

ரெ.சிவா
பிற்பகல் பாடவேளை. பாடத்துக்குள் நுழையும்முன் அறிமுகத்துக்காகக் கதை பேசிக்கொண்டிருந்தேன். ஒரு மாணவனின் கண்கள் மயங்கின. அனைத்துக் கண்களும் அவன் பக்கம் திரும்பின. திடீரென எழுந்த சிரிப்பொலியால் திடுக்கிட்டு விழித்து வெட்கத்தோடு எழுந்து நின்றான்
மதியம் தூக்கம் ஏன்?
உட்காரு. மதியப் பாடவேளையில் தூக்கம் வருவது இயல்புதான். ”ஆமா, மதியம் ஏன் தூக்கம் வருது, அதிலும் வகுப்பில் தூக்கம் வரக் காரணங்கள் என்ன?”என்று கேட்டேன். நிறையச் சாப்பாடு.மூளை ஓய்வாயிடுது. அதனால் மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைந்து தூக்கம் வருது.
அடுத்தவன் தூங்குறதைப் பார்த்தால் நமக்கும் வரும். உண்டது செரிப்பதற்காக ரத்த ஓட்டம் அதிகமா வயித்துக்குப் போயிருது. அதனால மூளைக்கு ரத்த ஓட்டம் குறையுது. தூக்கம் வருது. என்ற விரிவான விளக்கத்தை ஒருவன் சொன்னான்.
“வகுப்பறையில் எல்லோருக்குமே ஏன், எனக்குமே தூக்கம் வந்திருக்கு. நீங்க எப்படியெல்லாம் சமாளிச்சீங்க, அல்லது தூங்குனீங்க?” என்று கேட்டேன். கண்ணைக் கசக்கிவிடுவேன். தலை, உடம்பு எல்லாமே கிர்ருன்னு இருக்கும். லேசா கை, காலில் கிள்ளிக்குவேன். தண்ணீர் எடுத்துக் கண்ணை மட்டும் துடைச்சுக்குவேன். முன்னாடி இருக்குறவன் பின்னாடி மறைஞ்சு தூங்கிடுவேன் என்பன போலப் பல்வேறு நிகழ்வுகளை மாணவர்கள் பகிர்ந்தார்கள்.
தூங்க நேரம் தரலாமா?
தூக்கம் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கும்போது Afternoon Class என்ற அனிமேஷன் படம் நினைவுக்குவருது. அனிமேஷன் படிக்கும்போது திட்டப்பணிக்காக (Project) மாணவர் ஒருத்தர் அவருடைய அனுபவத்தை வைத்து எடுத்த படம். படத்தைத் திரையிட்டபோது, மாணவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருந்தது. படம் முடிந்ததும், “கடைசியில் சாரும் சேர்ந்து தூங்குறதுதான் சூப்பர்!” என்றான் ஒருவன். படம் குறித்தும் தூக்கம் குறித்தும் சிறிது நேரம் உரையாடல் தொடர்ந்தது.
“தூக்கம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?” என்றேன். எழுந்து நிற்கலாம். சாரிடம் கேட்டுட்டு வெளியே போய் நல்லா முகம் கழுவிட்டு வரலாம். பாட்டு ஏதாவது பாடலாம் எனப் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டன. “தம்பிகளா, இரண்டு பாடவேளைகள் முடிந்ததும் இடைவேளை நேரத்தில் வகுப்பை விட்டு எல்லோரும் வெளியே போங்க. அந்த நேரம் முழுவதும் நடப்பது, ஓடுவது, சிறு விளையாட்டுகள் எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும்” என்றேன்.
ஒரு பாடவேளை முழுவதும் பாடம் சொல்லிக்கொண்டே இருந்தால் எவ்வாறு குழந்தைகளால் கவனிக்க முடியும்?
அவ்வப்போது சிறு விளையாட்டுகள், பாடல்கள், ஏதாவது நகைச்சுவை என்று ஆசிரியர்கள்
பலர் தங்கள் வகுப்பில் புத்துணர்வை உருவாக்கிக்கொள்கிறார்கள். இருந்தாலும், தூங்குவதற்காக அல்லது சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வாக இசை கேட்கும்படி சிறிது நேரத்தைக் கால அட்டவணையிலேயே உருவாக்கினால் எப்படி இருக்கும்!
‘Afternoon Class’ காண இணையச் சுட்டி: