Published : 24 Aug 2019 10:59 AM
Last Updated : 24 Aug 2019 10:59 AM

முதுமையும் சுகமே 19: வயிற்றுக்கும் உணவே மருந்து

டாக்டர் சி. அசோக்

வாய், குடல் பாதை நோய்கள் வாசற்படி அணுகாமல் இருக்க செய்ய வேண்டியவை. குறிப்பாக நெஞ்சு எரிச்சல், எதிர்க்களித்தல், செரிமானமின்மை பிரச்சினை இருப்பவர்கள் கீழ்க்காணும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்:

* எப்போதும் மிகைக் கொழுப்பு, எண்ணெய் உணவைத் தவிருங்கள்

* காலை எழுந்து பல் துலக்கியதும், ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவதை கட்டாயப் பழக்கமாக்கிக்
கொள்ளுங்கள்

* அதிகமான காரம், மசாலா, புளிப்பு, உப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

* உணவில் வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள், நார்ச் சத்துக்கள் போதுமான அளவு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து
கொள்ளுங்கள்.

* உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே உணவு, பானங்களை அருந்துவதை நிறுத்துங்கள்

* சாப்பிட்டவுடன் அரக்கப் பறக்க ஓடாதீர்கள், கத்தாதீர்கள், எப்போதும் கூன் போடாமல் நிமிர்ந்து உட்காருங்கள்

* தொப்பைக்காரர்கள் உடல் எடையைக் குறைத்தாக வேண்டும்

* வந்திருக்கும் நோய்களுக்கு ஏற்ற உணவைத் தேர்வுசெய்ய வேண்டும் - தகுந்த உணவு நிபுணர்கள், மருத்துவர்களின் துணையுடன்.

* புகை, மது எக்காலத்திலும் வேண்டாம் (காப்பி, டீ இல்லாமல் வாழ முடியாது என்பவர்கள் அளவுடன் பருகலாம்)

* இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள், குறிப்பாக இறுக்கமான ஜீன்ஸ் வேண்டாம்.

* எப்போதும் சத்தான சரிவிகித உணவையே உண்ண வேண்டும்

* முதுமையில் விருந்தும் விரதமும் தேவையில்லை.

கீழ்க்காணும் உணவு வகைகள் வயிறு, குடல் பாதைப் பிரச்சினை உடையவர்களுக்கு நல்லது

# குடிநீராக சீரக நீர்
# கறிவேப்பிலை, கொத்தமல்லி
# பிரண்டை (துவையல் அல்லது சட்னியாக). பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு மேல் தோலை உரித்துவிட்டு மோரில் 30 நிமிடம் ஊறவைத்து சமைக்கலாம் (வயிறு நோய்களுக்கு பிரண்டையைப் போல சிறந்த உணவு ஏதுமில்லை).
#வாரம் ஒரு முறை வாழைத்தண்டு, பாகற்காய், சுண்டைக்காயை உணவில் சேர்ப்பது தேவையற்ற குடல் பாதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவியாக அமையும்.

தினசரி உணவில் கீழ்க்காண்பவை இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்

# ஏதேனும் ஒரு பழ வகை (நம் மண்ணுக்கு ஏற்ற, பருவக்காலத்துக்கு ஏற்ற பழங்கள்). நாரத்தம், ஆரஞ்சு, புளியம் பழம் போன்ற நாம் மறந்துவிட்ட பழங்கள்
# ஏதேனும் ஒரு பிஞ்சுக் காய்கறி - கரும்பச்சை நிறக் கீரைகள் (பொன்னாங்கண்ணி, பசலை, முருங்கை). செரிமானக் கோளாறு உள்ளவர்கள் சூப்பாக அருந்தலாம்
# செரிமனம் நன்றாக இருந்தால் பருப்பு, கொட்டை வகைகளை தேவையான அளவு உண்ணலாம் (நிலக்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்)
# நெய் அளவுடன் (ஒரு நாளைக்கு 5 முதல் 10 மி.லி.)
# அதிகம் புளிக்காத வெண்ணெய் எடுத்த மோர்
# தேன், இளநீர் (வெறும் வயிற்றில் குடிப்பது நல்லதல்ல), எலுமிச்சைச் சாறு (உணவு இடைவேளைகளில்)
# செரிமானத்தன்மை அறிந்து பால் அருந்தலாம்
# மதிய உணவில் அறுசுவையும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்

முதுமையில் இயற்கையாகவே இரப்பை, குடல் பாதைகள் தேய்மானத் திசையில் இருக்கும். கூடவே பல்வேறு நோய்கள் வந்திருக்கலாம். அதற்குப் பல்வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கலாம். அதனால் இரைப்பை, குடல் பாதை சிரமங்கள் இருந்துகொண்டே இருக்கும். இதைச் சமாளித்து ஆரோக்கியமாக இருக்க உணவு பற்றிய புரிதலும், அதை உண்பதும் முக்கியம். அதே அளவு முக்கியம் இரப்பை குடல் பாதைக்கான யோகப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள், முடிந்தவர்கள் நீச்சல் நிபுணர்கள் துணையுடன் நீந்துவது முதுமையைச் சுகமாக்க உதவும்.

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்
தொடர்புக்கு: drashokshpl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x