Published : 17 Aug 2019 12:03 PM
Last Updated : 17 Aug 2019 12:03 PM

பூச்சிக்கொல்லி தெளிக்கும் விமானம்

த.சத்தியசீலன்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவுப் பொருட்களை உற்பத்திசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்க முனையும்போது பூச்சி, நோய் தாக்குல் போன்ற பாதிப்புகளால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களில் தெளிக்க வேண்டியது அவசியம். இதற்காக கைத்தெளிப்பான்கள் கொண்டுதான் உழவர்கள் பூச்சிக்கொல்லியை மருந்தைத் தெளித்துவருகின்றனர். இதற்கு அதிக உழைப்பும் நேரமும் செலவிடப்படுகிறது.

கைத்தெளிப்பானால் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும்போது, அம்மருந்து பூச்சிகளை மட்டுமின்றி அப்பணியில் ஈடுபடும் உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. மேலும் இது நன்மை விளைவிக்கும் பூச்சிகளையும் அழிக்கிறது. இம்முறைக்கு மாற்றாக சமீபகாலமாக ட்ரோன் (Drone) எனப்படும் குட்டி விமானங்களைப் பயன்படுத்திப் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் புதிய தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது.

பலவித வடிவங்கள்

உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் ட்ரோன் பலவிதங்களில் வடிவமைக்கப்படுகிறது. எளிதாகக் கையாளும் வகையில் இலகுரகமாகத் தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இது 10 லிட்டர், 5 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூக்கிக் கொண்டு பறக்கும் திறன் கொண்டது. ட்ரோன் பறப்பதற்குப் பயன்படும் வகையில் 6 இறக்கைகள் (leafs) கொண்ட விசிறி (fan) பொருத்தி இயக்கப்படுகிறது. இயக்க சக்தி 50 வாட். இதன் பேட்டரி 15-20 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் வகையில் தயாரிக்கப்படுகிறது. பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் வகையில், சக்தி வாய்ந்த தெளிப்பான் (Power Sprayer) பொருத்தப்பட்டுள்ளது. பயிர்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும் கேமராவும் இதில் உண்டு.

ஆண்ட்ராய்டு போனில் எம்.ஜி. என்ற செயலியின் கட்டளைப்படி, ரிமோட் மூலமாக இயங்கும். முதலில் பூச்சிக்கொல்லியை கலக்கி வைத்துக் கொண்டு, ‘ட்ரோன்’ கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டேங்க்கை (tank) நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆண்ட்ராய்டு போனில் செயலியைப் பயன்படுத்தி, ரிமோட் மூலமாக இயக்கிப் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லையைத் தெளிக்கலாம்.

ஆய்வுசெய்யும் ட்ரோன்

ஒரு ஏக்கருக்கு 20 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். 15 நிமிடத்தில் 3 ஏக்கர் நிலத்துக்கு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கலாம். “நாளொன்றுக்கு ஒரு நபரால் 10 ஏக்கர் நிலப்பரப்புக்கு இந்த ட்ரோனைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லியைத் தெளிக்க முடியும். இதனால் கணிசமான அளவு தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றைச் சேமிக்க முடியும். தேவைக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி தெளிப்பதையும் கட்டுப்படுத்த முடியும்” என்கிறார் கோவையில் ட்ரோன் தயாரிக்கும் தனியார் நிறுவன பொறியாளர் எஸ்.சிவச்சந்திரன்.

ட்ரோன், பயிர்களுக்குப் பூச்சிமருந்து தெளிப்பது மட்டுமின்றி, வயலைத் துல்லியமாக ஆய்வு செய்து வீடியோ எடுத்துக் காட்டவும் செய்யும். இதனால் பயிர் வளர்ச்சியை நாம் கண்காணிக்க முடியும். ஏதேனும் பகுதியில் பயிர் வளர்ச்சி குன்றியிருந்தால் அப்பகுதியில் தனிகவனம் செலுத்தி பயிர்ப் பராமரிப்பு முறையைப் பின்பற்றுவதன் மூலம் அதிக விளைச்சல் பெற முடியும் என மேலும் இதன் பயன்பாடு குறித்துச் சொன்னார் சிவச்சந்திரன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் எம்.கல்யாணசுந்தரம், ட்ரோன் இன்றைய காலத்தில் அவசியமான ஒரு உழவர் கருவி எனக் குறிப்பிடுகிறார்.

“பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி தெளிப்பது உழவர்களுக்கு மிகவும் சவாலான பணி. குறிப்பாகத் தோட்டக்கலைப் பயிர்களான பாக்கு, தென்னை, மா போன்ற பயிர்களில் பூச்சி, நோய் ஆகிய தாக்குதல்களுக்கு மருந்து தெளிப்பது மிகவும் கடினம். இதற்கு ட்ரோன் சிறந்த தீர்வாக இருக்கும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் மருந்து தெளிக்க முடியும். கைத்தெளிப்பான் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது தேவைக்கு அதிகமாக தெளித்து வீணடிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகளான தேனி, பட்டாம்பூச்சி போன்றவை அழிகின்றன.

10 லிட்டர் ட்ரோன் ரூ.6 லட்சம், 5 லிட்டர் ட்ரோன் ரூ.5 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது. இவ்வளவு முதலீடுசெய்து ட்ரோன் வாங்கி பயன்படுத்துவது அனைத்து உழவர்களுக்கும் சாத்தியமானதல்ல. அதேநேரத்தில் பயன்படுத்தாமலும் இருக்க இயலாது. எனவே கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், வேளாண்மைத் துறையில் ட்ரோன் வாங்கி உழவர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கலாம். மேலும் அதை இயக்குவதற்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” என ட்ரோன் குறித்து மேலும் குறிப்பிட்டார் கல்யாணசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x