Published : 19 Aug 2019 10:51 AM
Last Updated : 19 Aug 2019 10:51 AM

எண்ணித் துணிக: எதையும் பிளான் பண்ணி பண்ணணும்

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

பிசினஸ் மாடல் பற்றி கடந்த வாரம் பேசிக்கொண்டிருந்தோம். உங்கள் ஸ்டார்ட் அப் லாபம் ஈட்டும் முறையை திட்டமிடும் முயற்சிதான் பிசினஸ் மாடல். டார்கெட் செய்திருக்கும் வாடிக்கையாளர், விற்க நினைக்கும் பொருள், பெற நினைக்கும் வருவாய், எடுக்க நினைக்கும் ரிஸ்க், எதிர்பார்க்கும் செலவுகளை இனம் காணும் திட்டம் இது. உங்கள் தொழிலின் முக்கிய முடிவுகளின் தொகுப்பு.

பிசினஸ் மாடலை தெளிவாய் புரிந்து முறையாய் அணுகும்போது ஸ்டார்ட் அப் துவங்குவோர் தங்கள் தொழிலை முன்னூற்று அறுபது டிகிரியில் சப்ஜாடாய் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. பிசினஸ் பிளான் ஒரு திட்டமிடும் கருவி. தொழிலின் ஒவ்வொரு பிரிவும் சேர்ந்து எப்
படிப் பொருந்துகிறது என்பதை உணர்த்துகிறது.

பிசினஸ் மாடலை உருவாக்கும் போது ஸ்டார்ட் அப் தொழில்கள் மூன்று தேர்வுகள் செய்கின்றன. முதலாவது, கொள்கை ரீதியான தேர்வுகள். கம்பெனிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை சார்ந்த தேர்வு
கள். தொழிற்சாலையை எங்கு நிர்மாணிப்பது, முழுநேர ஊழியர்களை தேர்ந்தெடுப்பதா, பார்ட் டைம் ஊழியர்களை வைத்துக்கொள்வதா போன்ற முடிவுகள். இரண்டாவது, சொத்து சார்ந்த தேர்வுகள். ஃபாக்ட்ரியை நிர்மாணிப்பதா இல்லை அவுட் சோர்சிங் முறையை பயன்படுத்துவதா போன்ற விஷயங்கள். மூன்றாவது நிர்வாக ரீதியான தேர்வுகள்.

சமீப காலமாக பிசினஸ் மாடலை முடிவு செய்துவிட்டு தொழில் துவங்கவேண்டியதன் அவசியம் உணரப் படுகிறது. இதற்கு முதல் காரணம் வேகமாக மாறும் உலக பொருளாதாரம். தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் சேஷன், மாறிவரும் மக்களின் தேவைகள் போன்றவைகளால் ஒருவித அவசரத்தை அந்த அவசரத்திலுள்ள ஆபத்தை அறியவேண்டிய அவசியத்தை அதிகரித்திருக்கிறது. அதோடுஇனம்காண முடியாத இடங்களிலிருந்து பெருகி வரும் போட்டியும் எங்கிருந்து தாக்குதல் வருகிறது என்று அறியமுடியாத போட்டியாளர்கள் பெருகி வருவதும் கூட ஒரு காரணமே.

ஒன்றும் வேண்டாம், உங்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வெறும் தொலைபேசி மட்டுமல்ல. தினம் உங்களை எழுப்பும் அலாரம், இருட்டில் பார்க்க உதவும் டார்ச்லைட், நேரம் காட்டும் வாட்ச், நீங்கள் ரசித்து கேட்கும்
எஃப்.எம் ரேடியோ, பார்த்து மகிழும் டீவி என்ற அஷ்டாவதானி. அலாரம் முதல் டார்ச்லைட் வரை, ரேடியோ முதல் டீவி வரை எத்தனை வெவ்வேறு தொழில்களை மொத்தமாய் கபளீகரம் செய்து ஒன்றுமே தெரியாதது போல் உங்கள் பையில் தேமே என்று அமர்ந்திருக்கிறது பாருங்கள்!

சிறந்த பிசினஸ் மாடல் போட்டியாளர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். அதோடு உங்கள் பிராண்டுக்கு மவுசு கூட்டி டிமாண்டை அதிகப்படுத்தும். சென்ற வாரம் பார்த்த ‘ஜெய’ சானிடரிநாப்கின் கதையை மீண்டும் நினைத்துப் பாருங்கள். பிசினஸ் மாடல் என்பது கல்லில் வடிக்கும் சிலையல்ல. ஒரு முறை செதுக்கிவிட்டு அதை அப்படியே பல காலம் பின்பற்ற. தொழில் இருக்கும் நிலை, மார்க்கெட் செல்லும் வழி, தொழில்நுட்பம் மாறும் போக்கு போன்றவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாதி வழியில் கூட மாற்றங்கள் செய்ய வேண்டிய நெகிழ்வு தன்மைகொண்டதாக பிசினஸ் பிளானைவடிவமைக்க வேண்டும்.

‘புக்மைஷோ’ என்ற ஸ்டார்ட் அப் துவங்கிய புதிதில் தியேட்டர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கி அதை தன் சைட்டுக்கு வருபவர்களிடம் விற்று வந்த ஒரு ஸ்டார்ட் அப். டிமாண்ட் இல்லாத நேரங்களில் வாங்கி வைத்திருக்கும் டிக்கெட்டுகளை விற்கமுடியாத நிலையை மாற்ற தன் பிசினஸ் மாடலில் மாற்றம் செய்தது. தியேட்டர்களிடம் ஒப்பந்தம் செய்து வாடிக்கையாளர்கள் தன் மூலமாக வாங்கும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் தியேட்டரிடமிருந்து கமிஷன் வசூலிக்கிறது.

அதோடு சினிமாவை மட்டுமே நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது என்று கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த டிக்கெட்டுகளை விற்று கமிஷன் பெறும் வகையில் தன் பிசினஸ் மாடலை மாற்றிக்கொண்டிருக்கிறது. இப்படி கூறுவதால் தொழிலின் உத்தியைத்தான் பிசினஸ் பிளான் என்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். உங்கள் ஸ்டார்ட் அப்பின் மொத்த கலவையாய், தொழிலின் ஒவ்வொரு அங்கமும் எப்படி ஒன்றோடு ஒன்று பொருந்துகிறது என்பதன் ப்ளூப்ரின்ட் தான் பிசினஸ் பிளான் என்றாலும் அதன் செயல்திறனை பாதிக்கும் ஒரு முக்கிய அம்சமான போட்டியை, தாக்கும் போட்டியாளர்களை அது கணக்கிடுவதில்லை.

அந்த போட்டியாளர்களைச் சமாளிக்கும் சாகஸம்தான் உத்தி. இந்த இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை உணர்வது முக்கியம். பல ஸ்டார்ட் அப்ஸ் தோல்வியடையும் காரணங்களில் ஒன்று தெளிவான பிசினஸ் பிளானை வடிவமைக்காமல் இருப்பதால். டப்பு தர வென்ச்சர் காபிடலிஸ்ட், பணம் போட முதலீட்டாளர்கள் இருக்கும் போது மற்றவற்றை மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்று ஸ்டார்ட் அப் துவங்குவோர் மேலோட்டமாக இருப்பதால்தான் பெற்ற முதலீடு செலவழிக்கவேண்டிய பணமாய் கண்ணிற்குத் தெரிய, தயாரிப்பு செலவை கூட மீறாத விற்பனை வருவாய் மனதை மயக்க, இருக்கும் பணம் கறைந்து கல்லாவும் பேங்க் பேலன் ஸும் மறையும் போது ‘ஆஹா’ என்ற ஆரம்பிக்கும் ஸ்டார்ட் அப் ‘அடடா’ என்று சரிந்து சீக்கிரமே ‘ஐயோ’ என்று அதளபாதாளத்தில் முடிகிறது. அந்த அவல நிலை அடையாமலிருக்க பிசினஸ் பிளான் வடிவமைக்கும் முறைகள் சிலவற்றை அடுத்த வாரம் அலசுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x