Published : 18 Aug 2019 10:24 AM
Last Updated : 18 Aug 2019 10:24 AM

வாழ்ந்து காட்டுவோம் 19: கலக்கம் இனித் தேவையில்லை

ருக்மணி

உடல் குறைபாடு தகுதிக் குறைபாடு அல்ல என்பதை உணர்ந்துதான் மாற்றுத் திறனாளி களும் மற்றவருக்கு இணையாக வாழ வேண்டும் என்பதற்காக அரசால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. மக்களுக்கு உடல் குறைபாடு ஏற்படக் கூடாது என்பதற்காகச் சில திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. அவயங்கள், அவற்றின் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்றவை அதில் முக்கியமானவை.

தவிர்க்க முடியாத காரணங்களால் உடல் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அவர்களின் மறுவாழ்வுக்கான பணி களை மேற்கொள்ளுதல், சிறப்புக் கல்வி அளித்தல், மறுவாழ்வுப் பணிகளுக்கென நிபுணர்களைத் தயார் படுத்தல், உதவிக் கருவிகளை வழங்குதல், கல்வி, சுய வேலை வாய்ப்பு போன்றவற்றின் மூலம் பொருளாதார மேம்பாடு அடையச் செய்தல், தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றையும் அரசு செயல்படுத்திவருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு செயல் படுத்துகிற நலத் திட்டங்கள் இரு வகைப்படும். ஒன்று, மாற்றுத் திறனாளி களுக்குத் தேவைப்படும் உபரணங்களான காலிப்பர்கள், ஊன்றுகோல், கறுப்புக் கண்ணாடி, மடக்குக் குச்சி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, காதொலிக் கருவி போன்றவற்றை இலவசமாக வழங்குதல்.
இரண்டாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பலவித திட்டங்களை அதாவது கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, சுய தொழில் தொடங்க நிதியுதவி, பயணச் சலுகை, தொழிற்பயிற்சி உதவித்தொகை போன்றவற்றைச் செயல்படுத்துதல்.

மனவளர்ச்சி குன்றிய

இளம் சிறுவர்களுக்கான ஆரம்பப் பயிற்சி மையம் (0-6 வருடங்கள்) மூளை முடக்கு வாதம், மனவளர்ச்சி குறைவு, ஆட்டிஸம் போன்ற பாதிப்புள்ள குழந்தைகள் இலவசப் பயிற்சிக்குத் தகுதி உடைய வர்கள். இலவசத் தசைப்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வியுடன் சிற்றுண்டியும் வழங்கப்படும்.

பராமரிப்பு உதவித்தொகை

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட வர்கள், கடும் உடல் மாற்றுத் திறனாளிகள் - ஊனத்தின் அளவு 60 சதவீதத்துக்கு மேல் (மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும்) ஆகியோருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அதன் பின்பு வட்டாட்சியர் அலுவலகங்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.

தொழிற்பயிற்சிகள்

* கை, கால் ஊனமுற்ற, காது கேளாத நபர்களுக்குக் கணினி பயிற்சி. இவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வுக்கூடத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவதுடன் பொருட்களையும் கருவிகளையும் தாமே எடுத்துப் பயன்படுத்தும் உடல் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* வருமானச் சான்றும் தேசிய அடையாள அட்டையும் பெற்றிருக்க வேண்டும்.
* அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருட இலவசப் பயிற்சி அளிக்கப்படும். மாதம் 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், செவித்திறன் - பார்வைத்திறன் அளவிடுவோர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, தாட்கோ அலுவலர், மகளிர் திட்ட சுய உதவிக்குழு, வேலைவாய்ப்புத் துறை, போக்குவரத்துத் துறை எனப் பல துறைகள் இணைந்து செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

வங்கிக் கடன்

* மாற்றுத் திறனாளி என்பதற்கு அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
* 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
* வங்கிகளில் ஏற்கெனவே கடன்பெற்று நிலுவைத் தொகை இல்லாதவராக இருக்க வேண்டும்.
* சுயதொழில் செய்வதற்குப் பரிந்துரையின் பேரில் 75, 000 ரூபாயும் 25, 000 ரூபாய் மானியமும் வழங்கப்படும்.
* ஆவின் பாலகம் அமைக்க 25, 000 ரூபாய் மானியத்துடன் வங்கிக் கடன் பெற பரிந்துரை வழங்கப்படும்.
* மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் NHFDC (National Handicapped Finance Development Corporation) திட்டத்தின்கீழ் வட்டியில்லா வங்கிக் கடன் வசதி.
* படித்த இளைஞர்களுக்கு UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் கீழ் 30 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் (www.msmeonline.tn.gov.in/uyegp).
* பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் கிராமப்புற மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீதமும் நகர்ப்புற மாற்றுத்திறனாளி களுக்கு 30 சதவீதமும் மானியத்துடன் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் (www.kviconline.gov.in).
* ஆதி திராவிட மாற்றுத்திறனாளி களுக்குச் சுயதொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியுதவியும் தாட்கோ மூலம் 20,000 ரூபாயும் வழங்கப்படுகின்றன.

இதர நிதியுதவிகள்

* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த, வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 600 முதல் 1000 ரூபாய் வரை பத்து ஆண்டுகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
* தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் அனைவருக்கும் வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது.
* ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம் இலவசப் பேச்சுப் பயிற்சி, ஆக்குபேஷனல் தெரபி, இயன்முறைப் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன.
* தசைச்சிதைவு நோயாலும் தொழுநோயாலும் பாதிக்கப்பட்டோருக்குப் பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது.
* மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள, 18 முதல் 45 வயது வரையுள்ள, கல்லூரி மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்கள், இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
* 18 வயதுக்கு மேல் 45 வயது வரையுள்ள கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் செவித்திறன் குறையுடையோருக்கும் தையல் பயிற்சி முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கும் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
* தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சுகப்பிரசவத்துக்கு 6,000 ரூபாயும் பிரசவ அறுவை சிகிச்சைக்கு 9,000 ரூபாயும் கருக்கலைப்பு/கருச்சிதைவுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
* மூக்குக் கண்ணாடிக்கு ரூ.500, இயற்கை மரணம் ஈமச்சடங்குக்கு ரூ.17,000, விபத்து நிவாரணம் ரூ.25,000, விபத்து மரணம் ரூ.1,00,000 என வழங்கப்படுகிறது.

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x