Published : 24 Aug 2019 11:00 AM
Last Updated : 24 Aug 2019 11:00 AM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 33: கேள்விக்குறியாகும் பழங்குடியினரின் எதிர்காலம்

சு. தியடோர் பாஸ்கரன்

இந்தியத் துணைக்கண்டத்தில் ஊழிக்காலமாகத் தழைத்திருந்த காடுகளுக்கும் அதை வாழிடமாகக் கொண்ட காட்டுயிர்களுக்கும் எமனாக வந்து சேர்ந்தது காலனி ஆட்சி. துப்பாக்கிகளுடன் வந்துசேர்ந்த ஆங்கிலேயர்களுக்கு, இந்தியக் காடுகள் காவலாளி யாரும் இல்லாத கருவூலமாகத் தெரிந்தன. காடுகளைச் சகட்டுமேனிக்கு அழிக்கத் தொடங்கினார்கள்.

தங்கள் நாட்டில் இயற்கைக் காடுகளை முற்றிலும் அழித்துவிட்ட பிரித்தானியர்களுக்கு, இது தவறாகவே தெரியவில்லை. அங்கு கப்பல் கட்டவும், இங்கே ரயில் பாதைகள் பாவவும் காடுகள் அழிக்கப்பட்டன. மழைக்காடுகளால் போர்த்தப்பட்டிருந்த மலைகள் தேயிலை, காபித் தோட்டங்களுக்காக மொட்டையடிக்கப்பட்டன.
அதே வேகத்தில் சாகச வேட்டை என்ற பெயரில் காட்டுயிர்களையும் தீர்த்துக்கட்ட ஆரம்பித்தனர். காடுகளின் மேல் தங்கள் பிடியை இறுக்க பிரித்தானிய அரசு, இந்திய வனச்சட்டத்தை (Indian Forest Act) 1927-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இதன்மூலம் மரங்கள் இருந்த எந்த ஒரு பகுதியையும் ‘காடு’ என அறிவிக்க அரசுக்கு அதிகாரம் கிடைத்தது.

நசுக்கப்பட்ட பழங்குடிகள்

பல்லாண்டுகளாகக் காட்டில் வசித்திருந்த பழங்குடியினரின் மரபு உரிமைகள் நீக்கப்பட்டன. அளப்பரிய செல்வத்தை உள்ளடக்கிய காடுகளை ‘பாதுகாப்புக் காடுகளாக' அறிவித்து, காடு சார்ந்த மக்களின் வாழ்க்கையை நசுக்கினார்கள். நாடு விடுதலையடைந்த பின்னரும் இந்தப் போக்கு நிற்கவில்லை. காட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்திலேயே அரசு குறியாக இருந்தது. அது மட்டுமல்ல ‘வளர்ச்சி’ என்ற பெயரில் அணைகள் கட்ட, சாலைகள் பாவ, வெட்டு மரத்தொழிலுக்காக, பணப்பயிர்களுக்காக, கனிமங்களை சுரண்ட எனப் பரந்திருந்த காட்டுப்பகுதிகள் அழிக்கப்பட்டன.

காட்டுயிர்களுக்காகச் சிலர் கவலைப்பட்டாலும் காடுகளில் வசித்த பழங்குடியினருக்காகப் பெரிதாக வாய் திறக்கப்படவில்லை. பல்லாண்டு காலம் காட்டில் வசித்து, சில இடங்களில் பயிர்செய்து வந்திருந்தாலும் இந்த மலைவாழ் மக்களிடம் நிலவுரிமைக்கு எந்த அத்தாட்சியும் இல்லை. காடுகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், அதிகாரிகளுக்கு அஞ்சி அஞ்சி ‘பேழையில் உயிர்க்கும் பாம்பென' பழங்குடிகள் வாழ்ந்திருந்தனர்.

அதிகரித்த கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் காட்டை நம்பி வாழும் பழங்குடி இனங்கள் பல உண்டு. இருளர், காடர், முதுவர், பளியர், கோத்தர், புலையர், காணி, குறும்பர், மலையாளி என முப்பத்தியாறு பழங்குடிகள் உள்ளனர் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது காட்டு வாழ்க்கை முறை சீரழிவதைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. காலனி ஆட்சியாளர்கள் பழங்குடியினரைப் எப்படி நடத்தினார்களோ, அப்படியே நாமும் நடத்தினோம், நடத்திவருகிறோம். சிறிது சிறிதாக அவர்களது வாழ்வாதாரங்களும் நிலவுரிமைகளும் நசுக்கப்பட்டுவிட்டன.

சில ஆர்வலர்களும் சில அமைப்புகளும் காட்டுயிர் அழிக்கப்படுவது பற்றிக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தனர். இதன் விளைவாக வந்ததுதான் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972. இன்று நம் நாட்டில் 100 தேசியப் பூங்காக்களும் 400 சரணாலயங்களும் உள்ளன. எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தாலும், இது நாட்டின் மொத்தப் பரப்பில் வெறும் 5 சதவீதமே. உயிரினங்களைப் பாதுகாப்பதெற்கெனக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், பழங்குடியினரைப் பல விதங்களில் பாதித்தது.

முயல், காட்டுக்கோழி, பன்றி போன்ற சிற்றுயிர்களை வேட்டையாடி உண்டுகொண்டிருந்த அவர்களுக்கு இது பெருத்த அடியாக விழுந்தது. சிறு மனிதர் கூட்டம் உணவுக்காக மட்டும் காட்டுயிரைக் கொல்லும்போது, காட்டுயிர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். ‘காட்டுயிர்ப் பாதுகாப்பு' என்ற பெயரில் பழங்குடியினர் மீதான அரசு கட்டுப்பாடு இறுகியது.

தாமதப்படும் உரிமை

இந்தக் காலகட்டத்தில் பழங்குடியினருக்கு ஆதரவாக எழுந்த இயக்கங்களும், மேதா பட்கர் போன்ற ஆர்வலர்களின் முயற்சிகளும் அரசின் கவனத்தை இந்தப் பிரச்சினைமீது திருப்பின. இதன் விளைவுதான் 2007-ல் வந்த ‘காட்டுரிமைச் சட்டம்' ( The Scheduled Tribes and Other Traditional Forest Dwellers Recongition of Forests Rights Act , 2007). இந்தச் சட்டத்தின் முகப்புரையில் விவரிக்கப்பட்டிருக்கும் அடிப்படையான கருதுகோள், பழங்குடியினருக்கும் காடுகளுக்கும் இருக்கும் பிணைப்பைப் பற்றியது.

“காலனி ஆட்சிக் காலத்திலும் நாடு விடுதலை அடைந்த பின்பும், பழங்குடியினருக்கு மரபு சார்ந்த நிலங்களின் மேலிருந்த உரிமை சரியாக உணரப்படவில்லை. இதனால் காடுகளின் ஒரு பரிமாணமான, காட்டுப் பாதுகாப்பின் ஒரு அங்கமான பழங்குடியினர், பட்டியல் பிரிவு மக்களுக்குப் பெரும் வரலாற்று அநீதி இழைக்கப்பட்டது” என்கிறது. இதைச் சரிசெய்தாக வேண்டும். இந்தச் சட்டம் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டியது. இதில் தாமதம் ஏற்பட்டது.

தவறான உத்தி

நிலைமை இப்படியிருக்க, இந்தச் சட்டத்துக்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு உருவானது. கனிமச் சுரங்க அதிபர்களுடன், பிரபலக் காட்டுயிரியலாளர்கள் சிலரும் இந்தச் சட்டத்தை எதிர்க்கத் தொடங்கினார்கள். பல கருத்தாக்கங்களைப் போல, பழங்குடியினரைக் காட்டிலிருந்து வெளியேற்றினால்தான் காடுகளையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க முடியும் என்ற சித்தாந்தம் மேற்கேயிருந்து வந்த ஒன்று. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் யோசமெட்டி பள்ளத்தாக்கு என்ற காட்டில் ஊழிக்காலமாக வசித்துவந்த அமெரிக்கப் பழங்குடியினரை வலிந்து வெளியேற்றி, அதை ஒரு தேசியப் பூங்காவாக அமெரிக்க அரசு அறிவித்தது .

இவ்வாறு உள்ளூர் மக்களை விரட்டியடித்து, காட்டுயிரை காப்பாற்றும் முறை ‘யோசமெட்டி உத்தி’ என்று பெயர் பெற்றது. நம் நாட்டிலும் இந்த உத்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். பிரபலத் தன்னார்வக் குழுக்கள் சிலவும் இதையே சொல்கின்றன. ஆனால், காட்டையும் காட்டுயிர்களையும் பெரிதும் பாதித்துக்கொண்டிருக்கும் சுற்றுலாத் தொழிலுக்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை. முதுமலையைச் சுற்றி மட்டும் அனுமதியின்றி செயல்பட்டுக்கொண்டிருந்த 70-க்கும் மேற்பட்ட விடுதிகள், சமீபத்தில்தான் மூடப்பட்டதைப் பற்றி அறிந்திருப்போம். நாடு முழுவதும் இன்னும் மூடப்படாத எண்ணற்ற சட்டவிரோத விடுதிகள் உள்ளன.

வழுவிய நீதி

இந்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 11 நீதிப்பேராணைகள் பதிவு செய்யப்பட்டன. இவை யாவும் ஒன்றாக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பின் வழக்குரைஞர் யாரும் ஆஜராகவில்லை. இதற்கிடையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 17 மாநிலங்களில் காட்டில் வசிக்கும் பழங்குடியினரை காட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமே பிப்ரவரி 28-ம் தேதி நிறுத்தி வைத்துள்ளது. இதுதான் இன்றைய நிலைமை. அடுத்து தன்னார்வக் குழுக்களும் அரசும் என்ன செய்யப்போகின்றன என்று தெரியவில்லை.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x