Published : 25 Aug 2019 10:32 AM
Last Updated : 25 Aug 2019 10:32 AM

வாழ்ந்து காட்டுவோம் 20: தொடரும் நலத்திட்டங்கள்

ருக்மணி

எங்கள் வீட்டருகே பூ விற்கும் பெண்ணுடன் முதுகு கூனுடன் ஒரு சிறுமியும் உட்கார்ந்து பூ கட்டிக்கொண்டிருந்தாள். விசாரித்தபோது கிடைத்த விவரங்கள், அவர்களுக்கு முடிந்தவரை உதவ வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தன.
பிறந்தபோதே அந்தச் சிறுமிக்கு முதுகில் கூன் இருந்ததாம்.

சிகிச்சை எடுக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனாலும், அவளது படிப்பை மட்டும் நிறுத்திவிடவில்லை. அவள் இப்போது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி நல்ல மதிப்பெண்களும் வாங்கியிருக்கிறாள். அவளுக்குச் சட்டக் கல்லூரியில் சேர விருப்பம். ஆனால், அதற்குத் தேவையான பணம் இல்லை.

முதுகு கூன் என்பதும் ஊனத்தில் அடங்கும் என்பதால் சிறுமிக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை தேவை. அதிலும், தேசிய அடையாள அட்டையாகப் பெற்றுக்கொண்டால் பின்னர் பல அரசு சலுகைகளைப் பெற இயலும். இதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை அணுக வேண்டும்.
முதுகு கூனின் தன்மை 40 சதவீதத்துக்கு மேல் இருந்தால் தேசிய அடையாள அட்டை பெற இயலும்; மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரையுடன் சட்டக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என்று அந்தப் பெண்ணுக்கு எடுத்துச் சொன்னேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் அவருக்குச் சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது.
சட்டக் கல்லூரி படிப்பு முடியும்வரை தொழிற்கல்விக்கென ஆண்டுக்கு 7,000 ரூபாய்வரை கல்வி உதவித்தொகை அவருக்குக் கிடைக்கும். மேலும், சட்டக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அவர்கள் வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவுசெய்யவும் சட்டப் புத்தகங்கள் வாங்கவும் 3,000 ரூபாய் வழங்கப்படும்.

முளையிலேயே களைவோம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையும் சலுகைகளும் வழங்குவதில் அரசு எவ்வளவு முனைப்புடன் இருக்கிறதோ அதே அளவுக்கு ஊனத்தின் தன்மையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையால் அவற்றைக் களையவும் உதவுகிறது. தொடக்க நிலை ஊனத்தைக் கண்டறிந்து உரிய பயிற்சிகளை அளிக்க சிறப்புப் பயிற்சி மையங்களை மாவட்டம்தோறும் அமைத்துள்ளது.

செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு:

அனைத்து மாவட்டங்களிலும் பிறந்தது முதல் ஐந்து வயதுவரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப நிலை பாதிப்பைக் கண்டறிந்து அவர்களின் ஐந்தாம் வயதுக்குள் மொழிப் பயிற்சியும் பேச்சுப் பயிற்சியும் வழங்கி அவர்களையும் சாதாரணப் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணந்த பள்ளிப் படிப்பு பயில வழிவகை செய்யப்படுகிறது.

மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு:

பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மன வளர்ச்சிப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய பயிற்சி மூலம் அவர்களின் செயல் திறனை அதிகரிப்பதுடன் அக்குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களைக் கையாளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நல்வாழ்வு சேவைகள், சிறப்புக் கல்வி பயிற்சிபெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும்.

பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு:

பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கான பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீவிரப் பயிற்சி மூலம் பிரெய்லி எழுத்துக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் செயல் திறனை அதிகரித்தல். இதனால், அவர்களையும் சாதாரணப் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைந்த பள்ளிப் படிப்பு பயில வழிவகை செய்யப்படுகிறது. இவ்வகையான மையங்கள் ஏழு மாவட்டங்களில் செயல்படுகின்றன.

சிறப்புப் பரிசோதனைத் திட்டம்

காது கேளாமையை ஆரம்ப நிலையி லேயே கண்டறியும் சிறப்புப் பரிசோதனைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பிறந்தது முதல் மூன்று வயதுடைய பச்சிளம் குழந்தைகளின் காது கேளாமையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சென்னையிலும் சிவகங்கையிலும் சிறப்புப் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
சென்னையில் 11 தாய் - சேய் நல மருத்துவ மனைகளிலும் சிவகங்கையில் மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 10 இடங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

மூளை முடக்குவாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு:

அனைத்து மாவட்டங்களிலும் பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு உரிய முறையில் தூண்டுதல் பயிற்சி, ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் அளிக்கப்படுகிறது.

புறஉலகச் சிந்தனையற்ற குழந்தைகளுக்கு:

மன இறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனையற்ற குழந்தைகளுக்குத் தனித்துவம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது. இவர்களுக்கு ஆரம்ப நிலை பயிற்சி மூலம் சமூகத் தூண்டுதல்கள், பிரதிபலிப்புத் திறன், மொழி அறியும் திறன், பயன்படுத்தும் திறன், முறையான விளையாட்டுத் திறன், சமூகப் பயிற்சி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன. ஒரு முன்னோடித் திட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்த தொடக்க நிலை பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சிறப்புக் கல்வி

பார்வையற்றோர், காது கேளாதோர், மன வளர்ச்சி குன்றியோர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு விடுதி வசதியுடன் கூடிய சிறப்புக் கல்வியும் தொழிற்கல்வியும் அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நான்கு இணைச் சீருடையும் பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வாசிப்பாளர் உதவித்தொகை

பார்வையற்ற மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
1. ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை - ஆண்டொன்றுக்கு 3,000 ரூபாய் வரை.
2. பட்டப் படிப்பு வகுப்புகள் - ஆண்டொன்றுக்கு 5,000 ரூபாய் வரை.
3. முதுகலைப் படிப்புகள், தொழிற்கல்வி வகுப்புகள் - ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை.

தேர்வு எழுத

பார்வைத்திறன் பாதிப்படைந்த மாணவர்களுக்கு உதவுபவர் களுக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் பார்வைத்திறன் பாதிப்புடைய மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வில் வினாக்களுக்கு வாய் மூலம் அளிக்கும் பதிலை எழுதும் உதவியாளருக்கு ஒரு தேர்வுத் தாளுக்கு 300 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் 2007-2008 முதல் பட்டப் படிப்பு வகுப்புகள், பி.காம்., பி.சி.ஏ., ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலரை அணுகினால் மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு பெற்று உயரலாம்.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x