Published : 25 Aug 2019 10:32 AM
Last Updated : 25 Aug 2019 10:32 AM

பெண்கள் 360: விருது வென்ற ‘பாரம்’

தொகுப்பு: முகமது ஹுசைன்

விருது வென்ற ‘பாரம்’

பதினெட்டே நாள்களில் எடுக்கப்பட்ட ‘பாரம்’ தமிழ்த் திரைப்படத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத இந்தப் படம் தமிழின் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் பிரியா கிருஷ்ணசாமி. இவர் மும்பையில் வசித்துவரும் தமிழர்.

‘தலைக்கு ஊத்தல்’ முறையில் உடல்நலம் குன்றிய முதியோரைக் குடும்பத்தினரே கொலை செய்யும் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ‘பாரம்’. “இந்தப் படம் கலைப்படைப்பு அல்ல. மக்கள் பார்க்க வேண்டிய படம். மனத்தின் ஆழத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமான படம் இது. மக்களிடம் அதிகம் சென்று சேரவேண்டிய படமும்கூட” என்று சொல்கிறார் படத்தைத் தயாரித்து இயக்கிய பிரியா.

சிப்பாய்ப் பிரிவிலும் பெண்கள்

இந்திய ராணுவத்தில், கப்பல் படையிலும் விமானப் படையிலும் சுமார் 13.09 சதவீதப் பெண்கள் வேலை செய்துவருகின்றனர். சிப்பாய்ப் பிரிவைப் பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே இதுவரை சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய ராணுவத்தில் சிப்பாய்ப் பிரிவில் பெண்களுக்கு முதன்முறையாக வாய்ப்பு தர இந்திய ராணுவம் முடிவுசெய்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் செப்டம்பர் 12 அன்று லக்னோவில் நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை நேரடி ஆட்சேர்ப்பு முகாம் மூலம் தேர்வுசெய்து பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5,000 பெண்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நேரடி முகாம் என்பதால் பெண்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ளரூனி கிராமத்தைச் சேர்ந்தவர் சாஞ்சோ (34). அவருக்குப் பிரசவவலி ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள ராம்மனோகர் லோஹியா அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் படுக்கை இல்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தனர்.

அதனால், அந்தப் பெண் மருத்துவமனை வளாகத்தின் தரையிலேயே குழந்தையைப் பெற்றெடுத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்தி, மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மருத்துவமனை அதிகாரிகள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நீதிபதி மோனிகா ராணி உத்தரவிட்டார்.

எதிர்ப்பால் நிமிர்ந்த நீதி

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையிலான வழக்கறிஞர்கள், நீதிபதி வைத்தியநாதன் தன் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர்.

அதையேற்று நீதிபதி வைத்தியநாதன் தனது கருத்தைத் திரும்பப் பெற்றார். மேலும், கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை எனப் பெற்றோர் கருதுவதாகவும் கூறிய கருத்தையும் நீதிபதி வைத்தியநாதன் திரும்பப் பெற்றார்.

கருணையின் நாயகி

ஷாரன் பாலா, கனடா நாட்டில் வசித்துவரும் இலங்கைத் தமிழ்ப் பெண்எழுத்தாளர். மஹிந்தன் என்ற இலங்கை அகதியின் கதையைச் சொல்லும் ‘தி போட் பீப்பிள்' எனும் நாவலே இவரதுமுதல் நாவல். 2018-ல் வெளிவந்த இந்த நாவலைஎழுதியதற்காக ‘ஹார்ப்பர் லீ’ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29 அன்று ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் இந்தவிருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இந்த நாவலில், இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பி கனடாவுக்கு வருகிறார் மஹிந்தன். அவருடன் வரும் அகதிகளும் வான்கூவர் தீவுகளுக்குப் படகில் வந்து இறங்குகின்றனர்.

அங்கே தீவிரவாதிகள் என்று அவர்கள் குற்றம்சாட்டப்படுகிறார்கள். நாடு கடத்தப்படும் அபாயமும் அவர்களுக்கு நேர்கிறது. அவர்களுக்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் வழக்கறிஞர் பிரியா போராடுகிறார். அவர்களை பிரியா காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் கதை. “இந்த நாவல் கருணைக்கான பிரார்த்தனையாக எழுதப்பட்டது. வாசிப்பவர்களின் மனத்தில் சிறிய தாக்கத்தையேனும் இது ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என்று சொல்கிறார் ஷாரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x