Published : 18 Aug 2019 10:24 AM
Last Updated : 18 Aug 2019 10:24 AM

பெண்கள் 360: ஒன்பது வயதில் தூதர் பதவி

தொகுப்பு: முகமது ஹுசைன்

ஒன்பது வயதில் தூதர் பதவி

மணிப்பூர் மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காக்சிங் மாவட்டத்தின் ஹியாங்லாம் நகரைச் சேர்ந்தவர் ஒன்பது வயது சிறுமி வாலண்டினா. நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் நட்டு வைத்த இரண்டு குல்மொஹர் மரங்கள், சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டதால் மனமுடைந்து அழுதார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியது. மாநில முதல்வர் கவனத்துக்கும் சென்றது.

இயற்கை மீது வாலண்டினா கொண்ட பற்று காரணமாக மாநில அரசின் மணிப்பூர் பசுமை இயக்கத்தின் ‘பசுமைத் தூதரா’க முதல்வர் பைரன் சிங் அறிவித்தார். மேலும், 20 மரக்கன்றுகளையும் பரிசாக அளித்தார். “சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிப் பலரும் கவலை கொள்வதில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. வருங்காலத்தில் வனத்துறை அதிகாரி ஆக விரும்புகிறேன். மேலும், மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்” என்கிறார் வாலண்டினா.

ஆண்களின் சொத்தல்ல பெண்கள்

ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370-வது பிரிவை மத்திய அரசு விலக்கியதிலிருந்து, காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்வது குறித்துப் பலர் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். ஹரியாணா மாநில பா.ஜ.க. முதல்வர் மனோகர் லால் கட்டார், ஃபதேஹாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, “மோசமான பாலின விகிதம், பெண் கருக்கொலை ஆகியவற்றைக் கொண்ட மாநிலம் ஹரியாணா.

இந்த மோசமான பாலின விகிதம் எதிர்காலத்தில் எவ்வாறான சிக்கலை உருவாக்கும் என்பதை இளைஞர்களும் முதியவர்களும் புரிந்துகொள்ளலாம். தற்போது காஷ்மீர் பெண்களைத் திருமணம் செய்வதற்கான தடை நீங்கியுள்ளதால், காஷ்மீர் மாநிலப் பெண்களைத் திருமணத்துக்கு அழைத்து வரலாம்” எனக் கூறினார். அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ஹரியானா முதல்வர் கட்டார், காஷ்மீர் பெண்கள் குறித்துக் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. பலவீனமான, பாதுகாப்பற்ற, பரிதாபகரமான மனிதனின் மனதில் ஆண்டுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். பயிற்சி என்ன செய்யும் என்பதைத்தான் அவருடைய கருத்து காட்டுகிறது. பெண்கள் ஆண்களுடைய சொத்தல்ல” என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் வெளியேற்றப்பட்ட பெண் எம்.பி.

கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் சுலெய்கா ஹாசன். இவருக்கு மூன்று குழந்தைகள். தன்னுடைய ஐந்து மாதக் குழந்தையை மற்றவரிடம் ஒப்படைக்க முடியாமல் வேறு வழியின்றி நாடாளுமன்றத்துக்கு அழைத்துவந்துள்ளார். கையில் குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தவரை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதை மீறி உள்ளே நுழைந்தவரை நாடாளுமன்றத் துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். சுலெய்கா குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு வந்ததற்கு அங்கிருந்த ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர்.

இது குறித்து சுலெய்கா கூறுகையில், “நான் என் குழந்தையை முடிந்த அளவுக்கு நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரக் கூடாது என்றுதான் முயன்றேன். ஆனால், இன்று என்னால் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை நாடாளுமன்றத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள காப்பகம் இருந்தால், நான் குழந்தையை அங்கே விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்குச் செல்லும் அனைத்துப் பெண்களும் இந்தத் துயரத்தை எதிர்கொள்கிறார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக ஆட்களை நியமிக்க அனைவராலும் முடியாது” என்று தெரிவித்தார்.

திறமையை மறைக்க முடியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் ராணாகத் ரயில் நிலையத்தில் சினிமா பாடல்களைப் பாடி பிச்சை எடுத்து வந்தார் ரானு மண்டல் என்ற பெண்மணி. இவரது குரல் பிரபல இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரின் குரலைப் போலவே இருக்கும். ஒருநாள் இவர் பாடுவதை ஒரு பயணி தற்செயலாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட, அது வைரலானது. லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் அந்தப் பாடகியின் குரலைக் கேட்டு வியந்தனர்.

இந்நிலையில் பிரபலப் பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் படத்தில் ரானுவுக்கு வாய்ப்பு வழங்கினார். அந்தப் பாடல் பதிவுக்காக ரானு மண்டல் ஒரு நட்சத்திரப் பாடகி போல தயார்செய்யப்பட்டார். அந்தப் படங்களே தற்போது இணையத்தில் சுற்றி வருகின்றன. அந்தப் படங்களைப் பகிரும் பலரும் ரானுவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்புக்கு ‘அம்மா பேட்ரோல்’

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க
ஏ.டி.ஜி.பி. தலைமையில் ‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு’ எனும் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இவை இணைக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே விசாரிக்கும். இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு எனப் பிரத்யேகமாக ‘அம்மா பேட்ரோல்’ எனும் பிங்க் நிற ரோந்து வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x