Published : 25 Aug 2019 10:32 AM
Last Updated : 25 Aug 2019 10:32 AM

இப்போ இதுதான் பேச்சு: இணையத்தின் ராஜகுமாரி

ம.சுசித்ரா

பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சித்தாந்தங்களில் பெண்ணியமும் ஒன்று. ஆணுக்கு எதிரானவர்கள், சமூக விதிமுறைகளைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள், எப்போதுமே கோபம் கொப்பளிக்க இருப்பவர்கள் என்றெல்லாம் பெண்ணியவாதிகள் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

பெண்ணியத்தையும் பெண்ணியவாதிகளையும் மேலோட்டமாகப் புரிந்துகொள்வதற்கு முன்னதாகப் பெண்ணியம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோமா என்ற கேள்வியோடு காணொலியைத் தொடங்குகிறார் அந்தப் பெண். 100 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பெண்களின் ஓட்டுரிமைக்காக எழுப்பப்பட்ட உரிமைக் குரலின் வரலாற்றைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறார்.

ஏன் பெண்ணியம் தேவை?

மகனையும் மகளையும் சமமாக வளர்க்கப் பெற்றோருக்கு, வீதியில் நடக்கும் பெண்ணைப் பண்டமாக அல்லாமல் மனிதராகப் பார்க்கப் பழக ஆணுக்கு என வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெண்ணியம் இன்றும் தேவை என்பதைச் சில கணங்களில் சுட்டிக்காட்டுகிறார். ஆண், பெண் இருவருக்குமான சமூக, அரசியல், பொருளாதாரச் சமத்துவத்தைக் கோரிய பெண்ணியம் என்ற சிந்தனை பெண்ணைப் போலவே ஆணுக்கும் அவசியமானது என்பதைக் கலகலப்பாக விவரிக்கிறார்.

‘தி “எஃப்” வேர்ட்’ (The "F" Word) என்ற இந்த வீடியோ பதிவை உருவாக்கியவர் வீடியோ பிளாகரான அலீன் தமிர் என்ற இளம் பெண். உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து அந்நாட்டுப் பெண்களின் நிலை குறித்து ‘டியர் அலீன்’ என்ற தலைப்பில் சுவாரசியமான வீடியோக்களை இவர் தயாரித்துவருகிறார். ‘தி “எஃப்” வேர்ட்’ வீடியோவைப் போலவே பாலியல் சீண்டலைச் சகித்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லும் ‘இஸ் திஸ் ஃபன்னி’ (Is this Funny?), அழகு என்ற சிறையில் பெண்கள் எப்படியெல்லாம் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் ‘தி பியூட்டி டிராப்’ (The Beauty Trap), கசப்புடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும் பிரிந்து மகிழ்ச்சியாக வாழ்வது மேல் என்பதை உணர்த்தும் ‘வாட் ஐ லேன்ர்ட் ஃப்ரம் டைவர்ஸ்’ (What I learnt from Divorce) உள்ளிட்ட பல வீடியோக்கள் நுண்ணுணர்வுடன் பெண்களை அணுக வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

பாதகமே சாதகம்

இஸ்ரேலில் பிறந்து அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்தவர் அலீன் தமிர். 20 வயதிலேயே திருமணம் ஆனது. கணவருடன் சேர்ந்து சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். மூன்றாண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு மணமுறிவு ஏற்பட்டது. வாழ்கைத் துணை, நிறுவனம் இரண்டுமே பறிபோன நிலையில் தன்னை நிலைகுலையச் செய்த சூழலையே புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாக அவர் மாற்றிக்கொண்டார்.

இனியும் ஒரே இடத்தில் இருந்து தன்னுடைய உலகைச் சுருக்கிக்கொள்ளத் தேவையில்லை என்பதை உணர்ந்தார். உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களைச் சந்தித்து அவர்களோடு உரையாடினார். பெண்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சினைகள் குறித்து வீடியோ பதிவு செய்யும் வீடியோ பிளாகராக மாறினார்.

பெண்கள் தங்களுடைய அடையாளங்களைப் பொதுவெளியில் நிரூபிக்கவும் தேசம், நிறம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து பிற பெண்களோடு சமூக ஊடகத்தில் கலந்துரையாடவும் 2015-ல் ‘கேர்ள்ஸ் கான் குளோபல்’ (Girls Gone Global) என்ற இணையதளத்தை வடிவமைத்தார். இன்று 29 வயதில் அவர் ஒரு சமூக ஊடக நட்சத்திரம். அவருடைய ஃபேஸ்புக் வீடியோக்களை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x