Published : 18 Aug 2019 10:23 AM
Last Updated : 18 Aug 2019 10:23 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 19: முத்தனின் முட்டாள்தனம்

பாரததேவி

முத்தனும் அவனுடைய மனைவியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட பக்கத்துப் பிஞ்சைக்காரன், “ஏலேய் முத்து உன் குலதெய்வம் தான் எனக்கும் குலதெய்வம். அதேன் நாளைக்கு இரண்டு மூணு வண்டிய கூப்பிட்டுக்கிட்டு ஒரு கெடாவோடு அந்தக் கோயிலுக்குக் கிளம்பி எம்மவனுக்கும் மவளுக்கும் முடி எடுக்கப் போறோம். வெள்ளனத்திலேயே போறதினால நீயும் வரணுமின்னா வா” என்றான். உடனே இவனுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இது நமக்கு நல்ல வாய்ப்பு இவன விடாம இவன் கூடவே போயிர வேண்டியதுதேன் என்று நினைத்தவன், எல்லாப் பிள்ளை களையும் கூட்டிக்கொண்டு போகவா என்று யோசித்தான். பிறகு, அப்படிக் கூட்டிக்கொண்டு போக நம் பொண்டாட்டி விடவும் மாட்டாள். வண்டியில் இடமும் இருக்காது. மூத்தவனை மட்டும் அதுவும் பொண்டாட்டிக்குத் தெரியாம அவனுக்கு முடிய எடுத்துட்டு வந்துருவோ மென்று பலவிதமான உளைச்சலில் படுத்தவன் அப்படியே விடியம்வரை தூங்கிவிட்டான்.

அழுத பிள்ளைக்கு மொட்டை

மறுநாள் அவன் எழுந்து பார்க்கும்போது வெட்டென விடிந்து வெள்ளை வெயில் புறப்பட்டுவிட்டது. அய்யய்யோ இப்படி உறங்கிட்டோமே என்று நினைத்தவன் பக்கத்துப் பிஞ்சைக்கு ஓடினான். அங்கே வேலைசெய்த கூலி ஆட்கள், “எங்க முதலாளி முதக்கோழி கூப்பிடலேயே வண்டியக் கட்டிகிட்டுப் புறப்பட்டாரே” என்று சொல்ல, இவன் அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடி வந்தான். ஊர்ப் பிள்ளைகள் மந்தையில் விளையாடிக்கொண்டிருந்தன.

இவன் வீட்டில் ஒரு பிள்ளையும் இல்லை. இவனுக்குப் பிள்ளைகளை அடையாளம் தெரியாததால் விறுவிறுவென்று மந்தைக்கு வந்தான். அங்கே கூடி கும்மரிச்சம் போட்டு விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளில் எந்தப் பிள்ளைக்கு அதிகமாய் முடிவளர்ந்திருக்கிறதென்று பார்த்தான். அத்தனை பிள்ளைகளுக்கும் முடி வளர்ந்திருந்தாலும் ஒரு பிள்ளைக்கு மட்டும் ரொம்பவும் முடி வளர்ந்து கழுத்துவரை தொங்கியது.

இதுதான் நம் பிள்ளையாக இருக்குமென்று அந்தப் பிள்ளையிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்துக் கொஞ்சம் ஒதுங்கலாய்க் கூட்டி வந்தவன், சட்டென்று அந்தப் பிள்ளையைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு வேக வேகமாய் நடந்தான். அந்தப் புள்ளையோ அழுது கூப்பாடு போட்டது. இவன் அதைக் கண்டுகொள்ளா மல் நடந்தான். இவன் போய் கோயில் சேர்ந்தபோது பந்தி ஆரம்பமாகியிருந்தது. இவன் அவசரமாய் பிள்ளைக்கு மொட்டை யெடுத்தான்.

அங்கு வந்த ஆசாரியிடமே காதும் குத்தினான். அந்த வனமே கேக்கும்படி அழுத பிள்ளையை முதுகில் இரண்டு அறை அறைந்தான். பிறகு பந்தியில் உட்கார்ந்து வயிறு நிறையச் சாப்பிட்டான். பிள்ளைக்கும் ஊட்டினான். சாப்பிட மறுத்த பிள்ளையின் முதுகில் மீண்டும் இரண்டு அறை வைத்தான்.

தன் பிள்ளையா, ஊரார் பிள்ளையா?

மந்தையில் நின்ற மக்கள் மேற்கே பொழுது சாயவும் எல்லாரும் புறப்பட்டுவிட்டார்கள். வண்டியில் இடமில்லை என்பதால் இவன் மீண்டும் பிள்ளையைத் தோளில் தூக்கிக் கொண்டு வந்தான். இவன் வரும்போது ஊர்சனமே மந்தையில் நின்றிருந்தது. இவன் வந்ததும், “இந்த இருக்கில்ல எம்புள்ள. நம்ம ஊரு மாரியாத்தா என் வவுத்துல பால வாத்துட்டா” என்று சொல்லியவாறே கூட்டத்திலிருந்த ரத்தினா பாய்ந்துபோய் முத்தன் தோளிலிருந்த பிள்ளையை வாங்கினாள். அவனும் ஆத்தா என்று பாய்ந்து கொண்டு வந்தான்.

பிள்ளையை வாங்கிய ரத்தினா “அய்யய்யோ கொடுமையே நானு என்னத்தப் பேசப்போறேன்” என்று அலறவும் கூட்டம் மொத்தமும் அவளைத் திரும்பிப் பார்த்தது. ‘‘ஆமா தாயி விடியங்காட்டுல இருந்து தேடிய புள்ள கெடச்சிருச்சி இப்போ எதுக்கு அலறுதவ’’ என்றார் ஊர் நாட்டாமை. ‘‘எங்க குலதெய்வத்துக்கு எம் புள்ளைக்கு மொட்ட போட்டுக் காதுகுத்துதேன்னு வவுத்துல புள்ள தரிக்கும்போதே நானு நேர்ந்திருந்தேனே. இவன் என் புள்ளய காணாம தூக்கிட்டுப் போயி, அவன் குலதெய்வத்துக்கில்ல மொட்ட போட்டுக் காது குத்திட்டு வந்துட்டான்” என்று சொல்ல எல்லாரும் அதிர்ந்தனர்.

“ஏண்டா முத்தா உனக்கு அறிவிருக்கா, இல்லயா? எதுக்குடா அவ புள்ளயத் தூக்கிட்டுப் போயி உன் குலச்சாமிக்கு மொட்ட போட்டுட்டு வந்தே?” என்று நாட்டாமை கேட்க முத்தன் மலங்க மலங்க விழித்தான். “எதுக்குடா இப்படிச் செஞ்சே?” என்று நாட்டாமை கோபத்தோடு கேட்க, “அய்யா நானு என் புள்ளன்னுதேன்யா தூக்கிட்டுப் போனேன்” என்றான். “நீ செஞ்ச இந்தக் குத்தத்துக்கு ஏழெட்டு மாட்டு வண்டியப் புடிச்சி ஊரவே கூட்டிட்டுப் போயி இரட்டக் கிடா வெட்டி ஊருக்கே விருந்து வச்சி கூட்டிட்டுவாரே. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு” என்று சொல்ல அங்கேயே மயங்கி விழுந்தான் முத்தன்.

ஆட்டுப் புழுக்கையே மருந்து

அந்தக் காலத்தில் இப்படித்தான் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. வெள்ளந்தி யான மனிதர்களும் விழிப்புணர்வு இல்லாததாலும்தான் இப்படியெல்லாம் நடந்திருக்கிறது. இந்த மாதிரி வாழ்க்கையில் நோய்களும் கூடவே தடம்பதித்து வரும். கருது கட்டு சுமக்கும்போது, விறகு வெட்டும்போது, வாய்க்கால் வரப்புத் தாண்டுபோது சில நேரம் சளுக்கென்று உடம்புக்குள்ளிருந்து ஒரு சத்தம் கேட்கும். அவ்வளவுதான் உடம்பில் எங்கேயாவது பிடித்துக்கொண்டு கழுத்தைத் திருப்ப முடியாமல், அசைய முடியாமல் பிடிப்புக்கொண்ட இடங்களில் இரும்பைக் கொண்டு அடித்தாற்போல் வலியெடுக்கும்.

அதற்கும் இந்தப் பெரியவர்கள் மருந்து சேர்த்துவைத்து நோயை விரட்டியிருக்கிறார்கள்.
அன்றைய நாட்களில் மந்தை முழுக்க வேப்ப மரங்களும் புளிய மரங்களும் ஊரையே தன் நிழலில் வைத்திருந்தன. அதோடு கிராமங்களில் முக்கியமாகக் குடிசை வீடுகளே இருந்தன. குடிசை வீடு இருக்கத் தவறினாலும் தவறலாம்; ஆனால், அந்த வீட்டுக்கு முன்னால் ஒரு மரமிருக்கத் தவறாது.

அதுவும் வேப்பரங்களே இருக்கும். முக்கியமாக நிழலில் உட்கார, குழந்தைகளைத் தொட்டில் கட்டி போட, வேப்ப முத்து பெறக்கிச் சேர்க்க, ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்க்க, கிழிந்துபோன சேலையையோ சட்டையையோ ஒருவர் பிடித்துக்கொள்ள ஒருவர் தைக்க என இப்படி நிறைய வேலைகளைச் செய்வதற்கு மட்டுமின்றி கோழிகள் அடைவதற்கு, அம்மை நோய் விளையாடினால் வாசலில் கட்டுவதற்கு, ஆட்டுக்குட்டி களுக்குக் கெளை ஒடித்துக் கட்டுவதற்காக எனப் பலவித தேவைகளுக்காகவும் வீட்டுக்கொரு மரம் தவறாமல் வளர்த்தார்கள்.

இந்த வேப்பங் கெளையைத் தின்று வளரும் ஆடுகளின் கறிக்கு நல்ல கிராக்கி. ஏனென்றால், அதன் உடலில் ஒரு நோய் நொடி இருக்காது. அதோடு அதன் உடம்பில் ஒரு பூச்சிப்பொட்டு இருக்காதென்று அந்த ஆடுகளை வெட்டுவதற்கு ஒரு மாதம், இரண்டு மாதத்துக்கு முன்பே எனக்கு ஒரு எடை, எனக்கு ரெண்டு எடை என்று கறிக்குச் சொல்லிவைத்துவிடுவார்கள். பொதுவாகக் காலில் அடிபட்டு வீங்கிக் கிடந்தால் ஆட்டுப் புழுக்கையைப் பெறக்கிச் சிறிது பசுமாட்டுக் கோமயம் விட்டுக் கரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து வீக்கத்தில் போடுவார்கள். மறுநாள் ஆறிவிடும். வேப்பங் கொழையைத் தின்னும் ஆட்டுப்புழுக்கைக்கு இன்னும் கிராக்கியாயிருக்கும்..

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x