Published : 19 Aug 2019 02:59 PM
Last Updated : 19 Aug 2019 02:59 PM

புத்திசாலித்தனமாக கடன் வாங்குவது எப்படி? 

ஆரத்தி கிருஷ்ணன்
aarati.k@thehindu.co.in

பொதுவாகவே நமது முன்னோர்கள் கடன் வாங்குவதை சிறந்ததாகக் கருதுவதில்லை. வரவுக்கு ஏற்ப செலவு செய்வதைத்தான் அறிவுறுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்றைய சூழலில் ஆசைகளுக்கு ஏற்ப வருமானம் வராதபோதும், கடன் வாங்கியாவது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவே ஆர்வமாக இருக்கிறோம். இதனால் இன்றைய நாகரிக உலகில் கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்துவது மிகவும் சிரமமான காரியமாகிவிட்டது.

பணவீக்கம் ஸ்திரமில்லாத பொருளாதார சூழலில் நாம் வாங்கும் கடன் தொகை விரைவிலேயே மதிப்பிழந்து போகிறது. ஆனாலும் கடனை வாங்கி தூக்கத்தை தொலைப்பதை விட, எந்த வழியில் கடன் வாங்கி அதை எவ்விதம் சமாளிப்பது என்று யோசித்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். அவ்விதம் திட்டமிடுவதற்கு பின்வரும் வழிமுறைகள் சற்று உபயோகமானதாக இருக்கும்.

குறைவாக கடன் வாங்குங்கள்

இந்தியாவைப் பொருத்தமட்டில் சுலபத் தவணை திட்டங்கள் அனைத்துமே உங்களது மாத சம்பளத்தில் 50 சதவீத அளவுக்கு, அதாவது உங்களுக்கு நிரந்தர பிடித்தம் இல்லாத நிலையில், உங்களுக்கு கடன் வழங்க நிறுவனங்கள் தயாராக இருக்கும். பொதுவாக உங்களது மாத சம்பளம் ரூ. 1 லட்சமாக இருந்து, அதில் காருக்காக செலுத்தும் மாதத் தவணை ரூ. 10 ஆயிரமாக இருந்தால், உங்களுக்கு மாதத் தவணை ரூ. 40 ஆயிரம் வரையில் கடன் வழங்க முன்வரும். அதாவது 9 சதவீத வட்டியில் 15 ஆண்டுகளுக்கு ரூ. 40 லட்சம் கடன் பெறலாம்.

ஆனால் பெரும்பாலும் வங்கிகள் தங்களது வர்த்தக நோக்கத்துக்காக நீங்கள் செலுத்த வேண்டிய தவணை காலத்தை நீட்டிப்பதையே விரும்பும். அதற்காக உங்களுக்கு கூடுதல் தொகை தரவும் தயாராகும். நீங்கள் செலுத்த வேண்டிய தவணை தொகை உங்கள் மாத வருமானத்தில் 50 சதவீதத்தை தாண்டினால், அது உங்களது நீண்ட கால திட்டமிடலை வெகுவாக பாதிக்கும்.

குறிப்பாக ஓய்வுக் கால திட்டமிடல் உள்ளிட்டவற்றுக்கு அது பெரும் இடையூறாக அமையும்.
எனவே நீங்கள் வாங்கப் போகும் கடன் தொகை அதை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றை கணக்கிடுங்கள். தற்போது செலுத்தும் மாதாந்திர தவணை தொகை, கட்டாய சேமிப்பு அதாவது மொத்த வருமானத்தில் 15 சதவீதம் முதல் 20 சதவீத தொகையை கழித்து, பிறகு உங்களது வீட்டு செலவு உள்ளிட்டவை போக மீதித் தொகைக்கு மட்டும் கடனை திட்டமிடுங்கள். அப்போது அந்த தொகையை நீங்கள் எளிதாக திரும்ப செலுத்த முடியும்.

கடன் வாங்கி சொத்து வாங்கலாமா?

கடன் வாங்குவதில் புத்திசாலித்தனம் மிகவும் அவசியம். இந்தியாவில் சொத்துகள் கொடுக்கும் பலனை விட செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி அதிகமாகத்தான் உள்ளது. எனவே கடன் வாங்கி சொத்துகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதாக இருக்காது. இருந்தாலும் தேய்மானமடையும் பொருட்களுக்காக கடன் வாங்குவதை விட, மதிப்பு அதிகரிக்கும் பொருட்களை வாங்க கடன் வாங்குவது சிறப்பானதாக இருக்கும். நிலம் வாங்குவது அல்லது படிப்புக்கு கடன் வாங்குவது அனைத்துமே சிறந்த மூலதனம்தான்.

நிலத்தின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. அதேபோல மேல் படிப்பு அதிக ஊதியம் ஈட்ட வழிவகுக்கும். அதேசமயம் எஸ்யுவி கார், இரண்டு கதவுடைய ஃபிரிட்ஜ், ஸ்மார்ட்போன், ஹோம் தியேட்டர் போன்றவற்றின் மதிப்பு குறையக்கூடியது. இவற்றை கடன் மூலம் வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வாங்குவது நல்லது. அதேபோல கடன் வாங்கி விடுமுறை சுற்றுலா செல்வது மிகவும் மோசமான நடவடிக்கை. ஏனெனில் அந்த சுற்றுப்பயணத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் சொத்துகள் ஏதும் கிடையாது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டால், முன்கூட்டியே சேமித்து அதன் மூலம் பயணம் மேற்கொள்வதுதான் சிறந்தது.

சம்பள உயர்வை எதிர்பார்த்து திட்டமிடாதீர்கள்

ஆண்டுதோறும் கிடைக்கும் சம்பள உயர்வை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் மனோ நிலைதான் நம்மில் பலருக்கு உண்டு. இதை எதிர்பார்த்தே கடன் அல்லது சுலபத் தவணை திட்டங்களில் பொருட்கள் வாங்குவோர் அதிகம். வருமானம் அதிகரிக்கும்போது நம்மால் கடனைத் திரும்ப செலுத்த முடியும் என்று பலரும் நினைக்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை இவ்விதம் நினைத்தால் தவறில்லை. ஆனால் இப்போது பணவீக்கம் சார்ந்து பொருளாதார நடவடிக்கைகள் அமைகின்றன.

பணவீக்கம் 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருந்தால் ஆண்டு சம்பள உயர்வு 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இருந்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் பொதுவாக பெரும்பாலான துறைகளில் ஆண்டு ஊதிய உயர்வு விகிதம் 5 சதவீதம் முதல் 6 சதவீத அளவுக்கே உள்ளது. அதேபோல காலப்போக்கில் சுலப தவணையின் அளவு குறையும் என்று எதிர்பார்ப்பதும் தவறானதே. மாறிவரும் காலச் சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டுகின்றன. இந்நிலையில் வேலையில் நீடிப்பதே நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத்தான் உள்ளது. எனவே இன்றைய தினம் வாங்கும் சம்பளத்துக்கேற்ப கடன் வாங்குவதை திட்டமிடுவதே புத்திசாலித்தனமானதாகும்.

நீண்டகால கடனை தேர்ந்தெடுக்காதீர்கள்

கடன் வாங்குவதில் நீண்ட கால சுலப தவணை திட்டத்தை தேர்வு செய்யாதீர்கள். நீண்ட காலத் திட்டம், கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும். உதாரணத்துக்கு ரூ.50 லட்சம் கடனை 9 சதவீத வட்டியில் 15 ஆண்டுகளுக்கு வாங்குவதாக வைத்துக் கொண்டால் மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகை ரூ. 50,713. நீங்கள் 15 ஆண்டுகள் முடிவில் செலுத்தும் தொகை ரூ.91.28 லட்சம். ஆனால், திரும்ப செலுத்தும் காலத்தை 20 ஆண்டுகளாக நீட்டித்தால் நீங்கள் செலுத்தும் மாதாந்திர தொகை ரூ.44,986.

நீங்கள் 20 ஆண்டு முடிவில் செலுத்தும் தொகை ரூ. 1.07 கோடி. நீங்கள் வாங்கிய தொகை ரூ.50 லட்சம், வட்டியாக செலுத்தியது ரூ. 57.90 லட்சமாக இருக்கும். அதுவே 15 ஆண்டுக் கடனாக இருந்தால் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை ரூ. 41.20 லட்சம் மட்டுமே. எனவே எப்போதும் நீங்கள் திரும்ப செலுத்தும் சுலப தவணைத் தொகையை அதிகரியுங்கள். செலுத்தும் காலத்தை நீட்டிக்காதீர்கள். மேலும் வட்டி அதிகரித்து வரும் சூழலில் எவ்வளவு விரைவாக கடனை செலுத்த முடியுமோ அதற்குள்ளாகவே கடனை அடையுங்கள்.

குறைவான வட்டியை ஆராயுங்கள்

கடன் வாங்கும்போது எந்த நிறுவனத்தில், வங்கியில் குறைவான வட்டிக்கு கடன் கிடைக்கிறது என்பதை ஆராயுங்கள். சுலப தவணை தொகையை கணக்கிடுவதற்கு தானியங்கி முறைகள் தற்போது உள்ளன. சந்தையில் எவ்வளவு குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடியுங்
கள். தற்போது பெரும்பாலான வங்கிகள் புளோட்டிங் ரேட் எனப்படும் மாறுதலுக்குள்பட்ட வட்டி விகிதத்திலேயே கடன் வழங்குகின்றன. எனவே சந்தையில் வட்டி தொகை குறையும்போது நீங்கள் செலுத்த வேண்டிய தவணை தொகையும் குறையும்.

பொதுவாக புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டும். இந்த விஷயத்தில் தொடர்ந்து சந்தையின் போக்கை சரியாக கவனித்து, வட்டி குறையும்போது அது நீங்கள் வாங்கிய கடனுக்கும் குறைக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். அவ்விதம் வட்டி குறைக்கப்படாவிட்டால், கடன் வழங்கிய நிறுவனத்தை, வங்கியை அணுகி விவரம் கேளுங்கள். உங்களுக்கும் வட்டி குறைக்கப்படும். இதன் மூலம் பெருமளவு தொகையை சேமிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x