Published : 25 Aug 2019 10:32 AM
Last Updated : 25 Aug 2019 10:32 AM

சென்னைப் பெண்கள்: 12 வயதில் தொடங்கிய புரட்சிப் பயணம்

நிவேதிதா லூயிஸ்

சென்னை அடையாற்றங்கரையை ஒட்டிய நகரின் முதன்மைச் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை. எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்கு எதிரே இந்தச் சாலையில் அமைதியான சிலையாக, தான் நிர்மாணித்த மகிளா சபை மருத்துவமனை வாசலில் சிறுவன் ஒருவனை அணைத்தபடி துர்காபாய் நின்று கொண்டிருக்கிறார்.

ராஜமுந்திரியில் பிறந்த துர்காபாய், 12 வயதில் காந்தியை முதல்முறையாகச் சந்தித்தார். 1921-ல்
காக்கிநாடா நகருக்கு காந்தி வரவிருப்பதை அறிந்துகொண்ட சிறுமி, கோஷா அணிந்த பெண்களுக்கும் கைம்பெண்களுக்கும் தனிக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய எண்ணினாள். காந்தியின் நிகழ்ச்சிகளை நிர்வகிப்பவர்களிடம் காந்தியின் நேரம் கிடைக்குமா என்று சிறுமி வினவ, ஐயாயிரம் ரூபாய் தந்தால் காந்தி வருவார் என்று ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

சிறுமி நடத்திய கூட்டம்

பள்ளியில், தெருக்களில், பெண்களிடம் என்று அறிந்தவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் சேகரிக்கிறாள் சிறுமி. ஐயாயிரம் ரூபாயைச் சிறுமியிடம் எதிர்பாராத ஏற்பாட்டாளர்கள் ஒருவழியாக காந்தியின் நேரத்தை ஒதுக்கிக்கொடுத்தனர். காக்கிநாடா நகரின் பள்ளி மைதானம் ஒன்றில் பெண்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இஸ்லாமியப் பெண்கள், தேவதாசிகள், கைம்பெண்கள் ஆகியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் காந்தியின் இந்திப் பேச்சை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தார் சிறுமி துர்காபாய்! துறுதுறு சுட்டிப் பெண்ணின் நாட்டுப்பற்று காந்தியை ஈர்க்க, அன்று முதல் காந்தியின் ஆந்திரப் பயணங்கள் அனைத்திலும் மொழிபெயர்ப்பாளராக அவருடன் பயணித்தவர் துர்காபாய்தான்.

காக்கிநாடா கூட்டத்துக்குச் சென்று வந்த சிறுமி தன் விலையுயர்ந்த ஐரோப்பிய ஆடைகளைத் தீக்கிரையாக்குகிறாள். ராட்டையில் நூல் நூற்கக் கற்றுக்கொள்கிறாள். அன்று முதல் வாழ்வின் இறுதிவரை கதர் தவிர வேறு ஆடை அணியவில்லை! ஆங்கிலவழிக் கல்விக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்த துர்காபாய், ‘பாலிகா இந்தி பாடசாலை’ என்ற இந்தி மொழி பயிற்றுவிக்கும் பள்ளியைத் தன் வீட்டில் தொடங்கினார். 12 வயது முதல் 21 வயதுவரை அந்தப் பாடசாலையின் முதல்வர் துர்காபாய்தான். குடும்பம் மதராசுக்கு இடம்பெயர்ந்து மயிலாப்பூர் துவாரகா தெருவில் குடியேறியது.

சென்னையிலும் தொடர்ந்த சேவை

இங்கும் அக்கம் பக்கத்துப் பெண்களை ஒன்றிணைத்து ‘லிட்டில் லேடீஸ் ஆஃப் பிருந்தாவன்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்தி, ராட்டையில் நூல் நூற்பது என்று கற்றுத்தரத் தொடங்கினார். இந்த அமைப்பே பின்னாளில் வளர்ந்து ‘ஆந்திர மகிளா சபை’ என்ற பிரம்மாண்ட ஆலமரமானது. 1930-ல் தண்டி யாத்திரை தொடங்கியபோது திருவல்லிக்கேணியில் உப்பு அள்ளும் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற துர்காபாயைக் கைதுசெய்து ஓராண்டு சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.

சிறையிலும் பெண்களுக்கு இந்தி கற்றுத்தந்தார் துர்காபாய். சட்ட நுணுக்கங்கள் அறியாததால் பெண்கள் படும் இன்னலைச் சிறையில் உணர்ந்த துர்காபாய், அவர்கள் நலனுக்காகச் சட்டம் பயில முடிவெடுத்தார். சிறையில் இருந்து வெளிவந்து சட்டம் பயின்றவர் 32-வது வயதில் சட்டப் படிப்பை முடித்தார். பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிப்பள்ளியைத் தொடங்க எண்ணிய துர்காவுக்கு மிர்சாபூரின் ராணி மூலம் உதவி கிடைத்தது.

அடையாற்றில் உள்ள ஆந்திர மகிள சபையின் முதல் நிலத்தை வாங்கிய ராணி அதை துர்காவுக்கு அளித்தார். கபூர்தலாவின் ராணி, பொப்பிலி ராணி, ஜமீன்தாரிணிகள் என்று யாரிடமும் நிதி கேட்க துர்காபாய் தயங்கியதே இல்லை. மகிளா பள்ளிகள் சென்னையிலும் ஹைதராபாத்திலும் தொடங்கப்பட்டன. லாப நோக்கம் இல்லாத மகிளா சபை மருத்துவமனைகள், செவிலியர் பயிற்சிப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என்று 23 கல்வி - மருத்துவம் சார்ந்த நிறுவனங்களைத் தொடங்கினார் துர்காபாய்.

நேருவைத் தடுத்த நேர்மை

அடையாற்றில் ‘துர்காபாய் தேஷ்முக் மகிளா சபை மருத்துவமனை’, மயிலாப்பூரில் ‘மஹிளா வித்யாலயா’ பள்ளி, ஓபுல் ரெட்டி முதியோர் இல்லம், மல்லம்மா தேவி மஹிளா மன்ற தங்கும் இல்லம், ரோசரி சர்ச் சாலையில் உள்ள ‘ஏ.எம்.எஸ். பணிபுரியும் பெண்கள் இல்லம்’, மன நலம் குன்றிய ஆண்களுக்காக ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் உள்ள ‘மித்ர மந்திர்’, ‘ஈஸ்வரி பிரசாத் தத்தாத்ரேயா ஆர்த்தோபேடிக் சென்டர்’, மயிலாப்பூர் ‘ஓபுல் ரெட்டி தொழில்முறைப் பயிற்சி மையம்’, ‘ஏ.எம்.எஸ். ஆஷ்ரயா’ பெண்களுக்கான பயிற்சி நிறுவனம் என்று சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஆந்திர மகிள சபை இன்றும் சமூகப் பணியாற்றிவருகிறது.

நேரு திறக்க வேண்டிய காங்கிரஸ் பொருட்காட்சி ஒன்றில் நுழைவுச் சீட்டு இல்லாததால் நேருவை வாசலில் தடுத்து நிறுத்தியவர் சிறுமியாக இருந்த துர்காபாய்! பிறகு நேருவும் நுழைவுச் சீட்டைச் சிரித்துக்கொண்டே வாங்கியதுடன் சிறுமியைப் பாராட்டவும் தயங்கவில்லை. 1947-ல் நாட்டின் சட்டவரைவு இயற்ற நியமிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார் துர்காபாய். 1952-ல் திட்ட கமிஷனிலும் உறுப்பினரானார். மத்திய சமூக நலத் துறை ஆணையத்தின் முதல் தலைவராகவும் 1958-ல் அமைக்கப்பட்ட பெண் கல்விக்கான தேசிய கமிஷனின் முதல் தலைவராகவும் துர்காபாய் பொறுப்பேற்றார்.

போராட்டத்தில் மலர்ந்த காதல்

விடுதலைப் போராட்ட வீரரும் நேருவின் நெருங்கிய நண்பருமான சிந்தாமன் தேஷ்முக், 1952 செப்டம்பர் மாதம் “உன் தனித்துவத்தாலும் உன் நேர்பட்ட பேச்சினாலும் உயர்ந்து நிற்கிறாய்” என்று கடிதம் எழுதி துர்காபாயிடம் தன் காதலைத் தெரிவித்தார்! 1953 ஜனவரி 22 அன்று 44 வயதில் நேரு முன்னிலையில் சிந்தாமனைத் திருமணம் செய்துகொண்டார் துர்காபாய். ஏற்கெனவே எட்டு வயதில் உறவினரான சுப்பா ராவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுச் சிறு வயதிலேயே அந்த பந்தத்தில் இருந்து விடுபட்டவர் துர்காபாய். கணவரின் மற்றொரு மனைவியான திம்மையம்மாவை அவரது இறுதிக் காலம்வரை தன்னுடன் வைத்திருந்து காத்தவர் துர்காபாய்.

சிந்தாமனும் துர்காபாயும் டெல்லியில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய துர்காபாய், குடும்ப நல நீதிமன்றங்கள் இந்தியாவுக்குக் கண்டிப்பாகத் தேவை என்று முதல் குரலை எழுப்பினார். கணவர் சிந்தாமன் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பேற்றபோது, திட்ட கமிஷனில் தான் நீடிப்பது தார்மிகமல்ல என்று கூறி, தன் பதவியை ராஜினாமா செய்தார் துர்காபாய். 1975-ல் தம்பதி இருவருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. சமூகப் பணியின் தாய் என்று இந்திரா காந்தியால் அழைக்கப்பட்ட துர்காபாய் 1981-ல் மறைந்தார்.

கட்டுரையாளர், வரலாற்று ஆர்வலர்.
தொடர்புக்கு: niveditalouis@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x