Published : 24 Aug 2019 11:03 AM
Last Updated : 24 Aug 2019 11:03 AM

சென்னை 380: உள்ளத்தின் நலம் காத்த ஆங்கிலேயர்!

நிலவன்

சென்னைப் பட்டினத்தின் வரலாற்றில் மருத்துவத் துறை சாதனைகள், முதன்மையான சாட்சியங் கள்! குறிப்பாக, மருத்துவத் துறையில் ஆங்கிலேயரின் பங்களிப்பு சென்னை நகர வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது.
அந்த வகையில் இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பெருமையைக் கொண்டது, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநலக் காப்பகம் (Institue of Mental Health, Kilpauk, Chennai). பெயருக்கு இது காப்பகமாக இருந்தாலும், இப்போது மருத்துவமனையாகவும் பட்டமேற்படிப்புக் கல்விநிலைய மாகவும் செயல்பட்டு வருகிறது.

மனநலக் காப்பகம் இப்போது இருக்கும் இடத்தில் தொடங்கப் பட்டிருக்கவில்லை. சென்னையில் தற்போதைய கோட்டைப் பகுதியை ஆட்சிசெய்த கிழக்கிந்திய கம்பெனியினருக்கு, மனநலம் குன்றியவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது பெரிய வேலையாக ஆனது. இதற்கான பொறுப்பு அப்போது மருத்துவ வாரியச் செயலாளராக இருந்த டாக்டர் வாலண்டைன் கனோலியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்தான், மனநிலைப் பாதிக்கப் பட்டவர்களுக்கான தனியார் காப்ப கத்தை உருவாக்கினார். பின்னர் அது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் படிப்படியான வளர்ச்சி குறித்து துண்டுதுண்டான தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

கீழ்ப்பாக்கம் வந்தது

மருத்துவமனையின் கண்காணிப் பாளராகப் பணியாற்றியவரும் 1925-ல் மெட்ராஸ் நகரசபையின் தலைவரான ஒட்டிலிங்கம் தணிகாசலத்தின் மகனுமான டாக்டர் ஒ. சோமசுந்தரம் இந்த மருத்துவமனை குறித்த பழைய தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் ‘பழைய மெட்ராஸ்’ என்ற புத்தகத்தை எழுதியவரும் 1977-81 காலத்தில் மருத்துவமனையின் அறிவுரைக் குழுவில் இடம்பெற்றவரு மான முன்னாள் நீதிபதி டபிள்யு.எஸ். கிருஷ்ணசாமி கூறும் தகவல் குறிப்பிடத்தக்கது: “இப்போதைய மருத்துவமனை இடமானது 1794-ன் தொடக்கத்தில், டாக்டர் கனோலிக்கு மானியமாக வழங்கப்பட்டது.

மொத்தம் 45 ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு 51 பகோடாக்கள் (அப்போதைய நாணய முறை) வாடகை எனத் தீர்மானிக்கப்பட்டது. புரசைவாக்கத்துக்கு உட்பட்ட பகுதியில் 1799-ல் உள்ளூர் மக்களுக் கான முதல் மருத்துவமனையாக அது கட்டிமுடிக்கப்பட்டது. இந்த இடத்துடன், இன்னொரு மருத்துவரான ஜான் அண்டர்வுட் என்பவர் அளித்த 30 காணி நிலமும் மருத்துவமனையில் இணைக்கப்பட்டது. இவர்தான் மருத்துவமனைக்கான தொடக்கச் செலவுகளை கவனித்துக் கொண்டார்.”

டால்டன் ஆஸ்பத்திரி

நீதிபதி கிருஷ்ணசாமி கூறும் தகவல்களுடன் பெரிதாக முரண்பட வில்லை எனும்போதும், மாறுபட்ட கூடுதல் தகவல்களை அளிக்கிறார், அ.ம.கா.வின் முதல் இருப்பிட மருத்துவ அதிகாரியான டாக்டர் என். சுப்பிரமணியம்.
“அரசு மனநல மருத்துவமனைக் கான தொடக்கம் 1795-ம் ஆண்டில் வேர்பிடிக்க ஆரம்பித்தது. டாக்டர் கனோலிக்கு மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்துக்கான இடமானது, மாத வாடகை 825 ரூபாய் என 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து தரப்பட்டது.

கனோலியை அடுத்து மருத்துவர்கள் மாரீஸ் ஃபிட்செரால்டு, ஜான் கௌல்டு ஆகியோர், இல்லத்தின் பொறுப்பாளர்களாக இருந்தனர். அந்தக் காலத்தில் இருபது பேரை மட்டுமே இல்லத்தில் சேர்க்க முடிந்தது. 1807- 1815 வரை கண்காணிப் பாளராகப் பணியாற்றிய டாக்டர் டால்டன், இல்லத்தின் கட்டிடங்களை சீரமைத்தார். ‘டால்டன் பைத்தியக்கார ஆஸ்பத்திரி’ என மக்கள் குறிப்பிடும் அளவுக்கு மாறியது. அவர் ஓய்வுபெற்றபோது 54 பேர் மனநல இல்லத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், டால்டன் மருத்துவமனை செயல்பட்டுவந்த இடம், கைமாறியது. மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் மில்லர், அந்த இடத்தில் ‘கல்லூரிப் பூங்கா’ என்ற பெயரில் பெரிய பங்களாவைக் கட்டினார். காப்பகமானது பக்கத்தில் இருந்த இரண்டு கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, விரிவுபடுத்தப்பட்டது.

காப்பகத்திலிருந்து சிகிச்சை வரை

1871 மே 15 அன்று இப்போதைய இடத்தில் அரசு மனநலக் காப்பகம், 145 நோயாளிகளுடன் செயல்படத் தொடங்கியது. மருத்துவர் ஜான் மர்ரே என்பவர் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்று, காப்பக வளாகத்தி லேயே குடியிருப்பையும் அமைத்துக் கொண்டார். வீட்டைப் போன்ற அறைகளாக நோயாளிகளுக்கான அறைகள் அமைக்கப்பட்டன.
1892-ல் வெளி மாவட்டங்களி லிருந்து மனநோயாளிகளாக இருந்த கைதிகள் இங்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, காப்பகத்தில் புதுவிதமான நோயாளிகள் நிறைந்தனர். அதற்கேற்ப சில கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. சக நோயாளி களுக்கோ பொது மக்களுக்கோ தொல்லையைத் தரக்கூடியவர்களைக் கட்டுக்குள் வைக்கவேண்டிய நிர்ப்பந்தம் அப்போது உருவானது.

மனநோயாளிகளுக்கு அடைக் கலம் தரக்கூடிய காப்பகம் என்பது ஒரு கட்டத்தில் பொருத்தமில்லாமல் போக, ‘மெட்ராஸ் மனநோயாளிகள் காப்பக’மானது, 1922-ல் ‘அரசு மனநல மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றப்பட்டது. அடுத்த இரண்டாம் ஆண்டில் டாக்டர் ஹென்ஸ்மேன் என்பவர் கண்காணிப்பாளர் ஆனதும், மருத்துவமனை வளாகத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. நோயாளி களைக் கவனிக்காத பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதை அவர் இயல்பாகக் கொண்டிருந்தார். அதேநேரம், நடவடிக்கையால் மனம் திருந்துபவர்களுக்கு அதேவேகத்தில் தண்டனைக் குறைப்பைச் செய்யவும் அவர் தயங்கியதில்லை.

சேவை தொடருமா?

இங்கு உள்நோயாளிகளுக்கும் புறநோயாளிகளுக்கும் தனித்தனி யான வளாகங்கள் உள்ளன. உள்நோயாளிகள் பிரிவில், கட்டிடங்கள் மட்டுமின்றி, சில நடைமுறைகளும்கூட இன்னும் தொடக்க காலத்தை நினைவூட்டும் படி இருக்கின்றன. காப்பகமாக அமைக்கப்பட்டபோதே ஐரோப்பாவில் உள்ளபடி, சிறையைப் போலவே இதன் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

மணி அடித்தவுடன் உணவு, காலையில் அறையிலிருந்து நோயாளிகள் வெளியே வருவது, அதைப் போலவே மாலையில் உள்ளே அடைக்கப்படுவது போன்றவை இன்னும் தொடர்கின்றன. சிறையில் இருப்பவர்கள் அங்கிருந்து தப்பிவிடாமல் தடுப்பதற்காக வார்டர்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுவதைப் போலவே, இங்கும் இரவுப் பணியிலுள்ளவர்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று கண்காணிப்பதற்கும் நெடிய வரலாறு உண்டு.
1971-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய தற்போதைய கீழ்ப்பாக்கம் வளாகத்தில், இன்னும் மிச்ச மீதியிருக்கும் மனநலக் காப்பு முறைமைக்கு அடித்தளமாக இருக்கிறது கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.

அந்நிய ஆதிக்கத் தால் விளைந்தது என்றாலும், அறநெறியுடன் மேற்கொள்ளப்பட்ட உன்னதமான மருத்துவ சேவை அங்கே வழங்கப்பட்டது! உலகமயம் ஆகி கால் நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில், ஆங்கிலேயர் கால நேயமுள்ள அரசு மனநல சேவை தொடர்ந்து மேம்பட்ட போக்கில் தொடருமா என்பது கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x