Published : 20 Aug 2019 10:51 AM
Last Updated : 20 Aug 2019 10:51 AM

போட்டித் தேர்வு: அரசின் செயல்பாட்டைக் கண்காணித்த சட்டம்

கோபால்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.) இந்தியாவில் 2005-ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், கட்டமைப்பு, நிதி நிர்வாகம் தொடர்பான தகவல்களைக் கேட்டுப்பெறுவது குடிமக்களின் உரிமை என்பதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தியதால், இது இந்திய ஜனநாயகத்தில் ஒரு மைல்கல் சட்டமாகப் பார்க்கப்பட்டது.

தகவலைப் பெறுபவரும் கொடுப்பவரும்

ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் அரசு தொடர்பான தகவல்களைப் பெறலாம். இந்திய அரசியல் சாசனத்தின்படியோ அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் மூலமாகவோ அறிவிக்கை மூலமாகவோ உருவான அனைத்து அமைப்புகள் அல்லது அலுவலகங்கள், அரசின் நிதியைப் பெறும் அமைப்புகள் அல்லது அலுவலகங்கள் அனைத்தும் குடிமக்களிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்கள் கோரும் தகவல்களைத் தர வேண்டும். அதாவது மத்திய, மாநில அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அவற்றின் அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்டவை இந்தச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவை.

ஆர்.டி.ஐ. சட்டத்தின் எட்டாம் பிரிவின் உட்புரிவு ஒன்றில் தகவல் தருவதற்கான விதிவிலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசின் பாதுகாப்பு, இறையாண்மை, தேச ஒற்றுமை ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள், நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் தகவல்கள், நாடாளுமன்றம், சட்டப்பேரவை உரிமைமீறலாகப் பார்க்கப்படும் தகவல்கள் ஆகியவை அவற்றுள் சில. இந்த விதிவிலக்குகளுடன் பொருந்தும் தகவல்களைத் தர சம்பந்தப்பட்ட அமைப்பு மறுக்கலாம்.

சட்டம் செயல்படும் விதம்

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொதுத் தகவல் அலுவலர், பொதுத் தகவல் உதவி அலுவலர், மேல் முறையீட்டு அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். தகவலைப் பெற விரும்புவோர் தகவல் அலுவலரிடமோ உதவித் தகவல் அலுவலரிடமோ மனுவைக் கொடுக்கலாம். மனுவைப் பெற்றுக்கொண்டு 30 நாட்களுக்குள் தகவலைத் தர வேண்டியது பொதுத் தகவல் அலுவலரின் கடமை. கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றத் தேவையானது என்றால், அந்தத் தகவல் 48 மணிநேரத்துக்குள் கொடுக்கப்பட வேண்டும். தகவல் கொடுக்க மறுத்தாலோ கொடுக்கப்பட்ட தகவலில் திருப்தி இல்லை என்றாலோ அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு அலுவலரிடம் முறையீடு செய்ய வேண்டும். அவர் அளிக்கும் தீர்வும் திருப்தி அளிக்கவில்லை என்றால், இரண்டாம் மேல் முறையீட்டுக்குச் செல்ல வேண்டும்.

மத்திய, மாநில தகவல் ஆணையர்கள்

ஆர்.டி.ஐ. சட்டம் தொடர்பான புகார்களைக் கண்காணிக்க மத்திய அளவில் மத்திய தகவல் ஆணையமும் மாநில அளவில் மாநிலத் தகவல் ஆணையமும் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில ஆணையம் மத்திய ஆணையத்துக்குக் கட்டுப்பட்டதல்ல. இவை இரண்டும் மேல் முறையீட்டு நிறுவனமாகச் செயல்படுகின்றன. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாமல் இருப்பது, தகவல் கோரும் மனு நிராகரிக்கப்படுவது, தகவல் மறுக்கப்படுவது உள்ளிட்ட புகார்களை இந்த அமைப்புகள் விசாரிக்கின்றன. மத்தியத் தகவல் ஆணையத்தில்
ஒரு தலைமை ஆணையரும் அதிகபட்சமாக 10 தகவல் ஆணையர்களும் இருக்கலாம். மத்திய தகவல் ஆணையர்களைக் குடியரசுத் தலைவரும் மாநிலத் தகவல் ஆணையர்களை மாநில ஆளுநரும் நியமிக்கின்றனர்.

புதிய திருத்தங்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆர்.டி.ஐ. சட்டத்தில் சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்குமுன் மத்திய, மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்கள், இதர தகவல் ஆணையர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகளாக இருந்தது. இனி தலைமை ஆணையர், இதர ஆணையர்களின் பதவிக் காலத்தை மத்திய அரசு தீர்மானிக்கும் என்று திருத்தப்பட்டுள்ளது.

மத்திய தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களுக்கு மத்திய தேர்தல் தலைமை ஆணையர், இதர ஆணையர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. அதேபோல் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையர்களுக்கு இணையாகவும் இதர தகவல் ஆணையர்களுக்கு அரசு தலைமைச் செயலருக்கு இணையாகவும் ஊதியம் அளிக்கப்பட்டது. இப்போது அனைத்து தகவல் ஆணையர்களுமான ஊதியத்தை மத்திய அரசு தீர்மானிக்கும் என்று திருத்தப்பட்டுள்ளது.

தலைமை தகவல் ஆணையர்களும் இதர தகவல் ஆணையர்களும் அவர்கள் அதற்கு முன்னால் வகித்த வேறு பதவிகளுக்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்தால், அந்தத் தொகை அவர்களது ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் என்ற விதி இப்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்களின் மூலம் தகவல் ஆணையத்தின் வலிமையும் தற்சார்பும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x