Published : 20 Aug 2019 11:41 AM
Last Updated : 20 Aug 2019 11:41 AM

10-ம் வகுப்பு அலசல்: புதிய வினாத்தாள் மாதிரிக்குத் தயாராவோம்!

எஸ்.எஸ்.லெனின்

புதிய பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுடன் புதிய வினாத் தாள் மாதிரியும் சேர்ந்துகொள்ள, நடப்பாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரட்டைச் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல்களை ஆசிரிய வல்லுநர்கள் உதவியுடன் பார்ப்போம்.

தற்போது பத்தாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புவரை முப்பருவ அடிப்படையிலே தேர்வு களை எழுதிப் பழகியிருப் பார்கள். தற்போது முழுமையான ஆண்டு இறுதி தேர்வாக, அரசுப் பொதுத் தேர்வுக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

அடிப்படை மாற்றங்கள்

புதிய வினாத்தாள் மாதிரி என்பது ‘புளு பிரிண்ட்’ அடிப்படையில் அமைந்திருக்காது என்பதால், சராசரி, மெல்லக் கற்கும் மாணவர் களுக்குச் சற்றுக் கடினமாகத் தென்படலாம். ஆனால், மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் தராது புரிந்துகொண்டு சுயமாக எழுதுவதற்கான வாய்ப்பு, படைப்பாற்றல் ஊக்குவிப்பு, போட்டித் தேர்வுகளுக்கு அடிப்படையான திறன்களை வளர்ப்பது என வரவேற்புக்குரிய பல அம்சங்கள் புதிய மாற்றங்களில் அடங்கியுள்ளன. அவற்றை மனத்தில் வைத்துப் புதிய மாற்றங்களை உத்வேகத்துடன் எதிர்கொள்வோம்.

இப்போதிருந்தே தயாராவோம்

தினசரி வகுப்பில் நடத்தப்படும் பாடங்களைக் கூர்ந்து கவனிப்பது, அன்றைய பாடங்களைக் கூடுமானவரை அப்போதே படித்து முடிப்பது, ஐயங்களை உடனுக்குடன் போக்கிக்கொள்வது, வார இறுதியில் முறையான திருப்புதல்களை மேற்கொள்வது, வகுப்பு, பருவத் தேர்வுகளை வாய்ப்பாகக் கருதி அவற்றுக்குத் தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் முறையான பாடத் தயாரிப்புக்குக் கைகொடுக்கும்.

பாடங்களின் இறுதியிலுள்ள வினாக்கள், பயிற்சிகளை மட்டுமே நம்பியிருக்காமல் பாடங்களின் உள்ளேயிருந்தும் படிப்பது அவசியம். அந்த வகையில் புதிய வினாத்தாள் மாதிரியின் அடிப்படையில், பத்தாம் வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைப் பார்க்கலாம்.

நான்கு வகை வினாக்கள்

கணிதம், சமூக அறிவியல் ஆகியவை 100 மதிப்பெண்களுக் கானவை. வினாத்தாளில் 4 பகுதிகளில் வினாக்கள் பிரித்துக் கேட்கப்படுகின்றன.

# முதல் பகுதியானது தேர்ந் தெடுத்து எழுதும் வகையிலான 14 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் அமைந்துள்ளது.

# இரண்டாம் பகுதியில் கொடுக்கப்பட்ட 14-லிருந்து 10 வினாக்களுக்குப் பதிலளிப்பதாகவும், அவற்றில் ஒன்று கட்டாய வினா வாகவும் (வி.எண்: 28) இருக்கிறது.

# 5 மதிப்பெண்களுக்கான மூன்றாவது பகுதியில் கொடுக்கப் பட்ட 14-லிருந்து 10 வினாக்களுக்கு விடையளிப்பதாகவும் அவற்றில் ஒன்று (வி.எண்: 42) கட்டாய வினாவாகவும் அமைந்துள்ளது.

# இறுதியாக 8 மதிப்பெண்களுக் கான நான்காவது பகுதியில் ’அல்லது’ வகையிலான 2 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
அறிவியலில் செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளதால், கருத்தியல் (தியரி) தேர்வு 75 மதிப்பெண்களுடன் அமைந்திக்கும்.

அதற்கேற்ப முதல் பகுதியில் 12 ஒரு மதிப்பெண் வினாக்களும், இரண்டாம் பகுதியானது ஒரு கட்டாய வினா (வி.எண்: 22) உட்படக் கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து 7-க்கு விடையளிப்பதாகவும் அமைந்திருக்கும். 4 மதிப்பெண் களுக்கான மூன்றாவது பகுதி கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் 7-க்கு பதிலளிப்பதாகவும், அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகவும் (வி.எண்: 32) அமைந்திருக்கும். இறுதியாக நான்காவது பகுதி தலா 7 மதிப்பெண்களுடனான 3 வினாக்களுடன் கேட்கப்பட்டிருக்கும்.

கணிதம் – தொடர் பயிற்சி அவசியம்

எடுத்துக்காட்டுக் கணக்குகள், பயிற்சிக் கணக்குகள் மட்டுமன்றி வரையறை, முன்னேற்றச் சோதனை, சிந்தனைக் களம் ஆகிய பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்பகுதிகளில் இருந்து 1, 2 மதிப்பெண் வினாக்களைக் கணிசமாக எதிர்பார்க்கலாம். கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்வதும் அவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளங்கிக்கொள்வதும் அவசியம்.

பாட வினாக்களைச் சற்றே மாற்றியும், சுயமாகப் புதிய வினாக்களை உருவாக்கியும் அவற்றைத் தீர்த்துப் பழகுவதுடன், ஐயங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தீர்வு பெறுவதும் நல்லது. புதிய பாடப்புத்தகத்துடன் கடந்த ஆண்டு கணித நூல், தற்போதைய சி.பி.எஸ்.இ. புத்தகம் ஆகியவற்றின் பாடக்கருத்துகளை ஒப்பிட்டுப் பார்ப்பது, தயாரிக்கப்பட்ட வினாக் களை எதிர்கொள்ள உதவும். ‘தீட்சா’ செயலியில் உள்ள வினாக்களையும் திருப்புதல் செய்யலாம்.

சமூக அறிவியல் – ஒரு மதிப்பெண்ணில் கவனம்

புதிய மாதிரி வினாத்தாளில் ஒரு மதிப்பெண்களுக்கு முன்னுரிமை தந்து படிக்க வேண்டும். வரிக்கு வரி வாசிப்பது, ஆண்டுகளைக் காலக்கோடு மூலம் நினைவுகொள்வது, முக்கியப் பெயர்கள், போர்கள், இடங்கள் ஆகியவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் படிப்பது அவசியம். இந்த வகையிலான ஒரு மதிப்பெண்களுக்கான தயாரிப்பு, இதர பகுதி வினாக்களுக்குச் சிறப்பாகப் பதில் அளிக்கவும் உதவும்.

5 மதிப்பெண்களுக்கான பகுதி 3-ல் ஒரு வினா கோடிட்ட இடத்தை நிரப்பும் வகையிலும், மற்றொரு வினா பொருத்துக வகையாகவும் அமைந்துள்ளன. மேலும் ஒரு வினா காலக்கோடு குறித்தும் கேட்கப்படுகிறது. ஒரு மதிப்பெண்களுக்கான முழுமையான தயாரிப்பு, இந்த வினாக்களுக்குப் பதிலளிக்கவும் உதவும். இதே பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டாய வினா வரலாற்று வரைபடமாகவும் (மேப்), நான்காவது பகுதி வினாக்களில் ஒன்று புவியியல் வரைபடமாகவும் உள்ளது. இவற்றில் சாய்ஸ் எதுவும் கிடையாது என்பதால் இப்போதிருந்தே கவனமாகத் தயாராவது அவசியம்.

அறிவியல்- புரிந்து படிக்கவும்

அறிவியலின் 23 பாடங்களிலும் ‘கற்றல் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் அவசியம் படித்துவிட வேண்டும். பாடக்கருத்துகளில் இருந்து கேள்விகளை உருவாக்கப் பழக வேண்டும். 9-ம் வகுப்புவரை பழகிவந்த மனவரைபடத்தை, பாடக்கருத்துகளை உள்வாங்கவும் நினைவில் நிறுத்தவும் பயன்படுத்தலாம். மேலும் பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கருத்து வரைபடத்தையும் இந்தப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்.

’க்யூ.ஆர். கோட்’ மூலம் காட்சி அடிப்படையிலான விளக்கங்களைப் பெறுவதும், இணையத்தின் உதவியுடன் பாடத்தலைப்பு தொடர்பாகக் கூடுதலாக அறிந்துகொள்வதும் புரிதலை அதிகரிக்கும். வரையறை, விதிகள், சூத்திரம், சமன்பாடு, மாறிலிகள், அலகுகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மனப்பாடம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வையும் கருத்தியல் தேர்வையும் தொடர்புபடுத்திப் படிப்பதும், பயிற்சி மேற்கொள்வதும் இரு தேர்வுகளுக்கும் ஒருசேரத் தயாராக உதவும்.

(தலா 2 தாள்கள் அடங்கிய தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x