Published : 23 Aug 2019 11:55 AM
Last Updated : 23 Aug 2019 11:55 AM

சுதந்திர நாட்டின் அடிமைகளா நாம்?

ச.ச.சிவசங்கர்

சுதந்திர தினத்தன்று பலரும் வரலாற்றை நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொண்டிருப்பது வழக்கம். உண்மையில் சுதந்திரம் கிடைத்துவிட்டதா, சுதந்திரமான நாட்டில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்பும் விதமாக சில ஆவணப்படங்கள் திரையிட்டன. ‘சுதந்திரம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மறுபக்கம் திரைப்பட அமைப்பும் பெரியார் வாசகர் வட்டமும் இணைந்து இந்தத் திரையிடலை நடத்தின.

தீராத தாகம்

காஷ்மீர் பற்றிய பேச்சுகளும் விவாதங்களும் அதிகரித்திருக்கும் தருணம் இது. நாட்டின் ஒரு பகுதியான காஷ்மீர் பிரிக்கப்பட்டு, அதற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அண்மையில் ரத்து செய்யப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். காஷ்மீரைப் பற்றிய பல்வேறு கதைகள் வரலாறு நெடுகிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன. அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டின் ஒரு பகுதி, தினமும் தனது விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. அதன் துயர் நிறைந்த கதைகளை உரக்கப் பேசுகிறது ‘ஜஸ்னே ஆசாதி’ (Jashn e Azadi) என்ற ஆவணப்படம். வெறும் ஆவணமாக இல்லாமல் காஷ்மீரின் பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தை ஒரு காஷ்மீரியாக, அங்கே பிறந்து வளர்ந்த சஞ்சய் காக் இயக்கியுள்ளார்.

ஒரு பெரிய மைதானத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்போடு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வழக்கமாகச் செய்யப்படும் சம்பிரதாயங்களோடு மிக மரியாதையுடன் கொடியேற்றப்படுகிறது. அந்த நிகழ்வில் காஷ்மீர் மக்களைத் தவிர பலரும் கலந்துகொள்கிறார்கள். காஷ்மீர் போராட்டங்களையும் அதன் வலி நிறைந்த கதைகளையும் விவரிக்கிறது இந்தப் படம்.

இயற்கையின் அற்புதங்களால் நிறைந்துள்ளது காஷ்மீர். அதன் பனி மலை, ஆப்பிள் மரங்கள், கலை, பண்பாடு ஆகியவை மனதை இதமாக்கக் கூடியவை. அந்த விசித்திர மாநிலத்தில் உள்ள குளிர்ச் சோலைகளுக்கு இடையில் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகம். நாங்கள் இந்தியர்களோ, பாகிஸ்தானியர்களோ அல்ல, காஷ்மீரிகள் என்று நினைக்கும் மக்களின் மனத்தைக் காட்சிகளின் வழியே உணர முடிகிறது. இயக்குநரின் துணிவான படமாக்கம் பதற்றம் ஏதுமின்றி உண்மையின் கண்ணாடியாக விரிகிறது.

புலப்பெயர்வு

ஆசியா கண்டத்தில் வளர்ச்சி உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. சீனாவின் நகரமயமாக்கல் திட்டத்தைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் 'த லேண்ட் ஆஃப் மெனி ப்ளேசஸ்' (The land of many palaces). குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இந்தப் படம், 2015-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதை ஆடம் ஸ்மித், டிங் சாங் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
சீனாவின் அதிவேக வளர்ச்சியின் ஒரு அங்கமாகக் கிராமப்புறங்களில் வாழும் மக்களும் உழவர்களும் நகரத்தை நோக்கித் திருப்பப்படுகிறார்கள். ஓர்டோஸ் எனும் பகுதியில் வாழ்ந்துவந்த ஆயிரம் உழவர்களை தொழில்நுட்பங்கள் நிறைந்த நவீன நகரத்துக்கு இடம்பெயரச் செய்தனர்.

அவர்களுக்கான தொழில், வசிப்பிடம் போன்றவற்றையும் அமைத்துக்கொடுக்கின்றனர். சீனா அரசு அடுத்த 20 ஆண்டுக்குள் கிராமப்புற உழவர்களை நகரத்துக்கு மாற்றுவதெனத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக அரசு அதிகாரிகள் உழவர்களிடம் பேசுகிறார்கள்; நல்ல பணி, வசிப்பிடம் என ஆசை வார்த்தை காட்டுகிறார்கள், அதற்குப் பலரும் ஆதரவு அளிக்கும் விதமாகத் தங்கள் சொந்த கிராமங்களைவிட்டுப் புறப்பட்டுவிடுகின்றனர். கிராமங்களின் அடையாளமே உழவர்கள்தாம் என்னும்போது, இது போன்ற திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கானதா என்ற கேள்வி எழுகிறது. மிக முக்கியமான ஆவணப்படமான இது, உண்மையின் சாட்சியமாக விரியும் காட்சிகள், சிறந்த தரவுகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x