Published : 25 Aug 2019 10:33 AM
Last Updated : 25 Aug 2019 10:33 AM

நட்சத்திர நிழல்கள் 20: யார் பசிக்கு இரையானாள் குப்பம்மா?

செல்லப்பா

சென்னை மாநகரத்தில் மாட மாளிகைகளும் உண்டு; சிறு சிறு குடிசைகளும் உண்டு. மாட மாளிகை மனிதரைப் பற்றிய எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சிறு குடிசையில் வாழும் மனிதர்கள் பற்றிய படங்களும் அவ்வப்போது வருவதுண்டு. அப்படியொரு குடிசையில் வாழ்ந்து மறைந்த இளம் பெண்ணொருத்தியின் கதை இது. குடிசை என்றாலும், மாளிகை தாங்கும் அளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள் குப்பம்மா.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சொல்லப் படாத எத்தனையோ கதைகள் கரையைத் தாண்டாத அலைகளாக நெஞ்சுக் கூட்டுக்குள் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அப்படி யாருமறியாத கதையாகப் போகாமல் இந்தக் குப்பம்மாவின் கதையைத் தெரிந்து நமக்குச் சொன்னவர் இயக்குநர் துரை. தான் கதை, வசனம் எழுதி இயக்கிய ‘பசி’ (1979) படத்தில் அவர் குப்பம்மாவின் வாழ்க்கையைச் சொல்லியிருந்தார். குப்பம்மாவை நாம் காணாத குறையைப் போக்கியிருந்தார் ஷோபா. வாழ்க்கையில் குப்பம்மாக்களை எளிதில் கடந்துசென்றுவிடுகிறோம்; ஆனால், குப்பம்மாக்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்திருந்தால் இவ்வளவு எளிதில் அவர்களைக் கடந்துசெல்ல முடியுமா?

ஒரு குடும்பத்தின் கதை

குப்பம்மாவின் குடும்பம் பெரிது. தந்தை முனியன் ரிக்‌ஷா இழுத்துச் சம்பாதிக்கிறார். சம்பாதிப்பதில் ஒரு பகுதியைக் குடித்தனத்துக்கும் பெரும் பகுதியைக் குடிக்கும் செலவிடுகிறார். அவர் எதைக் குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. காய்ச்சலில் அவதிப்படும் அவரிடம் மருத்துவச் செலவுக்கெனத் தந்த - குப்பம்மாவிடம் இருந்த ஒரே பட்டுப்புடவையை அடகு வைத்துக் கிடைத்த - பணத்தைக்கூடக் குடித்துவிட்டு வந்து கலாட்டாவில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுகிறார்.

தந்தை ஊதாரி என்றால் தமையனோ உருப்படாதவன்; பெரிய சுயநலமி. அந்த மூத்த மகன் தனக்குப் பிடித்த பெண்ணைக் கைப்பிடித்து, தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று கரையேறிவிட்டான். அவனுக்கு இப்போது கூவக் கரையின் நாற்றத்தில் கிடக்கும் இந்தக் குடிசை தேவைப்படவில்லை; கிளிக்கு றெக்கை முளைத்துவிட்டது. அடுத்தடுத்துச் சில தம்பிகள், ஒரு மாற்றுத்திறனாளி தங்கை, அம்மா என இருக்கும் குடும்பத்தை மூழ்காமல் தடுக்கத் தானும் உழைக்கச் செல்கிறாள் குப்பம்மா.

அவளுடைய கூட்டாளி செல்லம்மாளுடன் சேர்ந்து குப்பை பொறுக்கச் செல்கிறாள். அதில் கிடைக்கும் இரண்டு, மூன்று ரூபாய் குடும்பத்துக்கு உதவும் என்பதால் தெருத் தெருவாகச் சுற்றி குப்பையைப் பொறுக்குகிறாள். பெண் எந்த நிலையில் இருந்தாலும் அவளுக்கு ஆணால் தொந்தரவு இருக்கும் என்பதை அவளுடைய குடிசைக்கு எதிரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் கண்ணையா நிரூபிக்கிறான்.

அவன் அவ்வப்போது ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’ என்பதுபோல் ஏதாவது பாட்டு ரெக்கார்டைப் போட்டு குப்பம்மாவின் கவனத்தை இழுக்க முயல்கிறான். ‘எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?’ என்பதுபோல் அவளுடைய எந்தத் துயரத்தையும் அறிந்துகொள்ளாதவன் கண்ணையா. அவன் ஜாடைமாடையாகப் பாட்டுப் போடும்போதெல்லாம் குப்பம்மாவும் கைக்குக் கிடைக்கும் செருப்பு, துடைப்பம் என்று எதையாவது தூக்கிக்காட்டி அவனைத் துரத்துகிறாள்.

அவளும் பெண்தானே

குடும்ப நிலைமை அறிந்து ஆண்களிடம் இருந்து விலகியே இருக்கும் குப்பம்மாவின் வாழ்வில் வருகிறான் ரங்கன். லாரி டிரைவர் ரங்கனிடம் செல்லம்மாவின் அண்ணன் ஆறுமுகம் கிளீனராக வேலை பார்க்கிறான். அந்த அறிமுகம் வழியே ரங்கன் குப்பம்மாவுக்குப் பழக்கமாகிறான். தொடக்கத்தில் அவனிடமிருந்து எட்டியே நிற்கும் குப்பம்மாவை, தனது சிறு சிறு உதவிகள் வழியே அவன் எட்டிப் பிடிக்கிறான். நெருக்கடியின் போதெல்லாம் துரியோதனின் அவையில் பாஞ்சாலியின் மானம் காக்க வந்த பரந்தாமன்போல் ரங்கன் வந்துவிடுகிறான். குடித்துவிட்டு கலாட்டா செய்து சிறை சென்ற முனியனை ஜாமீனில் எடுக்க அவனே உதவுகிறான்.

அவனை நல்லவன் என்று நம்புகிறாள் குப்பம்மா. அவனும் நல்லவனாகவே நடந்துகொள்கிறான். ஆனால், தான் திருமணமாவன் என்பதையோ தனக்கு கௌரி என்ற அழகான மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர் என்பதையோ அந்த ‘நல்லவன்’ சொல்லவே இல்லை. ஆசையுடன் தகப்பன் கேட்கும் பிரியாணியை வாங்கித் தர ஹோட்டலுக்குச் செல்கிறாள் குப்பம்மா. அவளிடம் இருக்கும் காசுக்குப் பிரியாணி வாங்க இயலவில்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். அப்போதும் எதிர்பட்டுவிடுகிறான் ரங்கன்.

அந்த நேரத்தில் அங்கே ரங்கன் வராமலிருந்திருந்தால் குப்பம்மா வாழ்வில் பெரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டிருக்கும். நமக்கும் குப்பம்மா யாரென்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால், அவளுடைய வாழ்வெனும் திரைக்கதையில் விபத்து நடக்க வேண்டுமென்பது எழுதப்பட்டிருக்கிறது. விருப்பத்துடன் அவளுக்கும் குடும்பத்தினருக்கும் பிரியாணி வாங்கித் தருகிறான் ரங்கன். வீட்டுக்குத் திரும்பும்போது தன்னுடன் லாரியில் வரும்படி அழைக்கிறான் ரங்கன். அவன் பேச்சைத் தட்ட முடியாமல் அவளும் லாரியில் செல்கிறாள். அப்போதுதான் அந்த விபத்து நடந்தேறுகிறது.

ரங்கன் நல்லவன் என்று நம்பித் தன்னைத் தந்துவிடுகிறாள் குப்பம்மா. அவள் வீட்டுக்கு வரும் முன்னரே வீட்டுக்குத் தகவல் வந்துவிடுகிறது. தாய் வள்ளியம்மை மகளைக் கேள்விகளால் துளைக்கிறாள். முனியனுக்கோ அது ஒரு பிரச்சினையே இல்லை. அவன் பாட்டுக்கு பிரியாணியை ருசித்து உண்கிறான். குப்பம்மா ஒருமுறை தன்னை இழந்திருக்கிறாள்.

ஆனால், முனியன் தனது ரிக்‌ஷாவில் தினசரி அழைத்துச் செல்லும் ரூபாவோ தினமும் தன்னை இழக்கிறாள். அதுவும் குடும்பத்தினர் சம்மதத்துடன். இதையெல்லாம் பார்த்த அவனுக்கு இது மிகச் சாதாரணமாகத் தெரிகிறது. ஆனால், வள்ளியம்மை மானமே பெரிதென எண்ணுகிறாள். அவளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலையைத் தண்டவாளத்தில் கொடுத்துவிடுகிறாள்.

பாவத்தின் சம்பளம்

தாயின் இறப்பு குப்பம்மாவை மிகவும் பாதிக்கிறது. என்றபோதும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவள் ஏற்றுக்கொண்டு, எப்போதும்போல் வேலைக்குச் செல்கிறாள். ரங்கன் மீது அவளுக்கு வருத்தம் இருக்கிறது; ஆனால், வெறுப்பில்லை. தன்னை ஏமாற்றிவிட்டானே என்ற ஆதங்கம் அவளுக்கு நிறைய இருக்கிறது. குப்பம்மா மட்டும் லேசாகக் கண்ணசைத்திருந்தால் அவளுடைய குப்பத்தினர் ரங்கனைக் கொன்று போட்டிருப்பார்கள். அதைத் தனது பெருந்தன்மை மூலம் தவிர்த்துவிட்டாள் குப்பம்மா.

ரங்கனைக் குற்றவுணர்வு கொல்கிறது. அவனுடைய மனைவி எல்லாவற்றையும் அறிந்து துயருறுகிறாள். ஒருபுறம் மனைவி மறுபுறம் குப்பம்மா இரண்டுக்கும் நடுவில் அவனை மாட்டவைத்து வேடிக்கை பார்த்தது காமம். ஆப்பசைத்த வானரமானான் ரங்கன். அவனால் உருவான குழந்தையைச் சுமந்திருந்தாள் குப்பம்மா. பிரசவ நேரத்தில் ரங்கனைப் பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவனுக்கு ஆள் அனுப்பி, அவன் வந்துசேர்வதற்குள் குப்பம்மா பூமிக்கு வந்துசேர்ந்த கடமை முடிந்த நிம்மதியில் கண்மூடிவிட்டாள். குழந்தையை ரங்கனும் அவனுடைய மனைவி கௌரியும் கையேந்திக்கொண்டார்கள்.

வாயும் வயிறுமாக இருந்த நாயை எட்டி உதைப்பதையே தாங்கிக்கொள்ள முடியாத குப்பம்மா வாயும் வயிறுமாக இருந்தபோது, ஈவு இரக்கமின்றிக் காலம் அவளை எட்டி உதைத்தது. வறுமை, துரோகம் போன்ற எவற்றாலுமே குப்பம்மாவின் உயரிய மானுடப் பண்புகளைச் சிதைக்க முடியவில்லை என்பதே அவளது தனித்துவம். ஆகவே, மரணமளித்து காலன் குப்பம்மாவை வாழ்விலிருந்து விடுவிடுத்துவிட்டான்.

ஆனால், வாழ்வு ரங்கனுக்குத் தண்டனை தரக் காத்திருந்தது. குப்பம்மா பெற்றெடுத்த குழந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு கணத்திலும் ரங்கனின் தவறு அவன் கண்முன் வந்துபோகும். அதிலிருந்து அவன் தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல. குப்பம்மா வேடத்துக்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருந்த ஷோபாவின் வாழ்க்கையும் முடிவும் நாம் நன்கு அறிந்தவையே.

(நிழல்கள் வளரும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in
படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x