோடுதான் வருவார். அந்தப் பாம்பின் தலையை மட்டும் வெட்டிக் குழியில் புதைத்து, மல்லாக்கப் போட்டு அதன் உடலைக் கிழித்துக் கொழுப்பை மட்டுமே எடுப்பார். இப்போது அடுப்புத் தீயை அணைத்துவிடுவார்கள்.

கொழுப்பில் உயிரின் நடுக்கத்தில் மெல்லிய சீற்றத்தோடு சூடு பறந்துகொண்டிருக்கும். எல்லோரையும் தூரம் போகச் சொல்லிவிட்டு ராசாமணி மட்டும் தென்னை மட்டையில் அந்தக் கொழுப்பை எடுத்து வைத்து, தூரத்தில் நின்றவாறே போடுவார். கொழுப்பு எண்ணெய்யில் விழுந்ததும் அது வெடிக்கும் வெடிப்பு சொல்ல முடியாது. அடுப்பிலிருக்கும் எண்ணெய் அப்படியே கொப்பளித்துக் கொப்பளித்துத் தீக்கனல்போல் வெக்கையைப் பரப்பி மீண்டும் எண்ணெய்யாக மாறும்.

இந்தக் கொதிப்பு அடங்கியபின் மீண்டும் தீயிட்டு எரிப்பார்கள். இப்போது சாரைப்பாம்பின் கொழுப்பு வெந்து கருகி கிடக்கும். அதைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு பெரிய மண்பானையில் அடர்த்தியான துண்டை வடிகட்டி அகப்பையில் மோந்து மோந்து ஊத்தி ஒரு வீட்டில் வைத்து ஒரு அகப்பையை அதில் போட்டுவிடுவார்கள். உடம்பில் என்ன பிடிப்பு என்றாலும் அந்த எண்ணெய்யை அகப்பையால் மோந்து சிறு செரட்டையில் ஊத்திக்கொண்டு வந்து உருவிவிட்டால் போதும். சுளுக்கு, ஓடு ஓடு என்று ஓடிவிடும். யாரும் அந்த எண்ணெய்யை ஊர்ப் பெரியவர்களிடம் கேட்காமல் அடுத்த ஊர்க்காரர்கள், தெரிந்தவர்கள் என்றோ உறவினர்கள் என்றோ கொடுத்துவிடக் கூடாது.

செந்தியின் காதல்

இப்படிப் பாம்பு பிடிப்பதிலும் மற்ற வேலைகளிலும் ராசாமணி திறமையாக, ஆளும் அழகாக இருப்பதால் அவனுக்கு ஊருக்குள்ள நல்ல மதிப்பிருந்தது. சில குமரிகள் அவன் பல் வரிசையைப் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால் சில பெண்கள் அவன் திறமையைப் பார்த்து ஆசைப்பட்டார்கள். அதிலும் செந்தி அவன் மீது காதல் கொண்டு உருகினாள். அவனை எங்கேயாவது பார்த்துவிட்டால் போதும்; உடனே பாட ஆரம்பித்துவிடுவாள்.

“பாதையோரப் பிஞ்சையில நான்
பயத்தான் நெத்து எடுக்கையில
பாத்தனய்யா உன் மொகத்த
பகச்சனய்யா என் சனத்தை மாசி பருத்தியல்லோ மலையோரம் செம்பருத்தி
ராசி பொருத்தமுண்டு ராமரோட சீமையில
சேரப் பொருத்தமுண்டு இந்தத் தெய்வமிருக்கும் பூமியில”

என்று பாடுவாள். இப்படி எல்லாம் பெண்கள் அவன் மீது உயிராய்க் கிடந்தார்கள். ஆனால், ராசாமணியோ எந்தப் பெண்ணையும் ஏறிட்டுக்கூடப் பார்ப்பதில்லை. யார் என்ன சொன்னாலும் சிரித்துக்கொண்டே போய்விடுவான்.

ஐப்பசி மாத அடைமழை

ஒரு வருசம் ஐப்பசி, கார்த்திகை மாதம் மழை என்றால் அப்படியொரு மழை பெய்தது. அதுவும் இரவும் பகலுமாகக் கொட்டியது. ஏற்கெனவே புரட்டாசியில் பெய்த மழையில் அரை கம்மாவரை நிறைந்திருந்த கம்மாயில் இப்படி மழை பெய்தால் என்ன செய்வது? கம்மாய்களில் பல வகையுண்டு. பெரிய கம்மாயாக இருந்தால் கிழக்கு, மேற்கு என்று நாலு திக்கத்துக்கும் நாலுமடை இருக்கும். ஒரு சில கம்மாய்களில் இரண்டு மடை இருக்கும். ஜமீன்தாரான கோகுல்நாத்தின் பாளையத்துக்குள் இருக்கும் கம்மாய் பெரிய கம்மாயாக இருந்தாலும் அதற்கு ஒரு மடைதான் இருந்தது.

அதனால், அடுத்த கம்மாய்களிலிருந்து தண்ணீர் வரத்து அதிகமாயிருக்க, ஜமீன்தார் பயந்துபோனார்.
மழை பெய்துவரும் வெள்ளத்துக்கு ஆடுகள், மாடுகள், சிறு சிறு கூரை வீடுகள் எல்லாம் வெள்ளத்தோடு சுழித்துக்கொண்டு ஆக்ரோசமாக ஓடிவந்தன. சற்று முன் மடமடவென்று வந்துகொண்டிருந்த வெள்ளம் அப்படியே நின்று போய் ஒரு வாய்க்கால் தண்ணீராக மெல்ல வந்துகொண்டிருந்தது. ஜமீன்தார் திடுக்கிட்டுப்போனார். அவர் பொறுப்பில் இருக்கும் 60 கிராம மக்களை எப்படியும் காப்பாற்றியாக வேண்டுமே.

கம்மாயின் பாதுகாப்புக்கு உயரமாய்ப் போட்டிருந்த மண் கரைகள் ஈரமடிக்க ஆரம்பித்தன. இனி மண்ணோ, கல்லோ போட்டு கம்மாக் கரையைக் காப்பாற்ற முடியாது. ஏதோ ஒன்று மடையை அடைத்திருக்க வேண்டும். ஜமீன்தார் வீரணனைக் கூப்பிட்டார். நீருக்குள் மூழ்குவதில் அவன் கெட்டிக்காரன். வீரணன் ஜமீன்தார் எதிரில் கையைக் கட்டி நிற்க, “வீரணா மடைக்குள் எதுவோ அடைத்துக்கொண்டது என்று நினைக்கிறேன்.

நீ போய்ப் பாத்துட்டு வா” என்று உத்தரவிட்டார். உடனே வீரணன், இன்னமும் வெள்ளம் பாய்ந்து வந்துகொண்டிருக்க மடையில் தண்ணீர் வெளியேற முடியாமல் புரண்ட மடைக்குச் சற்றுத் தள்ளி கம்மாய்க்குள் குதித்தவன் அலறி அடித்துக்கொண்டு மேலே வந்தான். அவன் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது. முகம் பேயறைந்தது போலிருந்தது.

30 அடி மலைப்பாம்பு

அவன் பயத்தையும் பதற்றத்தையும் கண்ட எல்லோருமே திடுக்கிட்டனர். ஜமீன்தாரே கொஞ்சம் பயந்துதான் போனார். “என்னடா வீரணா இப்படி வந்து நிக்கே. மடையில அப்படி என்னதான் இருந்தது?” என்று கேட்க வீரணனுக்குப் பேச முடியாமல் நாக்கு தடுமாறியது. ஜமீன்தாருக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை வெளியேற்ற முடியாமல் எங்கிருந்தெல்லாமோ வெள்ளம் வந்ததால் கம்மா கரை முழுதும் ஈரம் கசிந்துகொண்டு இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம்தான். கம்மா கரைகள் மொத்தமும் உடைய வேண்டாம். ஒரு சிறு பிளவு ஏற்பட்டாலே போதும் மொத்தத் தண்ணியும் வெள்ளமாகப் பாய்ந்துவிடும் அபாயத்தில் இருந்தது. அந்த வெள்ளத்தில் ஒரு மனிதக் குஞ்சுகூடப் பிழைக்காது. ஜமீன்தாரின் கல்கோட்டையான அரண்மனைகூட இந்த வெள்ளத்தில் சாய்வதற்குத் தயாராகத்தான் இருந்தது.

“நான் கேட்டுக்கிட்டு இருக்கேன்ல. தண்ணி வெளியேறாதபடிக்கு அப்படி மடைக்குள்ள என்னதான் அடைச்சிருக்கு?” என்று ஜமீன்தார் மீண்டும் கேட்கும் முன்னே “பெரிய முப்பதடி மலைப்பாம்பு அடைச்சிருக்கு. என்னை விட்டுருங்க எசமான்” என்று மழைத் தண்ணீருக்குள் விழுந்து புரண்டு ஓட முடியாமல் ஓடிவிட்டான் வீரணன்.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x